காஷ்மீர், உ.பி., பாலியல் பலாத்கார சம்பவங்கள்: ‘இரக்கமுள்ள நாடுதானா?’- கவுதம் கம்பீர், சானியா மிர்சா

 

காஷ்மீரின் கதுவா நகரில் 8 வயது சிறுமியும், உத்தரப் பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் இளம்பெண்ணும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரும், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் கண்டனம் தெரிவித்து, ஆவேசமாக கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரேதசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ ஒருவரும், அவரின் கூட்டாளிகளும் சேர்ந்து தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக 18 வயது இளம்பெண் ஒருவர் புகார் கூறினார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டபெண்ணின் தந்தையை விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில் போலீஸ் நிலையத்தில் அவர் மர்மமாக இறந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாஜக எம்எல்ஏமீது வழக்குப் பதிவு செய்து, சிபிஐ வசம் மாற்றப்பட உள்ளது.

இதேபோல, காஷ்மீர் மாநிலம் கதுவா நகரில் 8 வயது முஸ்லிம் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கும் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பலை உருவாகியுள்ளது.

இந்த இரு சம்பவங்களையும் கண்டித்து ஐபிஎல் டெல்லி அணியின் கேப்டன் கவுதம் கம்பீரும், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் ஆவேசமாக ட்வீட் செய்துள்ளனர்.

கிரிக்கெட் வீரர் கம்பீர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது:

”இந்தியர்களின் மனசாட்சி உன்னாவ் நகரிலும், கதுவாவிலும் பலாத்காரம் செய்யப்பட்டுவிட்டது. இப்போது, நம்முடைய சட்டங்களையும், செயல்படுத்தும் முறைகளையும் கொலை செய்து இருக்கிறது. தவறு செய்தவர்கள் இந்த நிர்வாக முறையால் தண்டிக்கப்படுவார்களா?. நான் சவால் விடுகிறேன்.

அதிலும் குறிப்பாக கதுவாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக களமிறங்கும் வழக்கறிஞர் தீபாகா சிங் ரஜாவத் தடுக்கப்படுகிறார். ஏன் அவருக்கு இத்தனை தடைகள் விதிக்கப்படுகின்றன. வழக்கறிஞர்களை நினைத்து வெட்கமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி உங்களில் ஒருவரின் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள்?”

இவ்வாறு கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது நாடுதானா?

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், ”இது உண்மையில் இரக்கமுள்ள நாடுதானா, நான் மட்டுமல்ல இந்த உலகமும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறது. நம்முடைய இனம், பாலினம், மதம் ஆகியவற்றை மறந்து கதுவாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமிக்கு நியாயம் கிடைக்க நாம் குரல் கொடுக்காவிட்டால், நாம் இந்த உலகில் வேறு எதற்கு நாம் ஆதரவாக குரல்கொடுக்கப் போகிறோம். மனிதநேயத்துக்கு கூட ஆதரவாக நாம் பேசமாட்டோமா.

கதுவாவில் கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்கவேண்டும். நம்நாட்டின் நீதித்துறை மீதும், நீதிபரிபாலன முறை மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அது குலைந்துவிடக்கூடாது. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்” என சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.