கிழக்கு அலெப்போவில் வெளியேற்றம் தொடர்கிறது

சிரியாவின் அலெப்போ நகரத்தில், எதிரணிப் போராளிகளின் கட்டுப்பாட்டில் காணப்படும் கிழக்குப் பகுதிகளிலிருந்து, பொதுமக்களில் பலர், இன்று வெளியேற்றப்பட்டனர். இன்று காலை முதல் இடம்பெற்ற இந்த நடவடிக்கைகளில், சுமார் 4,500 பேர் வெளியேற்றப்பட்டனர் என, துருக்கி அறிவித்தது.

முன்னதாக, கிழக்கு அலெப்போவிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட வேண்டுமாயின், போராளிகளால் சூழப்பட்டுள்ள ஃபுவா, கெப்ரயா நகரங்களிலிருந்தும் பொதுமக்கள் வெளியேற்றப்பட வேண்டுமென்ற நிபந்தனையை நிறைவேற்றுவதற்காகச் சென்ற 5 பஸ்கள் மீது, ஞாயிற்றுக்கிழமையன்று தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்த, அன்றைய தினம், உத்தியோகபூர்வமாக, பொதுமக்கள் வெளியேறியிருக்கவில்லை. இந்தத் தாக்குதலை, போராளிகளே மேற்கொண்டதாக அரசாங்கமும், பொதுமக்களே மேற்கொண்டதாகப் போராளிகளும், மாறி மாறிக் குற்றஞ்சாட்டியிருந்தனர். ஆனால், அந்தத் தடைகளுக்கு மத்தியில், சுமார் 350 பேர், வெளியேறியிருந்ததாகக் கணிக்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க,இன்று காலை, இந்தப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டன. கிழக்கு அலெப்போவில் நிலவும் பனிபடர்ந்த, கடுமையான வானிலைக்கு மத்தியில், அங்கிருந்து தாங்கள் வெளியேற்றப்படும் ஆர்வத்தில், வீதிகளில் தங்கியிருந்த மக்களுக்கு, இன்று வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், இவ்வாறு வெளியேறியோரின் உடல்நிலை, சிறப்பான நிலையில் காணப்படவில்லை என, மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவர்களது வெளியேற்றம், பல மணிநேரங்களால் தாமதிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே, இந்நிலை ஏற்பட்டது.

இதன்படி, நள்ளிரவு நேரத்திலிருந்து 4,500 பேர் வெளியேற்றப்பட்டதோடு, கடந்த வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை மூலம், 12,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. ஃபுவா, கெப்ரயா நகரங்களிலிருந்து, சுமார் 500 பேர் வெளியேறியதாக, கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.