குடிநீருக்காக அலையும் மக்களை கவனிப்பார் யாருமில்லை!!!

வட்டவான் கிராமத்தில் 350 குடும்பங்கள் வாழ்கின்றன. இவர்கள் சுனாமி அனர்த்தத்திற்கு முன்னர் வட்டவான் கிழக்கு கடற்கரைப் பிரதேசத்தை அண்டிய பகுதியில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் தங்களுடைய ஜீவனோபாயத் தொழிலாக மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு என்பவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது இவர்கள் வாழும் பகுதியில் இருந்து பெறப்படும் நீர் உப்புநீராகவே காணப்படுகின்றது. அதிலும் தற்போது வட்டவான் கிராமத்தில் காணப்படும் பொதுக் கிணறுகளில் தண்ணீர் வற்றிய நிலையில் காணப்படுகின்றது.
வட்டவான் பாடசாலைக் கிணற்றில் மாத்திரம் ஓரளவு நீர் காணப்படுகின்றது. அதுவும் உப்புநீராகக் காணப்படுவதாக மக்கள் தெரிவிப்பதுடன், குறித்த கிணற்றில் நீரை பெறுவதாயின் அதிகாலையில் வர வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளதாகவும் கூறுகின்றனர்.

பாடசாலை செல்லும் மாணவர்களின் சீருடைகளைக் கழுவுவதற்கு நீர் இன்மையால் மாணவர்கள் அழுக்கான உடைகளுடன் பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ளது.
வட்டவான் பகுதியில் வாகரை பிரதேச சபையினால் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் கொள்கலனில் நீர் காணப்படுவதில்லை. மாதத்தில் இரண்டு முறை மாத்திரம் நீர் வழங்கப்படுவதாகவும், சில இடங்களுக்கு மாத்திரம் முழுமையாக நீர் வழங்கப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கு வாழும் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்காக ஓட்டமாவடி பிரதேசத்திற்குச் செல்கின்றனர். பணம் கொடுத்து நீரைப் பெற்றுக் கொள்ளும் நிலையில் இவர்கள் உள்ளனர். வறிய நிலையில் உள்ள மக்கள் குடிநீருக்காக பெரிதும் கஷ்டப்படுகின்றனர்.

“எமது கிராமத்திற்கு வருகின்ற அரசியல்வாதிகளிடம் பல தடவை இங்குள்ள தண்ணீர்த் தட்டுப்பாடு நிலைமை தொடர்பாகவும், இதனால் எமது பிள்ளைகள் எதிர்நோக்கும் கஷ்ட நிலைமை தொடர்பாகவும் தெரிவித்தும் யாரும் கவனத்தில் கொள்ளவில்லை.தண்ணீர்ப் பிரச்சினையை தீர்த்துத் தருவதாக அரசியல்வாதிகள் எம்மிடம் வாக்குறுதி வழங்கிச் செல்கின்றனர். ஆனால் அந்த இடத்திலேயே அதனை மறந்து விடுகின்றனர். இந்த விடயம் தொடர்பில் பல தடவை அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை” என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தங்களுடைய குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்கு சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

ஓட்டமாவடி பிரதேசம் வரை கொண்டு வரப்பட்டுள்ள சுத்தமான குழாய்நீர் வழங்கல் திட்டத்தை விஸ்தரித்து எமது பகுதிக்கும் தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்னு மக்கள் வேண்டுகின்றனர்.

(Selvam Kanda)