கூட்டமைப்பின் உறுப்பினராக இருப்பது புலிகளின் அமைப்பிற்கு இணையானது – கனேடிய நீதிமன்றம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினராக இருப்பது விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருப்பதற்கு இணையானது என கனேடிய சமஷ்டி நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இருந்து கனடாவுக்கு சென்ற விஜயரத்னம் சீனியன் என்ற இலங்கையர் கனடாவில் அகதி அந்தஸ்து கோரி சமஷ்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு தொடர்பில் நீதிபதி வழங்கிய தீர்ப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜயரத்னம் சீனியன் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவரது மனுவை ஆராய்ந்த சமஷ்டி நீதிமன்றம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பு எனக் கூறியுள்ளது.

இதனால், விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அதன் அரசியல் அமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினராக இருப்பது விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருப்பதற்கு இணையானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுடன் இதனால் விஜயரத்னம் சீனியன் கனடாவில் புகலிடம் பெற தகுதியற்றவர் எனவும் தீர்ப்பில் கூறியுள்ளது.

எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பயங்கரவாத அமைப்பாக நீதிமன்றம் அறிவித்தமைக்கு எதிராக சீனியன் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.