“கூட்டமைப்பை பிரிக்க சம்பந்தனும் துணை?”

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுப்படுத்த அல்லது அங்கத்துவக் கட்சியை ஒதுக்குவதற்கு தமிழ் அரசுக் கட்சி எடுக்கும் முயற்சிகளுக்கு, கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கவனத்தில் கொள்ளாமல் இருப்பதைப் பார்க்கும் போது, அவரும் அதற்கு துணை போகின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது’ என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் 1ஆம் திகதி நடைபெற்ற மே தினக் கூட்டமானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என நடத்தப்பட்டாலும், அங்கு தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் மாத்திரமே அழைக்கப்பட்டிருந்தனர். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது தொடர்பில் சிவாஜிலிங்கத்திடம் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர், ‘நடைபெற்று முடிந்தது, தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வாகும். அவர்கள் கூறுவது போல, அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்வு அல்ல. பங்காளிக்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்காமல் தமிழரசுக் கட்சி மாத்திரம் இதனை ஒழுங்கு செய்திருந்தது’ என்றார்.

‘நிகழ்வில் உரையாற்றியிருந்த எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படாத வண்ணம் ஒற்றுமையாகச் செயற்படவேண்டும் எனக்கூறியிருந்தார். நாங்களும் அதனை தான் விரும்புகின்றோம். ஒன்றுபட்டு தான் சிங்கள ஆட்சியாளர் மற்றும் சர்வதேசத்திடம் நீதி கோர முடியும். ஒன்றுபடும் விடயத்தை செயலிலும் காட்டவேண்டும். கூட்டமைப்பை பிளவுபடுத்த தமிழ் அரசுக் கட்சி எடுக்கும் நடவடிக்கைகளை சம்பந்தன் கண்டும் காணாமலும் உள்ளார்’ என அவர் கூறினார்.