‘கேப்பாபுலவு உறவுகளுடன் கைகோர்ப்போம்’

“கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்துக்கு இன, மத பேதங்களை மறந்து ஆதரவளித்து, அந்த மக்களுக்குரிய காணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு சகலரும் முன்வரவேண்டும்” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். “நல்லாட்சி அரசாங்கம், மௌனம் கலைந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் காணிகளை வழங்குவதற்கு முன்வரவேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக, நேற்று (12) இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது, கருத்துரைகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,“கேப்பாப்புலவு மக்கள், கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் தங்களுக்குச் சொந்தமான காணிகளை வழங்குமாறு கோரி வீதிகளில் நின்று, அறவழிபோராட்டத்தை கடந்த 13 நாட்களாக மேற்கொண்டுவருகின்றனர்.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது முள்ளியவாய்க்கால் வரையில் சென்று மிகப்பெரும் இழப்புகளைச் சந்தித்தவர்கள்தான் இந்த கேப்பாபுலவு மக்கள். மெனிக்பாம் முகாமில் இருந்தபோதும் பல்வேறு வேதனைகளையும் கஷ்டங்களையும் சந்தித்தவர்களே இந்த மக்கள்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக மீள்குடியேற்றம் என்ற பெயரில் குடியேற்றப்பட்டனர். அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் எந்தவித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

நல்லாட்சி அமைக்கப்பட்டு ஒரு வருடத்தில், கேப்பாபுலவிலுள்ள ஒருவர் தமது காணி தமக்கு கிடைக்கவேண்டும் என்று போராட்டம் நடாத்தினார். அது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர், ஜனாதிபதிக்கு அறிக்கையொன்றைக் கையளித்தபோதிலும் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் அந்த மக்கள் ஜனவரி 31ஆம் திகதியில் இருந்து தொடர்ச்சியான போராட்டத்தினை நடத்திவருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் 243 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் நாங்கள் கேட்டுக்கொண்ட காணிகள் விடுவிக்கப்படவில்லை.

சுமார் 524 ஏக்கர் காணிகள் விமானப்படைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ளன. சூரபுரம் பகுதியில் 59 குடும்பங்களுக்குரிய காணிகளும் கேப்பாபுலவில் 145 குடும்பங்களின் வாழ்வாதார, குடியிருப்பு காணிகள் விமானப்படையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.