சம்பந்தன் பகிடி விடுகிறார். அரசுக்கு கடும் எச்சரிக்கை

எங்களுடைய மக்களின் காணிகளை யாருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
கடந்த 30 ஆண்டுகளாக தமது சொந்த காணிகளில் குடியேற முடியாது தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.


அதன்படி, இன்றைய தினம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் இராணுவத்தளபதி, ஏனைய படைகளின் தளபதிகள் மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இராணுவத்தளங்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தலாம். அதற்கான ஆயுதங்கள் அவர்களிடம் இருந்தது என தெரிவித்து அதிபாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டன.

தற்போது யுத்தம் முடிந்துவிட்டது. விடுதலைப் புலிகளும் இல்லை, ஆயுதங்களும் இல்லை. ஆனாலும் யுத்தம் முடிந்த பின்னரும் பொது மக்களின் காணிகளை படையினர் கைப்பறியுள்ளனர்.
எனினும், அந்த மக்களின் காணிகள் உரியவர்களிடம் கொடுக்கப்படவேண்டும் என்பதை இன்றைய சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமும், இராணுவ தளபதியிடமும் வலியுறுத்தியிருந்தோம் என இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய இராணுவத்தளபதி, ‘படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை. அத்துடன், பலாத்காரமாக நாங்கள் எந்த காணிகளையும் வைத்திருக்கவில்லை. இது குறித்து முடிவெடுக்க வேண்டியது சிவில் அதிகாரமே. ஜனாதிபதி காணிகளை விடுவிக்க சொன்னால் நாங்கள் காணிகளை விடுவிக்க தயாராக இருக்கின்றோம். அதனை மீறி எங்களால் செயற்பட முடியாது’ என இராணுவத்தளபதி குறிப்பிட்டதாக இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மேலும், வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டங்கள் குறித்தும் இன்றைய சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி, கேப்பாபுலவில் ஒருதொகுதி காணியை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.
இந்த விடயம் தொடர்பில் அங்கு உள்ள இராணுவ அதிகாரிகளுக்கும், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிவமோகன் மற்றும் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று 19ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பின் போது அரசாங்க அதிபர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து அங்குள்ள நிலமைகள் குறித்து ஆராயப்படும். இதனையடுத்து கேப்பாபுலவு காணிவிடுவிப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். மேலும், வலிகாமத்தை பொருத்தவரை 4500 ஏக்கர் காணி படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. காணிகளின் கணிசமான அளவு விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 20ஆம் திகதி மாவை சேனாதிராஜாஇ சுமந்திரன் உள்ளிட்டவர்கள் அங்கு சென்று நிலமைகள் குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பார்கள் என இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.