சிரிய யுத்தநிறுத்தத்தை வரவேற்கிறது ஐ.நா பாதுகாப்புச் சபை

சிரிய சிவில் யுத்தத்திலுள்ள யுத்தநிறுத்தமொன்றை, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை நேற்று (31) வரவேற்றுள்ளது. எனினும், யுத்தநிறுத்த மீறல்கள் தொடருமானால், யுத்தநிறுத்தத்தை கைவிடவுள்ளதாக போராளிக் குழுக்கள் எச்சரித்துள்ளன. ஏறத்தாழ ஆறு ஆண்டுகளாகத் தொடரும் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், கடந்தாண்டில் கொண்டுவரப்பட்ட மூன்றாவது யுத்தநிறுத்தத்தை வரவேற்கும் தீர்மானத்தை, 15 அங்கத்தவர்களைக் கொண்ட பாதுகாப்புச் சபை, ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் இடம்பெற்ற கூட்டத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

ரஷ்யா, எதிர்த்தரப்புகளுக்கு ஆதரவளிக்கும் துருக்கி ஆகிவற்றின் அனுசரணையில் ஏற்பட்ட இணக்கத்தினால் வன்முறைகள் குறைக்கப்பட்டுள்ளபோதும், சில பகுதிகளில் துப்பாக்கி மோதல்களும், விமானத் தாக்குதல்களும், ஷெல் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன.

சிரியக் கரையோர நகரமான டார்டௌஸிலுள்ள அரசாங்கக் கட்டுப்பாட்டு பகுதி, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டின் கரையோர தாயகத்திலும், இன்று (01) நள்ளிரவுக்குப் பின்னர் இடம்பெற்ற இரட்டைத் தற்கொலைத் தாக்குதல்களில், குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரச ஊடகமும், கண்காணிப்பகங்களும் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சிரியத் தலைநகர் டமஸ்கஸ்ஸுக்கு வடமேற்காகவுள்ள வாடி பராடா பள்ளத்தாக்கிலுள்ள போராளிகளை, சிரிய அரசாங்கப் படைகளும், ஈரானினால் ஆதரவளிக்கப்படும் லெபனான் ஹிஸ்புல்லா போராளிகளும் பின்னகர்த்த முயல்வதாக, “பிறீ சிரியன் ஆர்மி”-இன் பிரிவுகள் தெரிவித்துள்ளன.

இது தவிர, வாடி பராடாவில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை, இலங்கை நேரப்படி நேற்றிரவு 11.30க்கு முன்னர் நிறுத்த ரஷ்யா நடவடிக்கை எடுக்காவிட்டால் யுத்தநிறுத்தத்தை கைவிடவுள்ளதாக “பிறீ சிரியன் ஆர்மி”-இன் பிரிவுகள் தெரிவித்திருந்தன. இதனையடுத்து, குறித்த நேரத்துக்கு சற்று முன்னர் விமானத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்த எதிரணி அதிகாரிகள், இதனால் யுத்தநிறுத்தம் அமுலில் இருப்பதாகவும், ஆனால் மோதல்கள் தொடருவதாகத் தெரிவித்துள்ளனர்.