சீனாவால் இறையாண்மைக்குப் பங்கம் – வியட்னாம்

தனது இறையாண்மையையும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் உடன்பாட்டையும் சீனா மீறியுள்ளதாக, வியட்னாம், குற்றஞ்சாட்டியுள்ளது. தென் சீனக் கடலில், இரு நாடுகளுமே உரிமைகோரும், செயற்கையான தீவின் விமான ஓடுபாதையில், சீனாவில் உருவாக்கப்பட்ட விமானத்தை, கடந்த சனிக்கிழமை தரையிறக்கியமைக்காகவே, இந்தக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளர் லே ஹாய் பின்ங், அந்த விமான ஓடுபாதை, சட்டரீதியற்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், வியட்னாமின் ஸ்பிட்லி தீவுகளில் அது காணப்படுவதாகவும் தெரிவித்தார். எனினும், இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள சீனா, தங்களது இறையாண்மைக்கு அமைவானது என்று தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்குமிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்துக் கவனத்தை வெளிப்படுத்தியுள்ள அமெரிக்கா, விமான ஓடுபாதையை உருவாக்கி, அதன் மூலம் இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கு, சீனா முயலக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.