டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு செருப்பு மாலை!பெண்களே செய்த கொடூரம்.

இந்தச் சூழலில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு அப்பகுதியில் உள்ள பெண்களே செருப்பு மாலை அணிவித்து, ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூர சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
தலைநகர் டெல்லியின் கஸ்தூரிபா நகரில் 20 வயது பெண் ஒருவரை அங்குச் சட்ட விரோத மது கடத்தலில் ஈடுபட்டுள்ள சிலர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்த கொடூரம் அரங்கேறிய போது, அப்போது அங்கிருந்த பெண்கள் சிலரே ஆண்களை பாலியல் வன்புணர்வு செய்யுமாறு உற்சாகப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட அந்த பெண் கூறியுள்ளார். இந்த கொடூரத்திற்குப் பின்னர் அங்கிருந்த பெண்கள், பாதிக்கப்பட்ட அந்த 20 வயது பெண்ணை கொடூரமாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அத்துடன் நிற்காமல் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் சிலரே பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை மொட்டை அடித்து, அவருக்குச் செருப்பு மாலை அணிவித்து வீதியில் ஊர்வலமாகவும் அழைத்து வந்துள்ளனர். இது தொடர்பாக வீடியோ வெளியாகி இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் சில பெண்கள் பாதிக்கப்பட்ட அந்த 20 வயது பெண்ணை தாக்குவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை டெல்லி மகளிர் ஆணையம் கையில் எடுத்துள்ளது.

இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் அந்த பெண்ணை சந்தித்த ஸ்வாதி மாலிவால், “சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்களால் 20 வயது பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது சிலர் அப்பெண்ணின் தலை முடியை வெட்டி, முகத்தில் கருப்பு பெயிண்ட் ஊற்றி, செருப்பு மாலை அணிவித்து தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆண்கள், பெண்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்,

இதில் என்ன நடந்தது என்பது குறித்து டெல்லி மகளிர் ஆணையம் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்துப் பேசினார். அப்போது தன்னை போதைப்பொருள் மற்றும் மது கடத்தலில் ஈடுபடும் 3 பேர் வீட்டில் இருந்து கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாகத் தெரிவித்தார். மேலும் அப்போது ​​அங்கிருந்த பெண்கள் சிலர், ஆண்களை பாலியல் வன்புணர்வு செய்யத் தூண்டியுள்ளனர். இந்த கொடுமைகளைப் பார்த்துக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள் என அப்பகுதியில் இருந்த பலரும், அந்த பெண்ணை காப்பாற்றாமல் கைதட்டிக் கொண்டாடி உள்ளனர்.

அதன் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணை கொடூரமாகத் தாக்கி, அவரது தலையை மொட்டையடித்து, முகத்தில் கருப்பு பெயிண்டை ஊற்றி, செருப்புகள் மாலையுடன் அக்கம் பக்கத்தினர் நடக்க வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பாதுகாப்பை வழங்க டெல்லி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான நடவடிக்கை அறிக்கையை 72 மணி நேரத்தில் டெல்லி போலீசார் மகளிர் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கொடூர சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி கூறுகையில், “எங்கள் பகுதியில் வசித்த ஒருவர் எனது சகோதரியைக் காதலிப்பதாகக் கூறி வந்தார். இருப்பினும், அதை எனது சகோதரி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அந்த இளைஞர் கடந்த நவம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டான். தங்கள் மகனின் தற்கொலைக்கு எனது சகோதரி தான் காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர். இப்போது அவர்கள் தான் எனது சகோதரியை இப்படிச் செய்துள்ளனர்” என்றார்.

இந்தச் சம்பவத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், “”இது மிகவும் வெட்கக்கேடானது. குற்றவாளிகளுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது? சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் கவனம் செலுத்தவும், கடுமையான நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு உத்தரவிடுமாறு மத்திய உள்துறை அமைச்சரையும், துணைநிலை ஆளுநரையும் கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற கொடூரமான குற்றங்களை டெல்லிவாசிகள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் பலரும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்த டெல்லி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், இது தொடர்பாக நேற்று 4 பேரையும் இன்று ஒருவரையும் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.