துருக்கியும் ஈரானும் ரஷ்யாவும் இணைந்தன

சிரியாவில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதற்கு, துருக்கியும் ஈரானும் ரஷ்யாவும் இணைந்து, தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளன. சிரியாவிலிருந்து, தனது படைகளை ஐக்கிய அமெரிக்கா வெளியேற்றக்கூடுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், முக்கியமான இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

துருக்கியின் தலைநகர் அங்காராவில், 3 நாடுகளின் தலைவர்களும் ஒன்றுகூடிப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில், “சிரியாவின் கள நிலைமையில் அமைதியை உறுதி செய்வதற்கான எமது செயற்பாடுகளைத் துரிதப்படுத்த, அர்ப்பணிப்புடன் காணப்படுகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டது.

இணைந்து செயற்படுவதற்கான அவர்களது தீர்மானம், வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் பெரிதளவுக்குப் பயனளிக்கப் போவதில்லை. மூன்று நாடுகளும், வெவ்வேறான ஆயுதக் குழுக்களை ஆதரிப்பதோடு, அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் விடயத்திலும், 3 நாடுகளுக்கும் இடையில் முரண்பாடு காணப்படுகிறது. ஆனால், இம்மூன்று நாடுகளும் இணைந்து செயற்படுவதற்கு உறுதியளித்துள்ளமை, சிரியாவில் ஐக்கிய அமெரிக்காவின் தலையீட்டையும் ஆதிக்கத்தையும் பாதிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

சிரியாவிலிருந்து ஐ.அமெரிக்கப் படைகளை உடனே விலக்கப் போவதாக, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஏற்கெனவே அறிவித்திருந்தார். ஆனால், தற்போது அவ்விடயத்தில் கருத்து மாற்றமொன்றை வெளியிட்டுள்ள அவர், இன்னும் சிறிது காலத்துக்குப் படைகளைச் சிரியாவில் வைத்திருப்பதற்குச் சம்மதிப்பதாகவும், எனினும், நீண்டகாலத்துக்கு அவ்வாறு வைத்திருக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சிரியாவின் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. ஈராக்கிலிருந்து ஐ.அமெரிக்கப் படைகள் திடீரென விலக்கப்பட்டமை, ஈராக்கின் ஸ்திரத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், அந்நாட்டின் மூன்றிலொரு பகுதியை, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு கைப்பற்றவும் வழியேற்படுத்திக் கொண்டிருந்தது. எனவே தான், துருக்கியும் ஈரானும் ரஷ்யாவும் இணைந்துள்ளமை, முக்கியமாகக் கருதப்படுகிறது.