தூதரக பணியாளருக்கு கொழும்பில் நடந்தது என்ன? சுவிஸ் தூதரகம் உத்தியோகபூர்வ அறிக்கை

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் தனது பணியாளர் கடத்தப்பட்டமை குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2019 நவம்பர் 25 ம் திகதி தூதரகத்தின் இலங்கை பணியாளர் தொடர்பில் பாரதூரமான சம்பவமொன்று இடம்பெற்றதாக தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தூதரக பணியாளர் பலவந்தமாக கொழும்பு வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டார், காரில் ஏறுமாறு மிரட்டப்பட்டார்,அதன் பின்னர் இனந்தெரியாத நபர்களால் கடுமையான அச்சுறுத்தப்பட்டதுடன் தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு மிரட்டப்பட்டார் என தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பல பிழையான தகவல்கள் பரவுகின்றன,என தெரிவித்துள்ள சுவிஸ் தூதரகம் பின்வரும் தெளிவுபடுத்தல்களை வெளியிட விரும்புவதாக என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுவிஸ் தூதரகம் உடனடியாக உத்தியோகபூர்வமாக முறைப்பாட்டை தாக்கல் செய்ததுடன் பொலிஸ் விசாரணைக்கு ஆதரவாகவும்,விசாரணையை ஆரம்பிப்பதற்காகவும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மோசமடைந்து வரும் உடல்நிலை காரணமாக பாதிக்கப்பட்டவர் தற்போது வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை எனவும் இலங்கைக்கான சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தை சேர்ந்த அதிகாரியொருவரை சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் மறுத்துவிட்டது என குற்றச்சாட்டுகள் வெளியாகின்றன, அவ்வாறான வேண்டுகோள் எவையும் விடுக்கப்படவில்லை எனவும் சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.