நேர்மையான இடதுசாரிகளுக்கு வாக்களியுங்கள் அல்லது வாக்களிக்காது இருங்கள்

– இலங்கை கொம்யூனிஸ்டஸ்ட் ஐக்கிய கேந்திரம்

பெரிய சிங்கள முதலாளித்துவ அரசியல் கட்சிகளையும், அவற்றின் முகவர்களாக நின்று சிறிய கட்சியாக சுயேட்சையாக உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும்,  மற்றும் தமிழ், முஸ்லிம் முதலாளித்துவ கட்சி வேட்பாளர்களையும் நிராகரித்து, சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளடக்கிய சாதாரண மக்களின் அரசியல் அதிகாரத்தை கட்டி எழுப்பும் இலக்கை கொண்ட நேர்மையான இடதுசாரி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் அவ்வாறு எவரும் இல்லாதவிடத்து வாக்களிப்பதிலிருந்து விலகி இருங்கள்.

இவ்வாறு உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பாக இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கொம்யூனிஸ்டஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உள்ளூராட்சி தேர்தலினூடாக சமூக மாற்றத்தையோ, அரசு மாற்றத்தையோ, அரசாங்க மாற்றத்தையோ ஏற்படுத்த முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த மாற்றங்களுக்கான அடிப்படையை அடிமட்டத்திலிருந்து ஏற்படுத்துவது அவசியம் என்றும், சாத்தியமென்றும் கருதும் நம்பும் மக்கள் நலன் சார்ந்த சக்திகள் இந்த சமூக அமைப்பிற்குள் உள்ளூராட்சி சபைகளினூடாகவும் மக்களின் அரசியல் அதிகாரத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கலாம். அதற்கு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை பயன்படுத்த முடியும்.

இந்த நோக்கில் முதலாளித்துவ கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதில்லை. பெரிய முதலாளித்துவ கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமன்றி அவற்றின் முகவர்களாக இன, மாத, பிரதேச அடிப்படையில் இயங்கும் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் மக்களின் அரசியல் அதிகாரம் பற்றிய அக்கறை இருப்பதில்லை.

பேரினவாத மேலாதிக்கத்திற்கு அடிபணிந்துள்ள பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளும், புதிய இடதுசாரி கட்சிகள் என்பவையும் இந்த முதலாளித்துவ அமைப்பை மாற்றும் அரசியலை முன்னெடுப்பதில்லை.

இந்த முதலாளித்துவ அமைப்பை மாற்றுவதற்காக அடிமட்டத்திலிருந்து மக்களின் அரசியல் அதிகாரத்தை கட்டி எழுப்பும் இலக்கில் இயங்கும் நேர்மையான இடதுசாரி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படியும் அவ்வாறு யாரையும் அடையாளம் காண முடியாதவிடத்து வாக்களிப்பில் இருந்து விலகி இருக்கும்படி என்று நாம் கேட்டுக் கொள்கிறோம்.