பதிலடி வழங்கப்படும் – ஈரானின் புரட்சிகர காவல்படை

ஈரானில், இராணுவ அணுவகுப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 25 பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில், அத்தாக்குதலுக்கு, “பயங்கரமானதும் மறக்கமுடியாததுமான” பதிலடி வழங்கப்படும் என, ஈரானின் புரட்சிகர காவல்படையினர் எச்சரித்துள்ளனர். இத்தாக்குதலில் கொல்லப்பட்டோரில் 12 பேர், புரட்சிகரக் காவல்படையைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையிலேயே, இவ்வெச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

ஈரானின் இராணுவக் கட்டமைப்பின்படி, வழக்கமான படையினர், நாட்டின் எல்லைகளையும் உள்ளக ஒழுங்கையும் பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளனர். விசேட படைப்பிரிவாகக் காணப்படும் புரட்சிகரக் காவல்படையினர், நாட்டின் “இஸ்லாமியக் குடியரசுக் கட்டமைப்பை” காக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளனர். இதன்படி, வெளிநாடுகளின் தலையீடு, இராணுவத்தின் புரட்சிகள், வேறு ஏதாவது பிறழ்வுகளைக் கட்டுப்படுத்துவது, தமது பொறுப்பு என, புரட்சிகரக் காவல்படையினர் குறிப்பிடுகின்றனர்.

கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், ஈரானின் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதல்களுள் ஒன்றாகக் கருதப்படுவதுடன், உலக அரங்கிலிருந்து ஈரானை ஓரங்கட்டுவதற்கு, ஐக்கிய அமெரிக்காவின் அதன் வளைகுடா நாடுகளும் முயன்றுவரும் நிலையில் மேற்கொள்ளப்பட்டதால், முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையிலேயே, “குற்றவியல் பயங்கரவாதிகளின் தலைவர்கள் காணப்படும் நிலையங்கள் பற்றிய முழுமையான தகவல்களை, புரட்சிகரக் காவல்படையினர் அறிந்துள்ளனர் என்ற அடிப்படையில், பயங்கரமானதும் மறக்கமுடியாததுமான பதிலடியை, அண்மைய எதிர்காலத்தில் அவர்கள் எதிர்கொள்வர்” என, புரட்சிகரக் காவல்படையால் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்தது.

புரட்சிகரக் காவல்படையின் இக்கருத்து, ஐ.அமெரிக்காவாலும் வளைகுடா நாடுகளாலுமே, தாக்குதலாளிகளுக்கு ஆதரவு வழங்கப்பட்டது என்ற, ஈரானின் முன்னைய கருத்தை ஞாபகப்படுத்துவது போன்று காணப்படுகிறது.

ஆனால், ஈரானின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த, ஐக்கிய நாடுகளுக்கான ஐ.அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலி, தமக்கும் இத்தாக்குதலுக்கும் தொடர்பில்லை என்று குறிப்பிட்டார்.

அதேபோல், ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தனிப்பட்ட வழக்கறிஞர் றூடி ஜூலியானி, ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்படுமெனத் தெரிவித்திருந்த போதிலும், ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முயலவில்லை எனவும், ஹேலி குறிப்பிட்டுள்ளார்.