பயங்கரவாத இயக்கத்துடன் சம்பந்தனுக்கு தொடர்பு, ஆபத்தில் அரசாங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் உதவியுடன் தனது கூட்டணியை இயங்கவிடாமல் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் உறவு கொண்டிருப்பது அனுதாபம் அளிக்கும் விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இதனை தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்று அவர் அனுப்பியுள்ள கடிதமொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனநாயக கோட்பாடுகளுக்கு அமைவாகவும், அகிம்சையை கடைப்பிடித்து வந்த மிகவும் நம்பிக்கைக்குரிய கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியை, விடுதலைப் புலிகளுடன் இணைந்து இயங்க விடாது இரா.சம்பந்தன் செய்துள்ளார். அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இன்று உறவுகளை கொண்டிருப்பது தமக்கு அனுதாபமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ஆகியன சர்வதேச சமூகத்தின் மத்தியில் மிக வேகமாக நம்பிக்கையை இழந்து வருகின்றது. இதேவேளை, இலங்கை தமிழர் ஒருவரின் அகதி அந்தஸ்துக்கான விண்ணப்பம் கனேடிய நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டதாக ஆனந்த சங்கரி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தீர்ப்பு கனேடிய சமஷ்டி நீதிமன்றத்தினால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும், இலங்கை தமிழரசு கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பயங்கரவாத இயக்கமாக கருதப்படுகின்ற விடுதலைப் புலி இயக்கத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இலங்கை தமிழரசு கட்சிக்கும் ஆதரவு வழங்கிய காரணத்திற்காகவே அந்த இலங்கை தமிழரின் அகதி அந்தஸ்த்து மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ஆகிய இரு அமைப்புகளும் சர்வதேச அரங்கில் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவை என மிக விரைவில் சர்வதேசம் வெளிப்படுத்தும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான தொடர்புகள் குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டமைப்பின் உறுப்பினராக இருப்பது புலிகளின் அமைப்பிற்கு இணையானது – கனேடிய நீதிமன்றம்