புலிகளுக்கு போலி கடவுச்சீட்டை தயாரித்து கொடுத்த நபர் தாய்லாந்தில் கைது

விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கையில் இருந்து தப்பிச் செல்ல பல வருடங்களாக உதவிய டொக்டர் என அழைக்கப்படும் ஒருவரை தாய்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர். தாய்லாந்து சிறையில் இருக்கும் குற்றச் செயல்களில் மூளையாக செயற்பட்டு வந்த இந்த நபர் ஆயிரக்கணக்கானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல போலி கடவுச்சீட்டுக்களை தயாரித்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த புலனாய்வு விசாரணைகளை அடுத்தே இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாங்கொக் பாதாள உலக குற்றவாளியான இந்த நபர் 2 ஆயிரம் மற்றும் 3 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு போலி கடவுச்சீட்டுகளை தயாரித்து கொடுத்துள்ளார். தாய்லாந்தின் Chachoengsao மாவட்டத்தில் Muang என்ற பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்து இந்த நபரை கைது செய்துள்ளனர். இந்த நபர் ஈரானில் தாதியாகவும் பணியாற்றியுள்ளார்.

அந்த வீட்டில் இரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருந்த பிரான்ஸ், இஸ்ரேல், நியூசிலாந்து, ஈரான், சிரியா ஆகிய நாடுகளுக்கு 173 போலி கடவுச்சீட்டுகள், இலத்திரனியல் சிப்கள், வீசா முத்திரைகள், அச்சு சாதனங்கள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மியன்மார், லாவோஸ், கம்போடியா நாடுகளுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் தாய்லாந்து தென் கிழக்காசிய நாடுகளுடன் சிறந்த தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள இலவச வீசா அனுமதிகளை வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்தி, சர்வதேச குற்றவாளிகள் போதைப் பொருள், ஆயுதங்கள் மற்றும் மாணிக்கக் கற்களை நாடுகளில் எல்லை வழியாக கடத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.