’பின்னணியில் அரசியல் கட்சிகள் எதுவுமில்லை’

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில், அவர்களது போராட்டம் இன்று 25ஆவது நாளை எட்டியுள்ளது.

இதற்கிடையில் பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை மத்தியப் பிரதேச விவசாயிகளின் மெய்நிகர் கூட்டத்தில் உரையாற்றிய போது, ”புதிய வேளாண் சீர்திருத்தங்கள் ஒரே நாளில் உருவானதல்ல. விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இருபதாண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் முயற்சி இது; ஆனால், டெல்லியில் போராடும் விவசாயிகளை அரசியல் ஆதாயங்களுக்காக எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன” என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும்விதமாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்திவரும் சுமார் 40 தொழிற்சங்கங்களில் ஒன்றான ‘அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு’ ( ஏஐகேஎஸ்சிசி) பிரதமர் மோடி மற்றும் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோருக்கு இந்தி மொழியில் தனித்தனி கடிதங்களை எழுதியுள்ளது.