பிரபாகரனுக்கு மகிந்த 8,000 இலட்சம் ரூபா வழங்கினார் ஆதாரம் அமைச்சர் கையில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுக்கு பணத்தை வழங்கவில்லை என்றால், அதனை அச்சமின்றி நாட்டுக்கு தெரியப்படுத்துமாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்க சவால் விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும்போதே அவர் இந்தச் சவாலை விடுத்தார். மகிந்த ராஜபக்ஷ, தனது சகோதரர் பசில் ராஜபக்ஷ மற்றும் கொழும்பில் இருந்து சேறுபூசும் புலியான டிரான் அலஸும் இணைந்து விடுதலைப் புலிகளுக்கு பணத்தை வழங்கினர். இதனை நாங்களும் அறிந்திருக்கவில்லை.

மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னரும் புலிகளுக்கு பணத்தை வழங்கினார். ஜப்பான் சென்றிருந்த மகிந்த, தான் ஒரு டொலர் பணத்தையாவது கொள்ளையிட்டிருந்தால் கழுத்தை அறுத்துக் கொள்வதாக கூறியிருந்தார். விடுதலைப் புலிகளுக்கு தான் ஒரு ரூபா பணத்தை கூட கொடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துமாறு மகிந்தவுக்கு சவால் விடுக்கின்றேன். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மகிந்த ராஜபக்ஷ 8 ஆயிரம் இலட்சம் ரூபாவை வழங்கினார் என்பதற்கான கடிதங்களும் ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. தற்போது அரசியலமைப்பு மரணப் பொறி பற்றி பெரும் கதைகளை பேசி வருகின்றனர்.