பிள்ளைகளை டக்ளஸ் தருவார் என கொப்பேகடுவ கூறினார்! அவர்கள் எங்கே?!

யாழ்.அல்லைப்பிட்டியில் கொப்பேகடுவ தலமையிலான படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 600 இளைஞர்களில் என்னுடைய 3 பிள்ளைகள், என் சகோதரியின் 3 பிள்ளைகள். அவர்களை டக்ளஸ் தேவானந்தா தருவார் என கொப்பேகடுவ கூறினார். அவர்கள் எங்கே? எங்களுடைய பிள்ளைகளை மீட்டுக் கொடுங்கள் என தாயொருவர் வேண்டுகோள் விடுத்தார். மேற்கண்டவாறு திருமதி சூசைதாஸ் யேசுரட்ணம் என்ற தாய் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்துள்ளார்.

மேற்படி ஆணைக்குழு விசாரணைகள் இன்றைய தினம் வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்றிருந்த போதே இந்த சாட்சியம் வழங்கப்பட்டது. குறித்த சாட்சியத்தில் தாய் கண்ணீருடன் மேலும் கூறுகையில், கடந்த 1990.08.25ம் திகதி என்னுடைய பிள்ளைகள் 3 பேருடன் 14 வயதுக்கும் 40 வயதுக்குமிடைப்பட்ட 600 இளைஞர்களை கொப்பேகடுவ தலைமையிலான படையினர் இழுத்துச் சென்றார்கள். பின்னர் மண்டைதீவு பகுதியில் வைத்து என்னுடைய இரு பிள்ளைகள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

அதற்குப் பின்னர் நாங்கள் மண்கும்பான் பகுதியில் கொப்பேகடுவவை சந்தித்த போது எங்களுடைய பிள்ளைகளை உங்களுடைய தலைவர் டக்ளஸ் தேவானந்தா விடுதலை செய்வார். எனக் கூறினார். அதன்போது டக்ளஸ் தேவானந்தா கூறினார். இனிமேல் சுற்றிவளைப்பில் படையினருடன் நாங்களும் இருப்போம். என்று ஆனால் 1990.9.23ம் திகதி மீண்டும் சுற்றிவளைக்கப்பட்டு என்னுடைய இரு பிள்ளைகள் கைது செய்யப்பட்டார்கள்.

பின்னர் நான் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த போது 3 பிள்ளைகள் கைது செய்யப்பட்டதால் அவர்களுக்கு ஒன்றும் நடந்திருக்காது. எனவே அவர்கள் தொடர்பாக பார்க்கிறேன். என கூறியதுடன் கொப்பேகடுவ உங்கள் பிள்ளைகளை விடுதலை செய்வார். ஏன கூறினார். பின்னர் கொப்பேகடுவவை சந்தித்த போது டக்ளஸ் விடுதலை செய்வார் என கூறினார். இருவரும் மாறி மாறி கூறினார்கள். பின்னர் நாங்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா காலத்தில் இடம்பெற்ற இதேபோன்ற ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கிய போது உங்களுடைய பிள்ளைகளை டக்ளஸ் தேவானந்தாவிடமே கேளுங்கள் என கூறினார்கள்.

அதற்குப் பின்னரும் எமக்கு தீர்வு கிடைக்கவில்லை. மீண்டும் நாங்கள் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி முக்கியஸ்தர் மகேஸ்வரி என்பவரை சந்தித்த போது அவர் கூறினார். பலர் தங்களுடனும், இன்னும் பலர் படையினருடனும் இருக்கிறார்கள். என கூறினார். பின்னர் எந்த முடிவும் எமக்கு கிடைக்கவில்லை. எனவே என்னுடைய பிள்ளைகள் எனக்கு வேண்டும். என்னுடைய பிள்ளைகளை எனக்கு மீட்டுக் கொடுங்கள். என அந்தத் தாயார் கண்ணீர் மல்க உருக்கமாக கேட்டார்.