‘‘புதினிடம் பிரதமர் மோடி பேசினால் அமைதி பிறக்கும்; ஆதரவு தாருங்கள்’’- உக்ரைன் தூதர் உருக்கம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் புதின் இன்று உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ரஷ்ய படைகள், உக்ரைனை தீவிரமாக தாக்கத் தொடங்கியுள்ளன.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும், சர்வதேச அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் பேசிய இந்தியப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி ‘‘உடனடியாக இருதரப்பும் படைகளைத் திரும்பப் பெற வேண்டும். பதற்றமான சூழலைத் தணிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம் என்ற அச்சம் ஏற்படுகிறது’’ என பேசினார்.

இந்தநிலையில் இந்தியாவின் ஆதரவை உக்ரைன் நாடியுள்ளது. இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா கூறியுள்ளதாவது:

எத்தனை உலகத் தலைவர்கள் சொல்வதை ரஷ்ய அதிபர் புதின் கேட்பார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்திய பிரதமர் மோடி பேசினால் அமைதி பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவர். அவர் வலிமையாக பேசினால் ஒருவேளை புதின் மறு சிந்தனை செய்யக்கூடும்.

இந்திய அரசிடம் இருந்து மேலும் சாதகமான அணுகுமுறையை நாங்கள் எதிர்பார்க்கிறோம். தற்போது நாங்கள் இந்தியாவிடம் கூடுதலான ஆதரவைக் கேட்டுக்கொள்கிறோம். உக்ரைனில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிரான சர்வாதிகார ஆட்சியின் ஆக்கிரமிப்பு நடைபெறுகிறது.

இந்தியா தனது உலகளாவிய பங்கை முழுமையாக ஏற்க வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா ஏற்கனவே இரண்டு முறை எடுத்த சுதந்திரமான நிலைப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம்.

இது இந்திய வெளியுறவு அமைச்சர் மட்டுமின்றி இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளாலும் உக்ரைனுக்காக குரல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக எங்கள் நிலத்தை பாதுகாக்கும் நெருக்கடியான நேரத்தில் இந்தியா எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உக்ரைனில் புதின் நடவடிக்கைகளை விமர்சிக்காத சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எல்லையில் படைகளைக் குவிப்பது முதல் இறுதியில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்குவது வரை இந்தியா தரப்பில் நடுநிலையான நிலைப்பாடே எடுக்கப்பட்டது. ரஷ்யாவை நேரடியாக கண்டிக்கவில்லை.

தடைகளை விதிக்காத குவாட் கூட்டணியில் இந்தியா மட்டுமே உறுப்பினராக உள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள், ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன. உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நடுநிலை அணுகுமுறையை ரஷ்யா நேற்று பாராட்டியது குறிப்பிடத்தக்கது.