புதிய அரசியலமைப்பு தொடர்பில் 3 நாட்களுக்கு த.தே.கூ ஆராயும்

“எதிர்வரும் 9, 10, 11ஆம் திகதிகளில், நாடாளுமன்றம் கூடவுள்ளது. இதற்கு முன்னதாக புதிய அரசியலமைப்புத் தொடர்பாக ஆராயவுள்ளோம். இதற்கமைய, 6ஆம் திகதி முதல் தொடர்ந்து மூன்று நாட்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூடி கலந்தாலோசிக்கவுள்ளோம்” என்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலுக்கு, சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் சுட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், சுட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.

 

புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஆராய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 6ஆம் திகதி கொழும்பில் கூடவுள்ளனர்.  தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் கூடவுள்ள இக்கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் அமைப்புத் திட்டம், உப குழு அறிக்கை தொடர்பான மூன்று நாட்கள் விவாதம், கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. இது தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், “புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஆராய்வதற்கு கூடவுள்ள கலந்துரையாடலுக்கு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இக்கலந்துரையாடலில் நாம் நிச்சயம் கலந்துகொள்வோம்” என்றார்.