பொதுபலசேனா ஞானசார தேரருக்கு தொடரும் மறியல்?

ஊடகவியலாளர் பிரகீத் என்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரரை எதிர்வரும் 16ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க, நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார். எக்னெலிகொட காணாமல்போன வழக்கில், சந்தியா என்னெலிகொட சாட்சியாளர் ஆவார். குற்றவியல் ஏற்பாடுகள் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் பிரகாரம், சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில், பிணை வழங்குவதற்கு நீதவான் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று, பாதிக்கப்பட்ட (சந்தியா எக்னெலிகொட) தரப்பின் சட்டத்தரணி கூறினார்.

இந்தச் சட்டம் தொடர்பில் பிரச்சினைகள் இருப்பதனால், எழுத்துமூலமாக அறிக்கையை முன்வைக்குமாறு இருதரப்புக்கும் கட்டளையிட்ட நீதவான், அதுவரையிலும் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதேவேளை, நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றஞ்சாட்டித் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில், ஞானசார தேரருக்கு செவ்வாய்க்கிழமை, பிணை வழங்கப்பட்டிருந்தது. எனினும், சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் அவர், நேற்றுவரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நீதவான் ரங்க திஸாநாயக்கவின் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது, வழக்கின் பிரதிவாதியான ஞானசார தேரர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி டிரத்ன வரலியத்த, பிணை வழங்குமாறு கோரிநின்றார்.

நீதவான்: சந்தேநபருக்கு பிணை கோருகின்றீர்களா? சட்டத்தரணி: ஆம், முதன்மையானவரே!

நீதவான்: ‘அன்று கூறினீர்கள், எங்களை உள்ளே போடுங்கடா என்று. ஏனின்று பிணை கோருகின்றீர்கள்? சந்தேகநபர், தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு கூறினாலும், விடுதலை செய்யுமாறு கூறினாலும் சட்டத்தின் அடிப்படையிலேயே நாங்கள் தீர்ப்பளிப்போம்.’ இந்தச் சந்தேகநபர், அன்று நீதிமன்றத்தில் நடந்துகொண்ட விதத்தை பார்க்கின்றபோது, இது திட்டமிட்ட செயல் என்பது தெளிவாகின்றது. வேறொரு நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, தானாகவே கைதுசெய்வதற்கான நிலைமையை தோற்றுவித்தமையையும் தெரிகின்றது. அவ்வாறானவற்றை அடைவதற்காக நீதிமன்றத்தை பயன்படுத்துவதற்கு இடமளிக்கமுடியாது. நீதமன்றத்தை அவமதித்தமை மற்றும் அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமையானது பிணை வழங்குவதற்கு உரிய குற்றமல்ல.

எனினும், சந்தேகநபரின் வேறு ஊக்கத்துக்காக நீதிமன்றத்தைப் பயன்படுத்துவதற்கு இடமளிக்கமுடியாது. ஆகையால், நிபந்தனையின் அடிப்படையில் சந்தேகநபருக்கு பிணை வழங்குகின்றேன். சந்தேகநபர், இந்த வழக்குத் தொடர்பிலோ அல்லது நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் எந்தவொரு வழக்குத் தொடர்பிலோ, ஊடகங்களுக்கோ அல்லது வேறு எந்த இடத்திலும் கதைக்கமுடியாது. அவ்வாறு செய்தால், பிணை இரத்துச் செய்யப்படும். சந்தேநபர், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் ஹோமாகம பொலிஸ் நிலையத்துக்கு, காலை 9 மணிக்கும் பகல் 12 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சென்று கையொப்பமிடவேண்டும் என்றார்.