பொது எதிரணியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்றது

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஆறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, பொது எதிரணியின் 35 உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 94 மேலதிக வாக்குகளினால், நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (09) தோற்கடிக்கப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 145 வாக்குகளும் கிடைத்தன. வாக்களிப்பில் 28 பேர் பங்கேற்கவில்லை.
நாடாளுமன்றம், நேற்று வியாழக்கிழமை, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், காலை 9.30 மணிக்குக் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை, பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன முன்மொழிந்து உரையாற்றினார். அவ்வணியின் மற்றுமோர் உறுப்பினரான பந்துல குணவர்தன, வழிமொழிந்து உரையாற்றினார்.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம், புதன்கிழமை (08) நடத்தப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்படவிருந்தது. எனினும், நாடாளுமன்றத்தின் ஒலிவாங்கிகள் முழுமையாகச் செயலிழந்தமையால், புதன்கிழமைக்கான சபை நடவடிக்கைகள் யாவும், வியாழக்கிழமை வரையிலும், சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டன.

இந்தப் பிரேரணை மீதான விவாதம், நேற்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, மாலை 5.50 மணிவரையிலும் இடம்பெற்றது. விவாதம், காலையிலிருந்தே சூடுபிடித்திருந்தது. மாலை 3.35 க்கு, அவைக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது ஆசனத்தில் அமர்ந்திருந்து, விவாதத்தை அவதானித்துக்கொண்டிருந்தார். அருகிலிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், அவ்வப்போது உரையாடிக்கொண்டிருந்தார்.

மக்கள் கலரியும், நேற்றைய தினத்தில் ஓரளவு நிரம்பி நிரம்பியிருருந்ததை அவதானிக்க முடிந்தது. பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி, பொதுமக்களும் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்து விவாதத்தை அவதானித்துக் கொண்டிருந்தனர். விவாதம் நிறைவடையும் முன்னர் மாலை 4.15க்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவையிலிருந்து வெளியேறிவிட்டார்.

விவாதம் நிறைவடைந்ததன் பின்னர் எழுந்த பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, பிரேரணை மீது பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தவேண்டுனக் கோரினார். அதன் பின்னர், கோர மணி ஒலிக்கப்பட்டது. நாடாளுமன்றத்துக்கு வெளியில் இருந்த இருதரப்புகளைச் சேர்ந்தவர்களும், அவைக்குள் வந்து தங்களுடைய ஆசனங்களில்அமர்ந்துகொண்டனர்.

வாக்கெடுப்பு நேற்றுமாலை 6.25 வரையிலும் இடம்பெற்றது. வாக்கெடுப்பில் அமைச்சர்கள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட 28 பேர் பங்கேற்கவில்லை.

வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக பொது எதிரணியுடன் இணைந்து ஜே.வி.பி வாக்களித்தது. ஆளும் கட்சியுடன் இணைந்து, ஈ.பி.டி.பி செயலாளர் நாயகமும் எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் எம்.பியுமான முத்துசிவலிங்கம் ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர்.

வாக்களிப்பின் போது, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘இல்லை’ உரக்கக்கூறி தங்களுடைய வாக்குகளை அளித்தனர் இன்னும் சிலர், ‘ஆதரவில்லை’ என்றனர். அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ‘எதிர்ப்பு’ என்று கூறி வாக்களித்தார்.

டக்ளஸ் தேவானந்தா, பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் போது, ஆளும் தரப்பினர் மேசைகளில் தட்டி ஆரவாரஞ்செய்தனர். இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இல்லை என்றுக்கூறி வாக்களித்தபோது, என்ன இல்லை, என்ன இல்லை என்று யாரோ கேட்;டனர்.

இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன் உறுப்பினர்களில் இருவர், வாய் உளரிவிட்டனர். சிராக் ரஹ்மான் ஆதரவு- எதிர்ப்பு என்று மாறிமாறி கூறிவிட்டார் இதனால் சபையில் சிரிபொலி எழுந்தது. மற்றுமொரு எம்.பியான சிட்னி ஜயரத்ன, எதிர்ப்பு-ஆதரவு-எதிர்ப்பு என மாறிமாறி கூறியதால், மற்றுமொரு தடவை சிரிப்பொலி எழுந்தது.

பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான சாலிந்த திஸாநாயக்க, சக்கரகதிரையிலேயே சமுகமளித்திருந்தார். அவர், வாக்களித்த போது, ஒலிவாங்கியை கொடுக்கமுடியாத நிலைமை ஏற்பட்டமையால், அவர் தன்னுடைய கையை உயர்த்தியே வாக்களித்தார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் அழைக்கப்பட்போது, கோ… கோ… (எங்கே, எங்கே) ஆளுந்தரப்பினர் சத்தமாகக் கேட்டனர். எதிரணியினர் மௌனம் காத்தனர். வாக்களிப்பின் பெறுபேறு அறிவிக்கப்பட்டபோது, ஆளும் தரப்பினர் வெற்றிக்கோஷம் எழுப்ப, எதிரணியினரும் ஏதோவொன்றை கூறினர்.

நம்பிக்கையில்லாப்பிரேரணையில் ஆளுங்கட்சி வெற்றிக்கொண்டதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்துக்கு வெடியே பட்டாசு கொளுத்தப்பட்டது. அதேவேளை, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வீட்டுக்கு முன்பாக, அருடைய ஆதரவாளர்கள் மலர் மாலைகள் மட்டுமல்ல, நாணயத்தாள்களால் கட்டப்பட்ட மாலைகளுடன் அவரை வரவேற்பதற்கு தயாராக இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.