மாணவர்களின் மரணம் வேதனையையும் விசனத்தையும் ஏற்படுத்துகிறது. தமிழர் சமூக ஜனநாயக கட்சி

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களான சுலக்சன் (24) கஜன் (23) ஆகியோர் பொலிஸ் துப்பாகிச் சூடு மற்றும் அதன்காரணமாக நேர்ந்த விபத்தினால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதாய் அமைந்துள்ளது. இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். இலங்கையின் வரலாற்றின் வெவ்வேறு கால கட்டங்களில் பொலிஸ் அத்துமீறல்கள் பல விபரீதங்களுக்கு வழி வகுத்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு ஒரு சமூக பாதுகாப்பு என்பதை விட அது ஒரு வரையறையற்ற அதிகாரம் என்ற தோரணை இலங்கையில் காணப்படுகிறது.


அதனை வழி நடத்துபவர்கள் வழிகாட்டுபவர்களும் அதன் வரையறைகளைப்பற்றி அலட்சியமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.
பல தசாப்தங்களாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பழக்கப்பட்ட பொலிசாரிடம் மனித உரிமை பற்றிய அலட்சியம் காணப்படுகிறது.
கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகம் மனித உயிரைக்காவு கொள்ளும் என்பது பற்றிய பிரக்ஞை இல்லாதவர்கள் சட்டம் ஒழுங்கில் பணியாற்றமுடியாது.
இலங்கையின் பொலிஸ்துறையில் மனித உரிமை பற்றி என்ன போதிக்கப்படுகிறது என்பது புரியவில்லை.
கொல்லப்பட்ட இருவரும் இளம் மாணவர்கள்.
அவர்களது உயிர் வாழும் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது.
அவர்களது பெற்றோர் சகோதர மற்றும் உறவுகளின் கனவுகள் சிதைக்கப்பட்டிருக்கின்றன.
இரவில் வீதியில் நடமாடுவது உயிராபத்தை விளைவிக்கும் அளவுக்கு ஆபத்தானது என்ற பீதி சமூகத்தில் உருவாக இடமளிக்கக் கூடாது . ஜனநாயக மனித உரிமை விழுமியங்கங்கள் பேணப்படவேண்டும்.
சுயாதீன பொலிஸ் ஆணக்குழு மாத்திரம் போதாது.
மக்களுக்கு நட்பானதாக சட்டம் ஒழுங்கு மறு சீரமைக்கபட வேண்டும். வடக்கு கிழக்கில் பொலிஸ் அதிகாரம் 13 வதில் உள்ளவாறு மாகாண அரசுகளிடம் விடப்பட வேண்டும்.
எனினும் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய சம்பந்தப்பட்டதாக கூறப்படும் பொலிசார் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டதும் கைது செய்யப்பட்டதும் நம்பிக்கை அளிக்கும் நடவடிக்கைககள். எனினும் கொல்லப்பட்ட மாணவர்களுக்கான நீதி நிலை நாட்டப்படுவதும் மக்களின நடமாடும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதம் முக்கியமானது.
இத்தகைய சம்பவங்கள் நிகழாதிருக்க உரிய சமூக பாதுகாப்பு எற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
தி.ஸ்ரீதரன்
தலைவர்
தமிழர் சமூக ஜனநாயக கட்சி(SDPT)