மேனாள் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் பதிவு

ஆனால் நேற்று பதவியேற்ற பல அமைச்சர்களை நான் மட்டுமல்ல அரசியல் வட்டாரத்தில் பலரும் தொலைக்காட்சியில் பார்த்தோம். அவர்களது கல்வி தகுதிகள், சமூக பின்புலம், பொதுவாழ்வில் அவர்களின் அனுபவங்கள் போன்ற தகவல்கள் பொதுத் தளங்களில் இல்லை.

தொலைக்காட்சியில் அமைச்சர்கள் பதவியேற்றபோது அவர்களிடம் தேர்தலில் தோற்றவர்களின் விவரங்களையும் சொல்லிக்கொண்டிருந்தனர். தோற்றுப்போன அனைவரும் ஒன்றிய , மாநில அரசுகளின் அமைச்சர்கள், பல அரசியல் கட்சிகளின் மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட அரசியலில் முடிசூடா மன்னர்களாக பல்லாண்டுகளாக கோலோச்சியவர்கள், நாடறிந்த நாவலர்கள், பொருளாதார மேதைகள் என்று அனைவரும் சரித்திரம் படைத்த ஜாம்பவான்கள்.

அமைச்சர்களில் சிலர் கல்லூரி மாணவர்கள் போலவும் மற்றும் சிலர் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் உறுப்பினர்கள் போலவும் தோற்றமளித்தனர்.

பசைபோட்டு, பாதம் வரை தழையத்தழைய கட்டிய வேஷ்டி, தும்பைப்பூ வெண்மையில் மடிப்புக்கலையாத சட்டை, நரைத்த முடி ஒன்று கூட இல்லாமல் அனைத்தும் அத்தனை கருமையாக சீராக வாரப்பட்ட தலைமுடி, உசத்தியான கண்ணாடி என்று நாம் இதுகாறும் பார்த்து வந்த அமைச்சர்களின் ‘டிரஸ் கோட் ‘ மிஸ்ஸிங்.

அயர்ன் செய்யப்படாத டெனிம் ஜீன்ஸ் பேண்ட்கள், கலர் கலராக சட்டைகள், சரியாக வாரப்படாத தலைமுடி , இளம் தாடி என்று நாம் இதுவரை கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திராத அமைச்சர் பெருமக்கள். எல்லாமே ஒரு கனவு போல இருந்தது.

அவர்கள் ஏன், எப்படி தோற்றார்கள் இவர்கள் ஏன், எப்படி ஜெயித்தார்கள் என்ற கேள்விகளுக்கு தற்போது நம்மிடம் முழுமையான பதில்கள் இல்லை.

தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு நான் மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் சிலர் சொல்வது போல விஜய் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் தமிழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு ஆன்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லியிருந்தேன்.

பல கட்சிகள் அந்த பணியை துவங்கி விட்டன. தமிழகம் முழுவதும் ஒரு பெரிய அரசியல் மற்றும் சமூக ஆய்வினை நடத்தி விடைதேடவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்.விஜய் அவர்களின் வெற்றி சாதி, மதம் பெரும் பணம் என்று இதுவரை தமிழகத்தில் தேர்தல்களை ஆதிக்கம் செலுத்திவந்த காரணிகளை அடித்து நொறுக்கிவிட்டது.

பல தொகுதிகளில் பெரும் பணம் செலவிட்ட செல்வாக்கான வேட்பாளர்கள் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.பெரும்பான்மை சாதிகளைச் சார்ந்த வேட்பாளர்கள், என்ன சாதி என்று யாருக்கும் தெரியாத வேட்பாளர்களிடம் மண்டியிட்டு மண்ணைக் கவ்விய சம்பவங்களும் உண்டு.

அமைச்சரவையில் இந்த சாதிக்கு இத்தனை அமைச்சர்கள், இந்த மதத்திற்கு இத்தனை அமைச்சர்கள், ஒரு மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் என்று எழுதப்படாத மரபுகளையும், சட்டங்களையும் கேட்பாரும் இல்லை. கொடுப்பாரும் இல்லை.

பட்டியல் இன மற்றும் பழங்குடி மக்களுக்கு அமைச்சரவையில் எட்டு இடங்கள் கிடைத்திருப்பது சுதந்திர இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் நடந்திராத அரசியல் அதிசயம்.

பெண்களுக்கு நான்கு இடங்கள். ஐயாயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதிகளின் கரங்களில் மாநிலத்தின் கல்வி முழுமையாக ஒப்படைக்கப்பட்டிருப்பது அவமானப்படுத்தப்பட்ட அவர்களுக்கு காலம் தந்துள்ள பரிகாரம் என்றே நான் பார்க்கிறேன்.

இதற்கான பெருமையினை முதல்வர் விஜய்க்கு வழங்க பலர் தயாராக இல்லை. அவருக்கு கிடைத்த தேர்தல் முடிவுகள் தந்த அரசியல் நிர்ப்பந்தம் என்கிறார்கள்.

வரலாற்று நெடுகிலும் சாம்ராஜ்யங்கள் வீழ்ந்ததும், அதிகார பீடங்கள் சரிந்ததும் , புரட்சிகள் வெடித்ததும் அவ்வப்போது ஏற்பட்ட நிர்ப்பந்தங்களினால்தான் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.

இத்தகைய சப்தமில்லாத சமூகப் புரட்சி விஜய் காலத்தில் நடந்தது என்றுதான் சரித்திரம் எழுதும். அந்த பெருமையை யாரும் அவருக்கு மறுக்க முடியாது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜய்யின் வெற்றி எம்ஜிஆர் மற்றும் என்டிஆர் ஆகியோரின் வெற்றிகளைவிடப் பெரிய வெற்றி என்றார்.

அது உண்மைதான்!திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தோற்றதையே எல்லோரும் பெரிதாக பேசுகிறார்கள். ஆனால் தமிழக பாஜகவுக்கு விழுந்த பேரிடியின் அரசியல் முக்கியத்துவத்தை சாதாரணமாக கடந்து சென்று விட முடியாது.

இந்த தேர்தல் மூலம் தமிழகத்தில் எப்படியாவது குடியேறி விடவேண்டும் என்ற அவர்களது வியூகம் சிதைந்து சின்னாபின்னமாகிப்போனது.

தங்களது கோட்டை என அவர்கள் மார்தட்டிக் கொண்டிருந்த குமரிமாவட்டத்திலும், மேற்கு தமிழ்நாட்டிலும் விஜய் எனும் மாயசக்தி அவர்களது வேர்களையே பிடுங்கி எறிந்து விட்டது. ஆனானப்பட்ட அமித்ஷாவே ஆடிப்போனதாக சொன்னார்கள்!

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் பிரிந்து சென்றது ஆச்சரியப்படக்கூடிய செய்தியல்ல. 1967 க்கு பின்னர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் இருவர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருப்பது காங்கிரஸ் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு. அப்படி நடக்கப்போகிறது என்பது நீண்ட நாட்களாக அரசியல் வட்டாரங்களில் உலவி வந்த தகவல்தான்.

ஆனால் விசிகவும், ஐயுஎம்எல்லும் விஜய் அமைச்சரவையில் சேர்ந்தது சாதாரண விஷயமல்ல. தமிழக அரசியலில் ஒரு திகில் திருப்பம்!தேர்தல் முடிவுகள் தமிழகத்தின் பழம் பெரும் கட்சிகள் அனைத்தையும் சார்ந்த தலைவர்கள் அனைவருக்கும் ஒரு செய்தியை உரக்க சொல்கிறது.இளைய தலைமுறை தங்களுக்கு வேண்டியவைகளை அவர்களே செய்து கொள்ள முடிவெடுத்து விட்டார்கள்.பழுத்த இலைகள் உதிர்ந்து புதிய குருத்துகள் வீரியத்துடன் வெளிக்கிளம்புவதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

முப்பதாண்டு காலம் அமைச்சர், ஆறு முறைஏழு முறை சட்ட மன்ற உறுப்பினர், அரை நூற்றாண்டு காலம் மாவட்ட பொறுப்பு என்பதையெல்லாம் அவர்கள் ஏற்கவில்லை என்பதை இந்த தலைமுறை நமக்கு தெளிவாக்கிவிட்டது.

இரண்டு முறைக்கு மேல் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட முடியாது என்பதை கட்சி விதிகளில் கட்டாயமாக்கங்கள். நாமே மனமுவந்து அவர்களுக்கு வழி விடவில்லை என்றால், தங்களுக்கென்ற இடங்களை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள் என்பதுதான் நாம் அனைவரும் உணர வேண்டிய செய்தி.

அதைத்தான் அவர்கள் மாற்றம் மாற்றம் என்று சொல்கிறார்கள்.

2026 சட்டமன்ற தேர்தலில் பல ஆச்சரியங்கள். பல அதிசயங்கள். தமிழக அரசியலின் பரிணாமங்கள் முழுக்க மாறி நிற்கின்றன.

மனதின் ஓரத்தில் ஒரு மாறாத வருத்தம்.தளபதி ஸ்டாலின் அவர்கள் குளத்தூர் தொகுதியில் தோற்றதை என்னால் ஏற்க முடியவில்லை! ஒரு இரவு தூக்கமின்றி கழிந்தது.

ஆக்கவும், அழிக்கவும் சர்வ வல்லமை படைத்த மோடியும்,அமித்ஷாவும் விஜய் அரசை எப்படி நடத்தப்போகிறார்கள் , அதனை விஜய் எப்படி எதிர்கொள்வார் என்பது தான் நாம் பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விஷயங்கள்!

Leave a Reply