மைத்திரிக்கு பதிலடி கொடுக்க மஹிந்த வியூகம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து தனது விசுவாசிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாக நீக்கியுள்ளதால் கடும் சீற்றத்தில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகக்‌ஷ, இதற்கு எவ்வாறு பதிலடிகொடுக்கலாம் என்பது பற்றி பொது எதிரணி உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தியுள்ளார். பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள மஹிந்தவின் மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற இந்த அவசர சந்திப்பில் காமினிலொக்குகே, ரோகித்த அபேகுணவர்தன உள்ளிட்ட மஹிந்த ஆதரவு அணி எம்.பிக்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன் மஹிந்தவின் சகோதரரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்‌ஷவும், தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து மைத்திரியால் தூக்கப்பட்ட காந்திகொடிகாரவும் இதில் கலந்துகொண்டிருந்தார். ஜனாதிபதியின் மைத்திரிபால சிறிசேனவின் இந்த முடிவானது தவறான முன்னுதாரணமாகும் என இதன்போது சுட்டிக்காட்டிய மஹிந்த ராஜபக்‌ஷ, அரசில் பழிவாங்கலின் மற்றுமொரு பாகம் என்றும் விமர்சித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சிக்கு துணைபோவதால் புதியதொரு அரசியல் கூட்டணிக்கு மஹிந்த ராஜபக்‌ஷ தலைமை தாங்க வேண்டும் என இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் அவரிடம் பகிரங்கமாக கோரிக்கை விடுத்தனர்.

சு.கவிலிருந்து தாங்கள் வெளியேறத் தயார் என்றும் உறுதிமொழி வழங்கினர். எனினும், புதிய கட்சி குறித்து மஹிந்த ராஜபக்‌ஷ உறுதியான முடிவெதையும் அறிவிக்கவில்லை. அத்துடன், மேலும் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன. சந்திப்பு முடிவடைந்த பின்னர் கருத்து வெளியிட்ட காமினிலொக்குகே, “தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்பட்டுள்ளன். இவர்கள் எங்கு செல்வது? எனவே, புதியதொரு அரசியல் கட்சிதேவை என்பது இதன் மூலம் உணரப்பட்டுள்ளது. மஹிந்த இல்லாமல் எமது அரசியல் பயணம் இல்லை” – என்றார். “புதிய கட்சியா அல்லது புதிய கூட்டணியா என்று இன்னும் முடிவெடுக்கவில்லை.

ஆனால், பலமானதொரு மாற்று சக்தி உருவாகும்” என்று ரோகித்த அபேகுணவர்தன குறிப்பிட்டார். அதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து பிரசன்ன ரணதுங்க நீக்கப்பட்டுள்ளதற்கு எதிராக அப்பிரசேத்திலுள்ள சுதந்திரக் கட்சி அரசியல்வாதிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கண்டியில் திலும் அமுனுகம எம்.பிக்கு சார்பாகவும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சு.கவின் தொகுதி அமைப்பாளர் பதவிலிருந்து தூக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுடன் மஹிந்த ராஜபக்‌ஷ தொலைபேசியூடாக உரையாடியுள்ளார் என அறியமுடிகின்றது.