வட மாகாண மீனவர்களால் மாபெரும் முற்றுகைப் போராட்டம்

இது தொடர்பில் கருத்துரைத்த வடமாகாண மீனவர்கள், இலங்கை – இந்தியா மீனவர்களது பிரச்சினைகள் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்தாலும், வாய்மூலமான உறுதி மொழியும் காலத்தைக் கடத்தும் செயற்பாடுகளும் தான் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்றனர்.

இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு எட்டப்பட வேண்டுமெனத் தெரிவித்த மீனவர்கள். தங்களது வாழ்வாதாரங்கள் அல்லது வலிகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், வடக்கின் நான்கு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மீனவ அமைப்புகள் இணைந்து கலந்துரையாடலொன்றை நடத்தியதாகவும் அதன் இறுதியில், முற்றுகைப் போராட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினர்.

எனவே, அரசியல் பிரமுகர்கள், ஓட்டோ சங்கம், பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் என அனைவரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டுமென, வடமாகாண மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டத்தை, யாழ். மாவட்டக் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம், பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம், கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம், மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம் ஆகியன இணைந்து நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.