ஹிஜாப்பை பிடித்து இழுத்த பீகார் மாநில முதல்வர்

பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜக மற்றும் ஜேடியு கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. நிதிஷ் குமார் பீகார் மாநிலத்தில் 10வது முறையாக முதல்வராகப் பதவியேற்றார். அதேநேரம் 74 வயதான நிதிஷ் குமார் உடல்நிலை சரியில்லை எனக் கடந்த சில காலமாகவே பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. இருப்பினும், அக்கட்சி இதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

இதற்கிடையே நிதிஷ் குமார் இப்போது இன்னொரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது பாட்னாவில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அவர் இஸ்லாமியப் பெண் ஒருவருக்கு அரசுத் திட்டத்தை வழங்கினார். அந்தப் பெண் ஹிஜாப் அணிந்தபடியே முதல்வரிடம் இருந்து ஆவணத்தைப் பெற்றுக் கொண்டார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த ஒரு பெண்ணின் ஹிஜாப்பை நிதிஷ் குமார் இழுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

திங்கட்கிழமை நடந்த நிகழ்ச்சியில் ஆயுஷ் மருத்துவர் ஒருவருக்கு அவர் சான்றிதழ் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றும்படி சைகை காட்டினார். அந்தப் பெண் ஹிஜாப்பை அகற்றும் முன்பே, நிதிஷ் குமார் ஹிஜாப்பை பிடித்து கீழே இழுத்தார். நிதிஷ் குமார் இப்படிச் செய்வார் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

அருகே துணை முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி இருந்தார். அவர் நிதிஷ்குமாரை தடுக்க முயல்வதும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நிதிஷ் குமாரின் இந்தச் செயலை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றும் இது மோசமானது என்றும் காங்கிரஸ் கண்டித்துள்ளது. மேலும், நிதிஷ்குமார் உடனடியாகத் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.

நிதிஷ்குமார் மனநிலை சரி இல்லை என்பதற்கு ஆதாரம் தான் இந்த சம்பவம் என ஆர்ஜேடி சாடியுள்ளது. ஆர்ஜேடி தனது ட்விட்டரில், “நிதிஷுக்கு என்ன ஆனது? அவரது மனநிலை இப்போது முற்றிலும் பரிதாபகரமான நிலையை எட்டியுள்ளது” என்று விமர்சித்துள்ளது.