ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சட்டப் போராட்டம்: ‘என் தேசம் என் உரிமை’ கட்சி அறிவிப்பு

‘லஞ்சம் ஒழிந்தால் நாடு முன்னேறும்’ என்ற முழக்கத்துடன் ‘என் தேசம் என் உரிமை’ என்ற பெயரில் ஜல்லிக்கட்டு இளைஞர்கள் புதிய கட்சியை சென்னையில் அண்மையில் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து இப்புதிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எபினேசர் கூறியதாவது: எங்கள் கட்சியின் தலைமை அலுவலகத்துக்காக சென்னையில் இடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஓரிரு நாட்களில் கட்சியின் தலைமை அலுவலகம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். கட்சி தொடங்கிய இரு நாட்களில் ஆன்-லைன் மூலம் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாகி உள்ளனர்.

புதிய கட்சியின் நோக்கம், எதிர்காலத் திட்டம் குறித்து பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்களிடம் விளக்கிக் கூறுவதற்காக அடுத்த வாரம்முதல் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செல்லத் திட்ட மிட்டுள்ளோம். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உட்பட 13 இடங்களில் இயற்கை எரிவாயு (ஹைட்ரோ கார்பன்) எடுக்கும் திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி முதல்கட்டமாக சட்டப் போராட்டம் நடத்தப்படும். இத்திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் விரைவில் பொதுநல வழக்கு தொடர்வோம். அதையடுத்து இத்திட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்றார்.