ஓர் உண்மை நிகழ்வு!

வளாக வாயிலருகே …..

‘சாகும் வரை உண்ணாவிரதம்’ என்ற அறிவிப்புடன் பந்தல் நட்டு பதாகைகளுடன் ஆதிவாசி மக்கள் பலர் திரண்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பழங்குடியினருக்கே உரிய ஏழ்மைத் தோற்றத்தில் – ஆண்களும், குழந்தைகளும், பெண்களுமாக அழுக்கு ஆடைகளும், பட்டினியால் வாடிய முகங்களுமாக உட்கார்ந்திருக்கிறார்கள்.

அதிகாரிகள் புடைசூழ , வாழ்த்துகளும் மாலை,பூங்கொத்துகளுமாக பொறுப்பேற்றுக் கொண்டாலும், அந்த புதிய ஆட்சியரின் மனம் உண்ணாவிரதமிருந்துகொண்டிருந்த எளிய மக்களையே சுழன்றுகொண்டிருந்தது.

வாழ்த்த வந்த மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட்டிடம் அது குறித்து வினவுகிறார்.

அவர் சிரித்துகொண்டே சொன்னார் :

“அதை நீங்க கண்டுக்காதீங்க. பதினஞ்சு வருஷமா நடக்கிற போராட்டம். பல கலெக்டர்கள் தீர்த்து வைக்க முயற்சி செஞ்சம் ஒண்ணும் நடக்கலை!”

“பதினஞ்சு வருஷப் போராட்டமா?”

” ஆமாம் ஸார். 1976ல கட்ட ஆரம்பிச்ச சிம்மினி அணை நம்ம மாவட்டத்திலேயே மிகப்பெரிய திட்டம். 400 கோடி ரூபாய் ப்ராஜக்ட் அது . அதுக்காக, ரிசர்வயர் பகுதியில் குடியிருந்த பத்துப்பதினேழு ஆதிவாசிக் குடும்பங்களை அங்கிருந்து வெளியேத்தினாங்க. ஒவ்வொரு ஆதிவாசிக் குடும்பத்துக்கும் ஒரு ஏக்கர் நிலமும், வீடு கட்ட பணமும் தர்றதா அரசாங்கம் வாக்கு கொடுத்ததுன்னு ஆதிவாசிகள் சொல்றாங்க. ஆனா அப்படி அரசாங்கம் உறுதிமொழி கொடுத்ததா எந்த ரிக்கார்டும் இல்லை. அன்னைக்கு பதினேழு குடும்பமா இருந்தவங்க இன்னிக்கு முப்பத்தேழு குடும்பமாக ஆயிட்டாங்க. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு ஏக்கர் தர்ற வரைக்கும் சும்மா விடமாட்டோம்னு சொல்லி வன்முறையில் ஈடுபடறாங்க. டேம் சைட்டிலிருக்கிற இரிகேஷன் ஆபிஸுக்கு பலதடவை தீ வெச்சுக் கொளுத்திருக்காங்க. வேலை செய்ய வர்றவங்களுக்கு கொலை மிரட்டல் வேற. இதுவரைக்கும் இவங்க மேலே 200 கிரிமினல் கேஸ் பதிவாயிருக்கு ஸார். இப்போ டேம் திறப்பு விழா நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சிட்டுதான் இங்க வந்து உண்ணாவிரதம் நடத்தறாங்க.”

புதிய ஆட்சியர் கேட்டார் :

“நான் அவங்களக் கூப்பிட்டுப் பேசட்டுமா ?”

“ஐயோ சார், தயவு செய்து வேண்டாம். தராதரம் தெரியாம பேசுவானுங்க.

கெட்ட கெட்ட வார்த்தையா திட்டுவானுங்க. முன்ன

ஒரு கலெக்டர் அவங்களை பேசக் கூப்பிட்டுட்டு

ரொம்ப அசிங்கப்பட்டுட்டாரு. அரசியல்வாதிங்ககூட யாரும் இவங்களை சப்போர்ட் பண்றதில்ல”

” பரவால்ல.அவங்கள வரச்சொல்லுங்க. எனக்கு மலையாளக் கெட்டவார்த்தைங்கெல்லாம் தெரியாது. அதனால பிரச்சனை இல்ல.” என்று சிரித்தார் ஆட்சியர்.

பெண்டுகள் பிள்ளைகுட்டிகளுமாக வந்த ஆதிவாசிகள் கோபமும் கொந்தளிப்புமாகத்தான் இருந்தார்கள்.

“நான்தான் புதுசா வந்திருக்கற கலெக்டர். சிம்மினி அணை சம்பந்தப்பட்ட ஃபைல்கள் எல்லாத்தையும் இதோ வாங்கி வெச்சிருக்கேன். அதை நான் படிச்சு முடிக்கவே ஒரு வாரம் ஆகும். நீங்க சொல்றது உண்மையாயிருந்தா நான் நிச்சயம் உங்கள் பிரச்சனையைத் தீர்த்து வெப்பேன். அதுக்கு எனக்கு ஒரு வாரம் டைம் வேணும். அதுவரைக்கும் உண்ணாவிரதம் போராட்டமெல்லாம் கூடாது. சரிதானா? “

ஆட்சியர் இப்படி சொன்னதுதான் தாமதம். ஒரே கூச்சல் கொந்தளிப்பு. அரசாங்கத்தையும், அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் சகட்டு மேனிக்கு அசிங்கமாக வைய ஆரம்பித்தார்கள் அந்த ஆதிவாசிகள்.

சத்தத்தைக் கேட்டு மாஜிஸ்திரேட்டும்,

போலீஸ்காரர்களும் அரக்கப்பரக்க உள்ளே ஓடி வந்தார்கள்.

வந்தவர்களைக் கையமர்த்திவிட்டு, ஆதிவாசிமக்களை சமாதானப்படுத்தினார் ஆட்சியர்.

“எவனையும் நாங்க நம்ப மாட்டோம். எல்லோருமே அயோக்கியனுங்க. இதோ இதுதான் கவர்மெண்ட் எங்களுக்குக் குடுத்த ஆர்டர். இது பிரகாரம் எங்க எல்லாக் குடும்பத்துக்கும் ஒவ்வொரு ஏக்கர் நிலம் தர்றேன்னு சொல்லுங்க. உங்கள நம்பி உண்ணாவிரதத்தை வாபஸ் வாங்கிக்கறோம்.”

கொந்தளித்த அந்த எளிய மக்கள் அவரிடம் ஒரு பழைய காகிதத்தை நீட்டினார்கள்.

வாங்கிப் பார்த்தார். பல வருடங்கள் பழமையான காகிதம். அதில் அரசாங்க முத்திரை இருந்தது.

சில ஃபைல் நம்பர்களும் இருந்தன. வேறு ஒன்றையும் காணோம். எல்லாம் அழிந்துபோயிருந்தது.

அது உரிய அரசாணைதானா? அரசாங்கத்தைப் பொருத்தவரை இப்படியோர் அரசாணை தந்ததற்கான சான்று எதுவும் கோப்புகளில் இல்லை.

என்ன செய்வது?

“பரிசோதித்துவிட்டுத்தான் என்னால் எதையும் சொல்லமுடியும்” என்றார் அவர்.

“நல்லாப் பரிசோதிங்க. ஆனா, அரசாங்கம் கொடுத்த வாக்கை நிறைவேத்தறவரைக்கும் உயிரே போனாலும் உண்ணாவிரதத்தை நிறுத்தமாட்டோம்”

உறுதியாக அறிவித்துவிட்டு வெளியேறினார்கள் மக்கள்.

” சொன்னோம்ல ஸார்? அவனுங்க பயங்கரமான காட்டுப்பயலுவ! விட்டுத் தள்ளுங்க ஸார்…” என்று ஆளாளுக்கு புதிய ஆட்சியருக்கு புத்தி சொல்ல ஆரம்பித்தார்கள்.

ஆனால் அவருக்கு மனது பொறுக்கவில்லை.

அணை சம்பந்தப்பட்ட கோப்புகளையெல்லாம்

வீட்டுக்கு எடுத்துச்சென்று ஆராய ஆரம்பித்தார்.

ஒரு சான்றும் கிடைக்கவில்லை.

இதையெல்லாம் கேட்ட முதலமைச்சர் கருணாகரன் ஆட்சியருக்கு புத்தி சொல்ல ஆரம்பித்தார்.

“நீங்க புதுசா வந்திருக்கிற கலெக்டர். நாங்கல்லாம் எவ்வளவோ முயற்சி பண்ணி தோத்துப் போன

விஷயம் அது. டைம் வேஸ்ட் பண்ணாம

வேற வேலைகளைப் பாருங்க!”.

ஆனால் ஆட்சியருக்கு ஆறவில்லை. ஒருவாரத்துக்கும் மேலான இரவுகள் அவருக்கு கோப்புகளுடனான தேடுதல் பொழுதுகளாய்க் கழிந்தன.

ஓரிரவில் ஓர் உண்மை அவர் கைகளில் தட்டுப்பட்டது.

நிர்வாக வசதிகளுக்காக ஒன்று சேர்க்கப்பட்ட கோப்புகளுள் ஒன்றில்

நான்கு பக்கங்களைக் காணவில்லை.

அந்த நான்கு பக்கங்கள் ஏன் அந்த ஆதிவாசிகளுக்குக் கொடுக்கப்பட்ட ஆர்டராக இருக்க கூடாது? அவர்கள் காட்டிய தாள் நிச்சயம் அரசாணையாகத்தான் இருக்கக்கூடும். அதில் அரசு முத்திரையும் கோப்பு எண்களும் இருந்தனவே !

அந்தக் கள்ளங்கபடமற்ற அப்பாவி மக்கள், அரசாங்க முத்திரையுடன் போலி ஆவணத்தைத் தயாரித்திருக்க வாய்ப்பேயில்லை! அவர்கள் பக்கம் ஏதோ ஒரு நியாயம் இருக்கிறது !

இப்படி யோசிக்க ஆரம்பித்தார் ஆட்சியர்.

சிம்மினி அணை திறக்கப்படத் தயாராக இருந்தது.

அணைப்பகுதியில் நிறைய வன்முறைச் சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன.

‘நக்சலைட்கள் உள்ளே புகுந்து பிரச்சினையின் திசையை மாற்றி பெரிய வன்முறையாக்க முயற்சிக்கிறார்கள் என போலீஸ் உளவுத்துறை எச்சரித்தது.

அரசு அலுவலகங்களில் உள்ள ஃபைல்களை எரிப்பதும் வாகனங்களை மறித்துத் தாக்குவதும் நடந்து கொண்டிருந்தது.

வன்முறையைக் கட்டுப்படுத்த அனுமதி கேட்டு வந்த போலீஸ் அதிகாரி, நீர்ப்பாசனத்துறை பொறியாளரிடம் கொஞ்சம் பொறுமை காக்கும்படி சொல்லிவிட்டு, மறுநாளே நாளே தலைநகர் திருவனந்தபுரம் சென்று முதலமைச்சரை சந்தித்தார் ஆட்சியர்.

“நான் அன்றைக்கே சொன்னேன். அந்த ஆட்கள்

சமூக விரோதிகள். சமரசத்துக்கு வரமாட்டார்களென்று. போலீஸ் நடவடிக்கை ஒன்றுதான் வழி!” என்ற முதல்வர் கருணாகரன் –

“ஸார், நான் எல்லா ஃபைலையும் படிச்சுப் பாத்தேன். முக்கியமான ஃபைலில் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்கு. அவங்க கைல கவர்ன்மென்ட் சீல் போட்ட ஒரு பேப்பர் இருக்கு . அரசு தரப்பிலதான் ஏதோ ஒரு தப்பு நடந்திருக்குன்னு நான் சத்தேகப்படறேன். ஆதிவாசிகள் பக்கம் நியாயம் இருக்கறதா நான் நெனைக்கிறேன் ஸார் !”

என்று மறுமொழியுரைத்தவரை கொஞ்சநேரம் கேள்வியுடன் உற்றுப்பார்த்தார்.

“நீங்களே இவ்வளவு உறுதியா சொல்லும்போது அதுல உண்மை இருக்கும்னு நம்பறேன். அப்போ இந்த பிரச்சனையை எப்படி சால்வ் பண்ணலாம்? நான் என்ன செய்யணும்?”

மலர்ந்தார் ஆட்சியர்.

அதே மலர்ச்சியோடு முதல்வரிடம், “ஸார், நல்ல விதமா அவங்களை சமாதானப்படுத்த என்னால முடியும். நீங்க எனக்கு ஒரு மூணுகோடி ரூபாயைத் தந்தா அவங்க பிரச்சனைய என்னால சுமூகமாகத் தீர்த்துட முடியும்” என்றார்.

புன்னகைத்த முதல்வர் உடனே அழைப்புமணியை அழுத்தி நீர்ப்பாசனத்துறை செயலாளரை வரவழைத்தார். விஷயத்தைச் சொல்லி மூன்றுகோடி ரூபாயை ஆட்சியரிடம் கொடுக்கச் சொன்னார்.

” இவ்ளோ பெரிய தொகையா இருக்கறதால நாங்க டிஸ்கஸ் பண்ணி…” என்று இழுத்தார் செயலாளர்.

குறுக்கிட்டுக் கையமர்த்திய முதல்வர், ” டிஸ்கஷனும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம். நானூறு கோடின்னு ஆரம்பிச்சு, இதுவரைக்கும் டேமுக்கு அறுநூறு கோடி செலவு பண்ணியிருக்கோம். வெறும் மூணே கோடியில பதினஞ்சு வருஷப் பிரச்சனைய சால்வ் பண்றேன்னு ஒரு ஜில்லா கலெக்டர் சொல்றாரு. நீங்க ஒரு டிஸ்கஷனும் பண்ணிட்டிருக்காம, போயி செக்கை மட்டும் ரெடி பண்ணிக் குடுங்க!” என்றார்.

மூன்று கோடிக்கான செக்குடன் ஊர் திரும்பிய ஆட்சியர், அடுத்த நாளே , ஆதிவாசிகளை அழைத்தார். அவர்களோ, ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர்களான நக்சல் தலைவர்கள் இரண்டுபேரையும் அழைத்து வந்திருந்தார்கள்.

ஆதிவாசிகள் சார்பாக அவர்கள்தான் பேசினார்கள்.

“கலெக்டர் அய்யா, நீங்கள்லாம் பூர்ஷ்வாக்கள். இந்த சிஸ்டம் மக்களுக்கு எதிரானது. நீங்கள் என்னதான் நல்ல முயற்சி எடுத்தாலும் இந்த சிஸ்டம் அதை நிறைவேத்தவிடாது”

ஆட்சியர் சொன்னார் : ” எந்த முயற்சியும் நடக்காதுன்னு நீங்க உறுதியா இருக்கற மாதிரி, நடக்கும்ன்றதுல நான் உறுதியா இருக்கேன். எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய்யுங்க ! தயவு செஞ்சு ஒரு ரெண்டு மாசம் இவங்ககிட்டேருந்து விலகியிருங்க. உங்கள் ஆசைப்படியே, என் முயற்சியெல்லாம் தோத்த பிற்பாடு , பழையபடி உங்க போராட்டங்களை நீங்க தொடரலாம்!”

“நோ ப்ராப்ளம். ரெண்டென்ன, மூணு மாசம்கூட

நாங்க விலகி நிற்கத் தயார். ஆனா ஒண்ணும்

நடக்காது கலெக்டர் ஸார், அதுமட்டும் உறுதி!”

என்று நடையைக் கட்டினார்கள் தோழர்கள்.

ஆதிவாசி மக்களிடம் மனம் திறந்து பேசினார் ஆட்சியர்.

“உங்க பக்கம் நியாயம் இருக்கறதா நெனைக்கிற ஒரே ஆள் நான்தான். உங்க விருப்பப்படி ஒரு குடும்பத்துக்கு ஒரு ஏக்கர் நிலம் குடுக்க அரசாங்கமே ஆசைப்பட்டாலும் குடுக்க நிலம் கெடயாது. உங்க முப்பத்தேழு குடும்பங்களுக்கும் ஒரு நல்ல இடத்தில் நானே பூமி வாங்கி எல்லோருக்கும் சௌகரியமா வீடுங்க கட்டித் தர்றேன். சம்மதம்னா சொல்லுங்க?”

எதிர்பாராத கேள்வியால் கொஞ்சநேரம் தடுமாறியவர்கள் அவர்களுக்குள் கலந்து பேசிவிட்டு சம்மதம் என்றார்கள்.

மறுநாளே, இரண்டு பஸ்கள் ஏற்பாடு செய்து, மொத்த ஆதிவாசி மக்களையும் அதில் ஏற்றி, தாசில்தாரையும் கூட அனுப்பி, சுத்துப்பட்டு கிராமங்களுக்கெல்லாம் கூட்டிப்போய், அவர்கள் விரும்பும் இடத்தை தேர்வு செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்தார் ஆட்சியர்.

அவர்களை மரியாதையுடன் நடத்தவும், அவர்கள் விரும்பும் நல்ல உணவை மூன்று வேளையும் வாங்கித் தரும்படியும் தாசில்தாருக்கு ஆணையிட்டிருந்தார் அவர்.

ஆனால் துயரம் பாருங்கள், இடம் பெயர்வதற்கு ஏதுவான ஓரிடத்தைக்கூட கண்டுபிடிக்க அவர்களால் முடியவில்லை.

ஆனாலும் அவர்களது முகங்களிளெல்லாம் ஏதோ

ஒரு புது நம்பிக்கை.

அடுத்த நாளே, மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி, ஆதிவாசிக் குடும்பங்களுக்கு இடம்பெயர மாவட்டத்தில் எங்காவது நிலம் கிடைக்குமா என்று கேட்டார் ஆட்சியர்.

ஒரே பதில்தான் வந்தது,

‘வாய்ப்பேயில்லை ஸார்’ என்று.

கூட்டம் முடிந்தபிறகு அவர்களிடம், “சரி, அதை விடுங்கள். நான் தனிப்பட்ட முறையில் எனக்குக் கொஞ்சம் நிலத்தை வாங்க ஆசை. நல்ல நிலம் விலைக்கு வந்தால் சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பியவரிடம்,

ஒரு கிராம அதிகாரி ஓடிவந்தார்.

தன் சகோதரருக்கு ஓர் எஸ்டேட் இருப்பதாகவும்,

அதில் கொஞ்ச நிலம் விற்பனைக்கு உள்ளதாகவும் தயங்கியபடி சொன்னார்.

மறுநாளே தாசில்தாரை அழைத்துக்கொண்டு,

அந்த நிலத்தைப் பார்க்கக் கிளம்பினார் ஆட்சியர்.

இடத்தைப் பார்த்ததும் அசந்தே போனார்கள்.

மிகச் செழிப்பான எஸ்டேட் நிலம் அது. தென்னை, வாழை, பாக்கு, ஏலக்காய் என்று பசுஞ்சோலையாக விரிந்து கிடந்தது.

” ஸார், நீங்க போய் அந்த ஆதிவாசிக் குடும்பங்க மொத்தப் பேரையும் இங்க அழைச்சிட்டு வாங்க!” என்றதும் தாசில்தார் அதிர்ந்தே போனார்.

“ஸார், இவ்வளோ செழிப்பான நிலத்த நீங்க வாங்குவீங்கன்னுதான்

காட்டிருக்காங்க. இதப்போயி…”

“யாருக்கும் எதுவும் சொல்லவேண்டாம். நீங்க நான் சொன்ன மாதிரி

அவங்களைப்போய் அழைச்சிட்டு வாங்க!”

ஆதிவாசிக் குடும்பங்கள் மொத்தமும் வந்து சேர்ந்தன.

அவர்களிடம், எஸ்டேட் நிலத்தை காட்டி “இந்த இடம் பிடிச்சிருக்கா?” என்று கேட்டார் ஆட்சியர்.

அவர்கள் திகைத்துப்போய் நின்றார்கள்.

‘இப்படி ஒரு செழிப்பான நிலமா!! எங்களுக்கா?’

அவர்களால் அதை நம்பவே முடியவில்லை.

என்ன தோன்றியதோ தெரியவில்லை. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் அங்குள்ள மரங்களை நோக்கி ஓடினார்கள். ஒவ்வொருவரும் மரங்களைக் கட்டியணைத்துக் கொண்டார்கள்.

வியப்பும் மகிழ்ச்சியும் அவநம்பிக்கையுமாக ஆட்சியரைப் பார்த்த அந்த எளிய மக்கள்

மரங்களைக் கட்டிக்கொண்டு அழத்தொடங்கினார்கள்.

தாசில்தார் இந்தக் காட்சியைப் பார்த்து கண் கலங்கி நின்றார். ஆட்சியரின் கண்களிலும் நீர் மல்குகிறது.

ஆதிவாசிகள் பேசமுடியாமல் தழுதழுத்து அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். கை தொழுது நின்றார்கள். குழந்தைகள் அவரைக் கட்டிக்கொண்டு உற்சாகக் குரலெழுப்பினார்கள்.

அந்த நிலத்தின் விலையை தாசில்தார் மூலம் நிர்ணயித்து, பேசியபடியே தன் பெயரில் அந்த நிலத்தை வாங்கினார் ஆட்சியர்.

‘அரசுப்பணத்தில் அவர் எப்படி நிலம் வாங்கிக்கொள்ள முடியும்? அது தண்டனைக்குரிய குற்றம்!’ என்று அதற்கும் ஆயிரம் நிர்வாகத் தடைகள் – குற்றச்சாற்றுகள். மீறி வாங்கினாரென்றால் கம்பி எண்ணவேண்டும் என்று எச்சரிக்கைகள்.

அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு, “இந்த அப்பாவி மக்களுக்காக சில நாள் சிறைக்குப் போனால்தான் என்ன? அது எனக்குப் பெருமைதான் !” என்று காரியத்தில் இறங்கிய ஆட்சியர், வாங்கிய மொத்த நிலத்தையும், முப்பத்தேழு குடும்பங்களுக்கும் சமமாகப் பிரித்து, அந்த இடங்களில் அவரவர்க்கு வீடுகள் கட்டவும் உத்தரவிட்டார்.

நீர்ப்பாசனத் துறை பணத்தில் ஆதிவாசிகளுக்கு வீடும் நிலமும் வாங்கிக்கொடுத்து ஜில்லா கலெக்டர் தனக்கு புகழ் சம்பாதித்துக் கொண்டார் என்று சிலர் கொளுத்திப்போட, அமைச்சர் டி.எம்.ஜேக்கப் ஆட்சியருக்கு போன் செய்து வருத்தப்பட்டார்.

தங்களைக் கலந்து செய்திருக்கலாமே என்று ஆதங்கப்பட்டார்.

அமைச்சரின் ஆதங்கம் ஆட்சியருக்கு நியாயமாகப் பட்டது.

வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டதும், முப்பத்தேழு பழங்குடிக் குடும்பங்களுக்கும் முறைப்படி அமைச்சரின் கையாலேயே பட்டா வழங்கக் கேட்டுக்கொண்டார் ஆட்சியர்.

இங்கே வந்தது பாருங்கள் ஓர் எதிர்பாராத் திருப்பம்.

விழா நாளன்று, பட்டா வழங்க அமைச்சர் கிளம்பித் தயாராகிவிட்டார். ஆனால், பழங்குடி மக்கள் முரண்டுபிடிக்க ஆரம்பித்தார்கள்.

“எந்த அரசியல்வாதி கையாலும், மந்திரி கையாலும் பட்டா வாங்கமாட்டோம்! இத்தனைக் காலம் எங்களை வஞ்சித்த அவர்கள் கையால்தான் பட்டா வாங்கியாகவேண்டுமென்றால், எங்களுக்கு நிலமே வேண்டாம்!” என்று அதிரடியாக ஒரு குண்டைத்

தூக்கிப் போட்டார்கள்.

விஷயம் அமைச்சருக்குப் போனது.

ஆட்சியரிடம் அவர் பெருந்தன்மையுடன் சொன்னார் :

“அவர்கள் கோபம் நியாயமானதுதான். நான் வரவில்லை. நீங்கள் எல்லாரும் சேர்ந்து அவர்களுக்குரிய பட்டாவை வழங்கிவிடுங்கள்!”

வருவாய்த்துறை அதிகாரிகளைக்கொண்டு எந்த ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமுமில்லாமல் அந்த ஏழைமக்களின் முப்பத்தேழு குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாகளை வழங்கி தன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டார் நம் ஆட்சியர்.

பல்லாண்டுப் பிரச்சனையை உங்கள் மனிதாபிமான செயற்பாட்டால் தீர்த்து, எளிய மக்களுக்கு நிலங்களையும் வீடுகளையும் வழங்கிவிட்டீர்கள் என்று முதலமைச்சர் கருணாகரன் ஆட்சியரை அழைத்துப் பாராட்டினார்.

க்ளைமாக்ஸ் இதுவல்ல.

திருச்சூரில் மூன்றாண்டுகள் பணிபுரிந்த அந்த ஆட்சியருக்கு – சென்னையில் திரைப்படத் தணிக்கை அதிகாரியாக நியமித்திருப்பதாக அரசாணை வந்தது.

சென்னை வந்தார். பணியில் இணைந்தார்.

ஓரிருவருடங்கள் கழிகின்றன.

அவரைப் பார்க்க வேண்டுமென்று வரவேற்பறையில் சிலர் காத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

அங்கே –

காட்டில் விளைந்த காய்கள்,கனிகள், தேன் நிரப்பிய குடுவைகளுடன் தங்கள் வாழ்வை மலர்த்திய மனிதனுக்காகக் காத்திருந்தார்கள் கேரளத்தின் ஆதிவாசி மக்கள்.

அவரைப் பார்த்ததுதான் தாமதம். ஓடிவந்து மகிழ்வோடு சூழ்ந்து கொண்டார்கள். ஆனந்தக் கண்ணீர் உகுத்தார்கள்.

அவரைப் பார்ப்பதற்காக மட்டுமே கேரளத்திலிருந்தது கிளம்பி வந்ததாகக் கூறியவர்கள் , கண்ணனிடம்

அவல் கொடுத்த ஏழைக் குச்சேலனைப்போல, தங்கள் நன்றியால் நிரம்பிய எளியப் பொருள்களை அவருக்கு அன்பளித்துவிட்டு இப்படிச் சொன்னார்கள் :

“ஸார் ! எங்கள் வாழ்வின் புதிய ஒளி நீங்கள்!

எங்கள் நினைவில் நீங்காதவர் நீங்கள். அதனால்

நாங்கள் வாழும் பகுதிக்கு உங்கள் பெயரைத்தான் சூட்டியிருக்கிறோம்!”

——————————————————————–

இங்கே பதியப்பட்டுள்ள படம் பார்த்தும்

அறியாதோர்க்கு –

அந்த ஆட்சியர் யாரெனச் சொல்கிறேன்.

அவர் ஞான ராஜசேகரன் IAS.

மோகமுள், பாரதி, பெரியார், ராமானுஜன்

என்று தமிழ்மக்களுக்கு இலக்கியத்தையும்

நன்மையையும் சினிமாவாக்கிக் கொடுத்த இயக்குநர்

ஞான ராஜசேகரனேதான் அவர்!

(Rathan Chandrasekar)