கே.ஆர்.கௌரி: பொதுவுடைமை நாயகி!

1946-ல் ஒரு மாணவச் செயற்பாட்டாளராகப் பொதுமக்களின் கவனத்தை முதன்முதலில் ஈர்த்தார் கௌரி அம்மா. ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் பகுதியாக மாணவப் போராட்டங்களில் பங்கெடுத்தவர். சட்டத்தில் பட்டம் பெற்ற முதல் ஈழவச் சமூகத்துப் பெண். 1948-ல் திருவிதாங்கூரில் முதன்முறையாகப் போட்டியிட்ட தேர்தலையும், 1977, 2006 சட்டமன்றத் தேர்தல்களையும் தவிர பிற எல்லா சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றிபெற்றவர்.

1948-2006 வரையிலான காலகட்டத்தில் கௌரி அம்மா போட்டியிட்ட 16 தேர்தல்களில் 13 தேர்தல்களை வென்றார். 1957, 1967, 1980, 1987-களில் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசுகளில் அமைச்சராக வலம்வந்தார்.

ஜனநாயகரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் கம்யூனிஸ்ட் அரசின் முதல்வரான இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் ஆட்சியில் ஏப்ரல் 1957-1959 வரை வருவாய், கலால், தேவஸ்வம் அமைச்சராகப் பணியாற்றினார் கௌரி அம்மா. வரலாற்றுப் புகழ்மிக்க நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் வழியாக, பல நூற்றாண்டுகள் தொடர்ந்த நிலப்பிரபுத்துவத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

அதன் மூலம் அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதாரரீதியான மாற்றத்தைக் கொண்டுவந்ததற்குப் பிறகு அவர் மீது பெரும் வெளிச்சம் பாய்ந்தது. பிறகு இ.எம்.எஸ்.ஸின் இரண்டாவது அமைச்சரவையில், மார்ச் 1967 முதல் அக்டோபர் 1969 வரை வருவாய், உணவு வழங்கல், விற்பனை வரி, கலால், சமூக நல இலாக்காக்களைப் பார்த்துக்கொண்டார்.

டி.வி.தாமஸ், கௌரி அம்மா இருவரும் கேரளத்தின் மிகவும் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தம்பதியாக வலம்வந்தனர். இ.எம்.எஸ். தலைமையிலான இரண்டு அமைச்சரவைகளில் இவர்கள் இருவரும் அமைச்சர்களாக இருந்தனர். கணவனும் மனைவியுமாகச் சட்டமன்றத்தில் பணியாற்றும் அரிதான வாய்ப்பைப் பெற்றனர். 1964-ல் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுண்டபோது இருவரும் எதிரெதிர் முகாம்களுக்குச் செல்ல நேர்ந்தது.

1967 கூட்டணி அமைச்சரவையில் கணவனும் மனைவியும் இரண்டு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக ஆனபோது திருவனந்தபுரம் அலுவலகக் குடியிருப்புகளில் அடுத்தடுத்த வீடுகளில் தங்கினார்கள். இ.கே.நாயனார் அமைச்சரவையில் ஜனவரி 1980 முதல் அக்டோபர் 1981 வரை வேளாண்மை மற்றும் சமூகநல அமைச்சராக இருந்தார் கௌரி அம்மா. நாயனாரின் இரண்டாவது அமைச்சரவையில் மார்ச் 1987 முதல் ஜூன் 1991 வரை தொழில் துறை, சமூக நலம், ஊழல் கண்காணிப்பு, நிர்வாகம் ஆகிய துறைகளில் அமைச்சராக இருந்தார்.

1994-ல் கட்சிவிரோத நடவடிக்கைகளுக்காக சிபிஐ(எம்) கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் கௌரி அம்மா. அதன் பிறகு, ஜனாதிபத்திய சம்ரக்ஷ்ண சமிதி (ஜேஎஸ்எஸ்) கட்சியைத் தொடங்கினார். இந்தக் கட்சியானது விரைவிலேயே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் கைகோத்தது. உம்மன் சாண்டி அமைச்சரவையில் 2004-2006 வரை வேளாண் பல்கலைக்கழகம், கால்நடைப் பராமரிப்பு ஆகிய இலாக்காக்களைக் கையாண்டார் கௌரி அம்மா.

கௌரி அம்மாவின் 101-வது பிறந்த நாள் விழாவின்போது, ‘கேரளத்தின் அரசியல் வரலா’ற்றையும் கேரளத்தின் கம்யூனிஸ வளர்ச்சியையும் கௌரி அம்மாவைக் கணக்கில் கொள்ளாமல் எழுத முடியாது என்று அவரை முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்தினார். மூத்த தலைவரைக் கௌரவிக்கும் விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் பொருட்டு அன்றைய தினத்தில் சட்டமன்ற அமர்வை நடத்த வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தது கேரளச் சட்டமன்றம். இது ஒரு அபூர்வ கௌரவம்.

“கௌரி அம்மா அவருடைய வாழ்நாள் முழுவதும் பயமறியாமல் போராடிய போராளி” என்றார் பினராயி விஜயன். “காலனிய ஆட்சிக் காலத்தில் சி.பி.ராமசுவாமி ஐயர் ஏவிய போலீஸ் வன்முறையை எதிர்கொண்டவர். சுதந்திரப் போராட்ட வீரர்களாகவும் இருந்த கடைசி கம்யூனிஸ்ட்டுகளில் ஒருவர். ஒரு அமைச்சராக அவரது நிர்வாகப் புத்திக்கூர்மையாலும் சட்டமியற்றும் நிபுணத்துவத்தாலும் புகழ்பெற்றவர். கம்யூனிஸக் கவிதைகளுக்கும் கதைகளுக்கும் அவருடைய வாழ்க்கை பாடுபொருளாகியிருக்கிறது. கேரள மக்களிடையே மிகவும் புகழ்பெற்ற தலைவராக கௌரி அம்மா என்றும் இருப்பார்!” என்றார் பினராயி விஜயன்.

(தி இந்து, தமிழில்: த.ராஜன்)