‘தமிழ்,முஸ்லிம் மக்களின் புரிந்துணர்வை முஸ்லிம் கட்சிகள் பேச தகுதியற்றவர்கள்’ – தீஷான் அஹமட் 

தமிழ், முஸ்லிம் மக்களின் புரிந்துணர்வைப் பற்றி முஸ்லிம் கட்சிகள் இன்று பேசுகின்றார்கள். இவர்கள் பேச வேண்டிய சந்தர்ப்பத்தில் பேசாமல் தற்போது பேசுகின்றார்கள் என, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் பொறியியலாளர் அப்துல் ரஹ்மான் நேற்று (21) தெரிவித்தார். புதிதாக பதிவு செய்யப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக் கட்சியின் பொதுக் கூட்டம் மூதூரில் நடைபெற்றது. இதன்போதே அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜெனிவாவில், தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து, தமிழ் மக்களுக்கு ஆதரவு வழங்காது, அரசாங்கப் பிரதிநிதிகளாக ஜெனிவாவுக்குச் சென்று, அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்பட்டுவிட்டு, இன்று தமிழ்-முஸ்லிம் புரிந்துணர்வு பற்றிப் பேசுவது சிறந்த விடயமல்ல.

மேலும், முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை எதிர் கட்சித் தலைவர் இரா.சம்மந்தன் நாடாளுமன்றத்தில் பேசும் போது, தமிழ் மக்களது பிரச்சினைகளை எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் பேசாது விட்டுவிட்டு, தற்போது தமிழ் முஸ்லிம் புரிந்துணர்வு பற்றி எவ்வாறு பேச முடியும்.

இந்த வகையில், நல்லாட்சிக்கான தேசிய முண்ணணியானது, சகல இன மக்களது பிரச்சினைகளைப் பேசுகின்ற கட்சியாகவும், அரசியல் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்ற கட்சியாகவும் காணப்படுகின்றது.

எமது கட்சியின் கொள்கைகளை யார் மீறினாலும் அவர்களுக்கெதிராக கட்சி உரிய நடவடிக்கையை எடுப்பதில் பின் நிற்காது. இதற்கு உதாரணமாக, வட மாகாணத்தைச் சேர்ந்த எமது கட்சியின் முக்கிய உறுப்பினரை கட்சியிலிருந்து நீக்கியமையை குறிப்பிடலாம் என, அவர் தெரிவித்தார்.