‘ராஜீவ் காந்தியின் டாட்டா’

எல்லோரிடமும் மரியாதையைப் பெற்று மெதுவாக ஊர்ந்த காரிலிருந்து ராஜீவ் இந்த 3 வயதுக் குழந்தையின் டாட்டாவைப் பார்த்து விட்டார். முகத்தில் உடனே ரோஜா இதழாய் பூஞ்சிரிப்பு. பதிலுக்கு கை ஆட்டுகிறார். கண நேர மகிழ்ச்சிதான். கூட்டம் கலைந்து, பஸ் கிடைத்து, வீடு வந்து சேர்ந்து, பல நாட்கள், பல மாதங்கள், ஏன் சில வருடங்கள் கூட அந்த நிகழ்வை சொல்லிக் கொண்டிருந்தார் என் மனைவி. ” செல்விக்கு ராஜீவ் காந்தி டாட்டா காட்டினாராக்கும் “


அந்த மிலிட்டரி அணிவகுப்பு கம்பீரமாக இருந்தது. கருஞ்சாம்பல் வண்ண கோட்- சூட் அணிந்து அந்த மரியாதையை ஏற்றுக் கொண்டு நடக்கிறார் பிரதமர். விடுதலைப் புலிகள் அமைதிப்படையிடம் ஆயுதங்கள் ஒப்படைப்பு. அரசிடம் சரண்டர். இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை தாய் நாடு திரும்பும் காட்சி. முன்னதாக சிங்கள ராணுவம் தரும் மரியாதையை இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஏற்றுக் கொள்ளும் வைபவம். அவருக்கு முன்னும் பின்னும் பாதுகாவலர்கள். வரிசையாய், இறுக்கமாய், துளி ஆடாது, அசையாது, துப்பாக்கி தாங்கி, கம்பீரமாய் நின்று ராயல் சல்யூட் அடிக்கும் சோல்ஜர்கள் மத்தியில் பதில் சல்யூட் அடித்தபடி புன்னகை தவழ நடக்கிறார். இதோ ஒரு துப்பாக்கி சோல்ஜரின் உடலசைவில் மாசுபாடு தெரிகிறது. வேகமாக துப்பாக்கியை தூக்குகிறார். தன் முன்னே வந்து நகரும் ராஜீவ் காந்தியின் பின் மண்டையை நோக்கி அந்த சோல்ஜர் தன் துப்பாக்கியை திருப்பி ஓங்கி அடிக்கிறார்.

ஏதோ தப்பு நடக்கிறது என்பதை நிழலாய் உணர்ந்த ராஜீவ் திரும்பிப் பார்த்து தன் தலையை நோக்கி துப்பாக்கியின் மட்டை வேகமாக வருவதை அனிச்சையாய் உணர்ந்தோ என்னவோ தலையைக் குனிந்தபடியே ஓட்டம் எடுக்கிறார். இருந்தாலும் அத்துப்பாக்கியின் முதுகு ராஜீவ்வின் தோளை லேசாகப் பதம் பார்த்து விடுகிறது. பாதுகாவலர்கள் அவரை ஓடித் தாங்குகிறார்கள். பாதுகாவல் இன்னொரு குழு துப்பாக்கி வீசின சோல்ஜரைக் குண்டுக் கட்டாக கட்டி தூக்கிப் போகிறது. அந்த காட்சியை TV திரையில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறுகிறார்கள். குறிப்பாக நான் பணி செய்த பட்டறை மேனேஜர் பதறித் துடிக்கிறார்: “அவர் தனி மனிதரல்ல. நம்ம பிரதமர். இது நம்மையே அடிச்சதாகும்” என்கிறார். இதன் பின்னணியில் நாடே கொந்தளித்தது. இலங்கைக்கு அமைதிப்படை இந்தியா அனுப்பியதில் சிங்கள ராணுவத்திற்கும் கடும் அதிருப்தி இருந்ததை நாடே பேசியது.


ராஜீவ் பிரதமர் ஆவதற்கு முன்பு நாட்டில் தகவல் ஒலிபரப்புத்துறை வசம் ஒன்லி ஆல் இண்டியா ரேடியோதான். தூர்தர்ஷன் பின்னாளில்தான் உள்ளுக்குள் நுழைந்தது. தனியார் சேனல், தனியார் ரேடியோ மருந்துக்கும் இல்லை. அம்பாசிடர், பிரிமியர் பத்மினி, பிளைமவுத், பியட் கார்கள் தவிர்த்து வெளிநாட்டு இறக்குமதி கார்கள் ஒன்றிரண்டு நாட்டில் இருந்தால் அதிசயம். மாருதி கார்கள்தான் புத்தம்புது நவீன கார்கள். கம்ப்யூட்டர் கண்ணில் காண்பது அரிது. இதை எல்லாம் உடைத்து தகவல் தொழில் நுட்பத்தில் மேலை நாட்டு கலாச்சாரத்தை உள்நுழைந்து புரட்சி செய்தது ராஜிவ் அரசு தான். ” இந்தியா மக்கள்தொகை மிகுந்த நாடு.

நம் மனித வளத்தை பயன்படுத்தி, சுதேசி கொள்கையை விஸ்தரிக்காவிட்டால் நாடு நாசமாகும். கம்ப்யூட்டர் வந்தால் நாட்டில் வேலைவாய்ப்புகள் பறிபோகும்’ என அன்று கோஷமிட்டு போராடினார்கள். இன்று ஒரு மரத்தில் எத்தனை கிளைகள், இலைகளோ அந்த அளவு விதவிதமான வெளிநாட்டு கார்கள் இங்கே உலா வருகின்றன. வீட்டு வீட்டுக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவர் உள்ளங் கையிலும் ஒரு கம்ப்யூட்டர். இதற்கு எதிராக அன்று போராடிய, சோசலிஸ்ட்கள், கம்யூனிஸ்டுகள் பெரும்பான்மையோர் இன்று கம்ப்யூட்டர் அறிவில் உச்சத்தில் இருப்பதைக் காண்கிறேன். அவர்கள் எல்லாம் விதவிதமான வெளிநாட்டுக் கார்களில் வருவதையும் கண்ணுருகிறேன்.

இவ்வளவு ஏன் அமெரிக்க ஏகாதிபத்யம் ஒழிக என கோஷமிட்ட அவர்கள் தன் குடும்பத்து திருமண அழைப்பிதழ் வைக்கும் போதெல்லாம் கவனிக்கிறேன். அதில் மாப்பிள்ளையோ, மணப்பெண்ணோ, இருவருமோ அமெரிக்காவில் Software கம்பெனியில் பணியில் இருப்பது அச்சடிக்கப்பட்டுள்ளது. பலர் க்ரீன்கார்டு ஹோல்டர்கள். இந்த இடத்தில் க்யூபாவைப் பார்க்கிறேன். இன்றளவும் அங்கே இப்படி வெளிநாட்டு நவீன கருவிகள், வெளிநாட்டு கார்கள் பவனி வரவில்லை. உள்நாட்டுத் தயாரிப்புகள் மட்டும்தான். அங்கே கல்வி, மருத்துவத்திற்கு மட்டுமே முக்கியத்துவம்.

அதனால்தான் சுதேசி பொருளாதாரத்தை முன்னிறுத்தி தன்னிறைவு அடைந்த சோசலிஸ நாடாக அது பீடு நடை போடுகிறது. ஏறத்தாழ நேருவும், இந்திராவும் அப்படியான சோசலிஸ்ட்டுகளாக இருந்தார்களோ? ராஜிவ் தான் கேப்டலிஸ்ட்டாக மாறி நம் மக்களை நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமையாக்கி, சுக போகி புத்திக்கு ஆட்படுத்தி விட்டாரோ என்றும் எண்ணாமல் இருக்க முடியவில்லை.


ராஜீவ் கொல்லப்பட்ட தினம் காலை ஆறு மணிக்கு தேர்தல் செய்தி வாசிக்க வேண்டிய TV, ரேடியோக்கள் சோக வயலின் வாசித்துக் கொண்டிருந்தது. ஏன் எதற்கு, என்னவோ நடந்துவிட்டது என்று மக்கள் பதறித்துடித்த நிலையில்தான் அச்சம்பவமே மெல்ல, மெல்ல மக்களுக்கு தெரிய வந்தது. நாடே மூன்று நாள் அழுதது. கிராமத்துப்பெண்கள் பஞ்சாயத்து TV-யில் ராஜீவ் பின் மண்டை உடலையும், கொள்ளி வைக்கும் சிறுவன் ராகுலையும், எரியும் சிதையையும் பார்த்து பார்த்து அழுதார்கள். அங்கங்கே வட்டம் கட்டி ஒப்பாரி பாட்டு பாடினார்கள்.

இலங்கைக்கு இந்திய அமைதிப் படை போனதில் சிங்கள சிப்பாய்களுக்கு மட்டுமல்ல, புலிப் போராளிகளிடமும் ரெளத்திரம் இருந்தது என்பதை பாமரனும் உணர்ந்த தினமாக ராஜீவ்வின் துர்மரண நாள் ஸ்வீகரித்துக் கொண்டது. ராஜீவ் இறந்த போது என் நெஞ்சில் ஈரம் கொட்டியது. எந்த ஓர் இறப்பும் வேதனை தான். ஒரு பெரிய நாட்டின் பிரதமராக இருந்த மனிதருக்கே இந்த நிலை என்றால் நாம் எல்லாம் எம்மாத்திரம்? ஓயாது அடிக்கும் மனது.

‘அது ஒரு துன்பியல் சம்பவம்’ என சொன்ன புலிகள் தலைவர் பிரபாகரனும் இன்று இல்லை. அவர் குடும்பமும் இல்லை” அவர் மரணம் குறித்த செய்தி வரும் போது கூட என்னையறியாமல் அழுதேன். ஆம் மரணங்களை நல்மனம் ஏற்பதில்லை. அதிலும் வீரர்கள், தீரர்கள், நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து இயங்கியவர்களுக்கு மரணம் என்றால் – அதுவும் துர்மரணம் என்றால் எப்படி ஏற்க முடியும்?

  • இன்று ராஜீவ் காந்தி பிறந்த நாள்.