வாய்ப்பு கேட்கத் தெரியலை… அதனால ஆசிரியர் வேலைக்குப் போயிட்டேன்!” – பாடகி ஜென்ஸி

சாதாரண நடுத்தரக் குடும்பம்தான். பத்தாவது வரைக்கும் படிச்சுட்டு, மியூசிக்ல லோயர், ஹையர் கோர்ஸ் முடிச்சேன். என்னோட 13 வயசுல இருந்து மேடைகள்ல பாடிட்டு இருக்கேன். ஜேசுதாஸ் அண்ணாகூட கேரளாவுல நிறைய கச்சேரிகள்ல பாடியிருக்கேன். தாஸ் அண்ணாதான், ‘நீ நல்லா பாடுறே’ன்னு சொல்லி, 16 வயசுல என்னை ராஜாசார்கிட்ட கூட்டிட்டுப்போனாரு. அப்போ ராஜா சார் தன்னோட மெல்லிசையால பல ஹிட் கொடுத்துட்டு இருந்த காலம். அவரைப் பார்க்கப் போகும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்துச்சு.

நான் போனது காலையில. ராஜா சார் என்கிட்ட இயல்பா பேசினார். மூணு பாட்டு பாட சொன்னார். பாடி காட்டினதும் ‘வாய்ஸ் ஓகே’னு மதியமே ரிக்கார்டிங்ல பாட வைச்சார். அப்படி 1978-ம் வருஷம் திரிபுரசுந்தரி படத்துல பாடின ‘வானத்துப் பூக்கள்’தான் என்னோட முதல் பாடல். அடுத்தடுத்து ‘அடிப் பெண்ணே, என்னுயிர் நீதானே, ஆயிரம் மலர்களே’னு நிறைய பாடல்களை பாட வாய்ப்புக் கொடுத்தார் ராஜா சார்.

அவர் பீக்ல இருந்தப்ப சுசிலா அம்மா, ஜானகி அம்மாவும் அவரோட இசையில அதிகமான பாடல்களை பாடிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறப்ப எனக்கும் வாய்ப்புக் கொடுத்தார் ராஜா சார். ஒவ்வொரு முறையும் ரெக்கார்டிங்ல எப்படி பாடணும்னு சொல்லிக்கொடுத்திடுவார். பாடி முடிச்சதும், பெருசா பாராட்டமாட்டார். ‘டேக் ஓகே’ன்னு மட்டும்தான் சொல்லுவார். ஏதாச்சும் தப்பு பண்ணியிருந்தா மட்டும் சரிசெய்துக்க சொல்லுவார்.

பாலசுப்ரமணியம் அண்ணா, ஜேசுதாஸ் அண்ணா, ஜானகி அம்மானு எல்லாரும் எப்படி பாடல்களை பாடணும்னு எனக்கு டிப்ஸ் கொடுத்தாங்க. ரெண்டு வருஷம் பாடகியா என் கிராஃப் உயர்ந்துச்சு” என்றவர் தான் டீச்சர் வேலைக்குச் சென்ற சூழலையும் விவரித்தார்.”சினிமாவுல என்னைத் தேடி வந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்க தெரிஞ்ச எனக்கு தானா போய் வாய்ப்பு கேட்கிற நுணுக்கம் தெரியல. எனக்கு உதவவும் யாரும் இல்லை. நானும் யார்கிட்டயும் வாய்ப்பு கேட்டுப் போகல.

அதே சமயம் கொச்சியில இருக்கும் ஓர் அரசு உதவி பெறும் பள்ளியில டீச்சரா வேலை கிடைச்சது. ‘ஒரு பாடகி டீச்சர் வேலைக்குப் போறாங்களே’ன்னு அப்போ பரபரப்பா பேசினாங்க. டீச்சரா வொர்க் பண்ணிகிட்டு இருந்தாலும், தொடர்ந்து ராஜா சார் பாடுற வாய்ப்புகளும் கொடுத்தார். அந்த சமயங்கள்ல மட்டும் சென்னைக்கு அப்பாவோட வந்து பாடிட்டுப் போவேன்.அப்படித்தான் ஜானி படத்துல ‘என் வானிலே’, ‘தெய்வீக ராகம்’, ‘காதல் ஓவியம்’ மாதிரியான பெரிய ஹிட் பாடல்களைப் பாடினேன்.

தமிழ் அளவுக்கு இல்லாட்டியும், மலையாளத்துலயும் கொஞ்சம் பாடல்கள்ல பாடியிருந்த சமயத்துல கச்சேரிகள்ல பாடுறதையும் நிறுத்திட்டேன். 1982-ம் வருஷத்தோடு சினிமாவுல பாடும் வாய்ப்புகளும் நின்னுடுச்சு.

நானும் டீச்சர் வேலையில என் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பிச்சுட்டேன். சினிமாத்துறைக்கு வந்த அஞ்சு வருஷத்துல 50 பாடல்கள் மட்டுமே பாடியிருக்கேன். ஆனா, 39 வருஷமா ரசிகர்கள் என்னை மறக்காம இருக்காங்க. இதுதான் என்னோட வாழ்நாள் சாதனையா நினைக்கிறேன். எனக்கான அடையாளம் இப்ப வரைக்கும் ரசிகர்கள் மத்தியில தொடருது.

ஒரு மியூசிக் டீச்சரா ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு இசையை கற்றுக்கொடுத்தேன்ங்கிற மன திருப்திதான் என் வாழ்நாள் திருப்தியா நினைக்கிறேன்” என்றவர் தன் குடும்பத்தைப் பற்றிக் கூறுகிறார்.

“கணவர் பிசினஸ் பண்ணிட்டு இருக்கார். பொண்ணு ஆஸ்திரேலியாவுல குடும்பத்தோடு வசிக்கிறாங்க. பையன் அமெரிக்காவுல எம்.எஸ் படிச்சுகிட்டு இருக்காரு. இப்பவும் 5 – 7-ம் வகுப்பு வரைக்கும் படிக்கிற குழந்தைகளுக்கான மியூசிக் டீச்சரா தொடர்ந்து வொர்க் பண்ணிட்டு இருக்கேன். குறிப்பா நல்ல நல்ல பாட்டெல்லாம் கொடுத்து எனக்கு தனி அடையாளம் தந்தது இளையராஜா சார்தான். அதனால என்னோட வாழ்க்கை முழுக்க அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்” என்கிறார் நெகிழ்ச்சியாக.Courtesy vikatan