சுமந்திரன் சுத்துமாத்து!

செய்தி- ஆயுதக்குழுக்கள் தமிழ்தேசியக்கூட்டமைப்பில் இருந்து தாராளமாக வெளியேறலாம்- சுமந்திரன்

சுமந்திரன் அவர்களே!

இத்தனைநாளும் கூட இருக்கும்வரையில் தெரியவில்லை. இப்போது அவர்கள் பிரிந்துபோகும்போதுதான் ஆயுதக்குழுக்களாக உங்களுக்கு தெரிகிறதா?சரி. பரவாயில்லை. இருக்கட்டும். உங்கள் தலைவர் சம்பந்தர் அய்யா பைல் கட்டுக்களை சுமந்துகொண்டு இங்கு ஒருவர் பின்னால் போகிறாரே. அவரையாவது யார் என்று தெரிகிறதா?

புலிகளின் அரசியல்பிரிவு தலைவர் தமிழ்செல்வன் பின்னால் உங்கள் சம்பந்தர் அய்யா பதவிக்காக அலைந்தபோது ஆயுதக்குழுவாக அவர் தெரியவில்லையா?

தமிழ்தேசியகூட்டமைப்பை புலிகள் உருவாக்கியபோது அவர்கள் ஆயுதக்குழுவாக உங்களுக்கு தோன்றவில்லையா?

அல்லது, தமிழரசுக்கட்சி புனிதமான கட்சி என்று உங்களால் எப்படி கூற முடிகிறது?

தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தவர்களே அமிர்தலிங்கமும் தமிழரசுக்கட்சியும்தானே.

துரையப்பாவை துரோகி என்று கூறி முதல் முதலாக துரோகி ஒழிப்பை ஆரம்பித்து வைத்தவர்களும் தமிழரசுக்கட்சியினர்தானே!

பொத்துவில் கனகரத்தினம் கட்சி மாறியபோது அவருக்கு இயற்கை மரணம் வராது என்று பாராளுமன்றத்தில் பேசியவர் அமிர்தலிங்கம்தானே!

அருளம்பலம், தியாகராசா போன்றவர்களையெல்லாம் துரோகிகள் என்று கூறி சுடவைத்துவிட்டு இன்று நீங்கள் நல்லவர்கள். சுட்டவர்கள் ஆயுதக் குழுக்களா?

சிங்களவனின் தோலை உரித்து செருப்பு தைத்து போடுவோம் என உணர்ச்சிப் பேச்சு பேசி இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தவர்கள் தமிழரசுக்கட்சியினர்தானே!

இப்போது தமிழரசுக்கட்சி சுத்தமான கட்சி. ஆனால் தமிழரசுக்கட்சியின் சொல்லைக் கேட்டு ஆயுதம் ஏந்தியவர்கள் ஆயுதக் குழுக்களா?

நன்றாய் இருக்கிறது உங்கட நியாயம். தமிழ் இளைஞர்கள் படிப்பை கைவிட்டு ஆயுதம் ஏந்திப் போராடியபோது இந்தியா சென்று கல்வி கற்றவர் நீங்கள்.

தமிழ் மக்களுக்காக எந்தவொரு தியாகத்தையும் செய்யாத நீங்கள் எல்லாம் ஆயுதக் குழுக்கள் என்று எள்ளிநகையாடுவதைப் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியுள்ளது.

பலர் அநியாயமாக இறந்தபோது நாம் கவலைப்பட்டிருக்கிறோம். ஆனால் முதன் முதலாக ஒருவர் சாகாமல் தப்பிவிட்டாரே என்று கவலைப்படுகின்றோம் என்றால் அது உங்களுக்காக மட்டுமே.