பற்குணம் டி.ஆர்.ஓ (பதிவு 20)

பற்குணம் முதன்முதலாக அலுவலகத்துக்கு பொறுப்பேற்க வந்தபோது அங்கே நிறைய மக்கள் தங்கள் தேவைகளை முடிக்க வெளியே காத்திருந்தனர் .இதை அலுவலகத்துக்குள் நுழைய முன்னரே அவரின் கண்களில் பட்டது.அவர் பொறுப்பேற்ற மறுநாள் அவருடைய அறையின் வெளிக்கதவை திறந்துவிட்டு என்னைச் சந்திக்க வருபவர்கள் நேரடியாக வரலாம் என எழுதி வைத்தார்.அவர் பொறுப்பேற்ற சில வாரங்களில் அலுவலகத்தின் முன்பாக உள்ள மக்கள் தொகை குறைந்தது.


அங்குள்ள போக்குவரத்துக் குறைபாடுகளைக் கவனித்து தூர இடங்களில் இருந்து வரும் மக்களின் தேவைகளை உடன் நிறைவேற்றும்படி அலுவலக ஊழியர்களிடம் வேண்டினார்.குறிப்பாக புல்மோட்டை ,தென்னமரவாடி ,பறணமதவாச்சி கிராம மக்களின் அலுவல்கள் உடன் கவனிக்கப்பட்டன.

குச்சவெளி தவிர்ந்த சகல கிராமங்களையும் நேரில் சென்று பார்வையிட்டார்.இவர் பொறுப்பேற்ற சில வாரங்களின் பின் அரசாங்க அதிபர் இவரது குச்சவெளி அலுவலகத்துக்கு பார்வையிட வந்தார்.அரச அதிபர் தங்குவதற்காக ஒரு அரச இல்லம் அங்கே இருந்தது. அங்கே தங்கிவிட்டு மறுநாள் பற்குணத்தை திரியாய் வருமாறு அழைத்தார்.

திரியாயில் ஒரு புராதன விகாரை ஒன்று மலை உச்சியில்அமைந்து உள்ளது.அங்கே இரண்டு பௌத்த மதகுருக்களும் ஒரு சில சிங்கள பௌத்த குடும்பங்களும் அந்த மலை அடிவாரத்தில் இருந்தனர்.அந்த விகாரையைத் தரிசிக்க அரச அதிபர் பற்குணத்துடன் போனார்.

அங்குள்ள மத குருவைக்கண்டு அரச அதிபர் வணங்கினார்.பற்குணம் இரு கைகூப்பி வணக்கம் சொன்னார்.இதைக் கண்ட அரச அதிபர் அவரை வணங்குமாறு கூறினார்.அதற்குப் பற்குணம் மன்னிக்கவும்.நான் எந்த மத குருவையும் வணங்குவதில்லை.ஏன் எங்கள் மத குருக்களையே வணங்குவதில்லை.நீங்கள் இருவரும் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் என அரச அதிபரையும் பௌத்த மத குருவையும் பார்த்துக் கூறினார்.நிலைமை உணர்ந்த மத குரு சிரித்து சமாளித்து இருவரையும் வரவேற்றார்.பின்னர் அந்த புராதன விகாரையைப் பார்த்துவிட்டு இருவரும் திரும்பினார்கள்

பற்குணம் பதவிக்கு வந்தபின் எங்களை தன்னுடன் வருமாறு அழைத்தார்.எமது வீட்டுச் சூழல் எல்லோரும் போக முடியாது.போகவும் விரும்பவில்லை .உடனியாகவும் போக வசதிகளும் இருக்கவில்லை .ஏனெனில் எல்லோருமே அண்ணன் பற்குணத்தின் தயவிலேயே இருந்தோம்.அதனால் பயண ஒழுங்குகளையும் உடன் செய்ய முடியவில்லை .உடுப்பு முதற்கொண்டு எல்லாமே நாங்கள் வாங்க வேண்டியிருந்தது.அதனால் எங்கள் பயணம் தாமதமானது.

எல்லாவற்றுக்கும் வழிவகுத்த அய்யா அண்ணனைப் பார்க்கச் சென்றார்.அங்குள்ளவரகளுக்கு அய்யாவை அறிமுகப்படுத்தியபோது அவரையும் எல்லோரும் அய்யா என்கிற உயர் மரியாதை கொடுத்து அழைத்தனர்.அவருக்கோ ஆனந்தம்.தன் உழைப்பின் பலனை முழுமையாகக் கண்டார்.
சில நாட்களில் திரும்பி வந்து தன் சந்தோசங்களைக் கொட்டித் தீர்த்தார்.

(விஜய பாஸ்கரன்)
(தொடரும்….)