மூத்த மகனை கருணா குழுவும், மற்ற இருவரை புலிகளும் பிடித்துச்சென்றனர்

“மூன்று பிள்ளைகளையும் இழந்து மனநலம் பாதிக்கப்பட்டவள் போல் இருக்கின்றேன்” கண்ணீருடன் தாய் சாட்சியம்

மூத்த மகனை கருணா குழுவும், மற்ற இருவரை புலிகளும் பிடித்துச்சென்றனர். தனது மூத்த மகனை கருணா குழுவும் ஏனைய இரண்டு மகன்களையும் புலிகளும் பிடித்துச் சென்றனர். இன்று மூன்று பிள்ளைகளையும் இழந்து மனநலம் பாதிக்கப்பட்டவள் போல் இருக்கின்றேன் என பூநகரி பள்ளிக்குடாவைச் சேர்ந்த சோமசுந்தரம் ஜெயமேரி எனும் தாய் கண்ணீருடன் சாட்சியமளித்துள்ளார்.

காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதிநாள் அமர்வு இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் பளை மற்றும் பூநகரி பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்தவர்களுக்காக இடம்பெற்றது இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தனது சாட்சியத்தில்

1978 ஆம் ஆண்டு பிறந்த எனது மூத்த மகன் 2004 ஆம் ஆண்டு மட்டகளப்பு குருக்கள்மடம் பகுதியில் வைத்து கருணா குழுவால் பிடித்துச் செல்லப்பட்டார். இவர் பின்னர் இயக்கத்தில் இருக்கும் போது இறந்து விட்டார்.
பின்னர் 1986 ஆம் ஆண்டு பிறந்த இரண்டாவது மகன் சோமசுந்தரம் இருதயராசா 2008-2-6 அன்று புலிகளால் பிடித்துச்செல்லப்பட்டார் இன்று வரை எந்த தகவலும் இல்லை.

இந்த நிலையில் 1989 ஆம் ஆண்டு பிறந்த எனது மூன்றாவது மகனை 2009-2-8 திகதி புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பில் பிடித்துச் சென்றனர் அவர் தொடர்பிலும் எந்த தகவலும் இல்லை. என கண்ணீருடன் தெரிவித்த ஜெயமேரி
புலிகளால் பிடிக்கப்பட்ட எனது இரண்டு பிள்ளைகளில் ஒரு மகனை மாத்தளன் கடற்கரையில் எனது ஊரவர்கள் கண்டுள்ளனர். அதில் ஒரு மகன் மாத்தளன் பகுதியில் இருந்து சாலை நோக்கி சென்றுகொண்டிருந்ததாக கண்டவர்கள் சொன்னார்கள் என்றும் தெரிவித்தார்.

எனது மூன்று ஆண் பிள்ளைகளும் இல்லாமல் நான் பெரிதும் கஸ்ரப்படுகின்றேன், அவர்களை நினைத்து நினைத்து மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அதற்காக சிகிசையும் பெறுகின்றேன எனப் பையிலிருந்த குளிசைகளையும் எடுத்துகாட்டினார்