அக்டோபர் புரட்சியும் பெர்லின் சுவரும்

(தோழர் சுகு)

யார் சொன்னது அக்டோபர் புரட்சியின் அறங்கள் தோற்றதென்று ! அது காட்டாற்று வெள்ளம்!!;

நாம் வாழும் காலத்து பதிய தலைமுறைக்கு அகடோபர் புரட்சி பற்றிய அறிவு பிரக்ஞை இல்லை என்றே கூறிவிடலாம்.

1990 பெரும் பிரளயம் போல் உருவான நுகர்வுக்கலாச்சாரம் மற்றும் தாராளவாத பொருளாதாரமுறையில் அடிபட்டுச் செல்லும் தலைமுறை இது.

பொதுவாகவே சுதந்திரப்போராட்டம் ,சமூகமாற்றம் பற்றிய கருத்துக்கள் பலவீனப்படுத்தப்பட்ட நகர்ப்புற இளைஞர் குழாம் ஒன்று உருவாகியுள்ளது.

ஆனால் லட்சோபலட்சம் தொழிலாளர்கள் விவசாயிகள் வறியவர்களும் பஞ்சமும் நோயுடன் உலகளாவிய அளவில் அவலமுறுகிறார்கள். அக்டோபர் புரட்சியைப் பாரதி “ஆகா என்றெழுந்தது பார் யுகப் புரட்சி” என்றான்.
ஆனால் இன்று பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது தான் உலகவரலாற்றின் முக்கிய நிகழ்ச்சியாக உலகளாவிய அதிகார ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன.

1800 களின் நடுப்பகுதியில் மார்க்சும் ஏங்கல்சும் கம்யூனிஸ்ட கட்சி அறிக்கையை வெளியிட்டதிலிருந்து தீவிர கருத்து இயக்கவியல் போக்கில் வரலாற்று மெய்நிலையில் 1871 இல் 72 நாட்கள் நீடித்த பாரிஸ்கம்யூன் 1917 இல் இருந்து 73 வருடங்கள் நீடித்த சோவியத் யூனியன் என்பன உருவாயின.

ஆனால் இன்று பெர்லின் சுவர்தகர்வு கொண்டாடப்படுகிறது. நவதாராளவாத ஏகாதிபத்திய ஊடகங்களால் அவற்றின் காதலர் தினம் போல் ஆக்கபட்டிருக்கிறது.

சோவியத்யூனியன் பாரிஸ் கம்யூனுக்குப் பிறகு உலகின் முதலாவது தொழிலாளர்- விவசாயிகளின் மற்றும் வறியவர்கள் கல்வியாளர்களின் கூட்டு அரசின் ஸ்தாபிதம்.

முன்னைய அனுபவங்கள் பெரிதாக இல்லாத நிலையில் அக்டோபர் புரட்சி கரடு முரடான பாதையில் பயணம் செய்தது.

ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் அமைந்த ரஸ்சியாவில் புரட்சி குறிப்பாக நடந்தேறி சோவியத்யூனியன் உருவாயிற்று.

பெருவாரியான மக்களின் நலன்கள் ,சமத்துவமான சமூக அமைப்பு அக்டோபர் புரட்சியன் அபிலாசைகளாக இருந்தன.

உணவு ,நிலம், வீடு ,சுகாதாரம,; கல்வி ,சமூகப் பாதுகாப்பு போன்ற பல விடயங்கள் உலகளாவிய அளவில் அகக்றைக்குரியனவாக மாறியதற்கு அக்டோபர் புரட்சி உந்து விசையாக இருந்தது.

இலங்கையில் இலவசக் கல்வி ,இலவச வைத்தியம் இந்தப்பின்னணியிலேயே உருவானதென்றால் அது மிகையல்ல.

இந்தியாவின் நேரு மற்றும் இந்திய இடதுசாரி இயக்கத்தின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளும் அவ்வாறுதான்.

இடதுசாரி இயக்கம் உலகம் முழுவதும் விரவிப் பரவுவதற்கும் உலகளாவிய தேசிய விடுதலை இயக்கங்கள் கிளர்ச்சி உணர்வடைவதற்கும் ,நிறவெறி, பெண்கள் சிறார் உரிமை சுற்றாடல் பிரச்சனைகள் கரிசனைக்குரியனவாக மாறியதற்கும் அக்டோபர் புரட்சியன் தாக்கங்களை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

அக்டோபர் புரட்சின் பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகள், இந்தியா, மக்கள் சீனம் ,கியூபா, வியட்னாம் ,சிம்பாபே ,அங்கோலா, நமீபியா ,தென்னாபிரிக்கா , நிக்கரகுவா, வெனிசுலா, பிறேசில் உட்பட பெருவாரியான லத்தீன் அமெரிக்க- கரீபியன் நாடுகளில் நிகழ்ந்த மாற்றங்கள் சீர் திருத்தங்கள் முக்கியமானவை.

அக்டோபர் புரட்சியே சுயநிர்ணயஉரிமை என்ற பதாகையை உயர்த்திப் பிடித்தது.
உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசமக்களே ஒன்று படுங்கள்!!
காலனிநாடுகளின் விடுதலைக்கு அது வழிவகுத்தது .

ஏகாதிபத்தியத்திற்கெதிராக தொழிலாளவர்க்கத் தலைமையில் வௌ;வேறுவர்க்கங்களின் அணி திரட்டலுக்கும் அதுதான் வழிவுகுத்தது. உண்மையில் பனிப்போர் என்பது சோவியத்யூனியனை ஒழித்துக் கட்டுவதற்கு ஏகாதிபத்தியம் நடத்திய போர்.

அதற்குத் தேவையாக இருந்ததெல்லாம் பொதுவுடைமை சித்தாந்தம் தோற்றுவிட்டது என்று நிறுவுவது.

இன்று உலகளாவிய கோடான கோடி வறியவர்கள் பற்றிய பேசப்படுகிறதென்றால் சமத்துவமின்மை தொடர்பான கிளர்ச்சிகள் உலகளாவிய அளவில் நிகழ்கிறதென்றால் அது பிரதானமாக அக்டோபர் புரட்சி போதித்த அறம்.

பாசிசத்தின் வீழ்ச்சியும் பிரதானமாக அக்டோபர் புரட்சியின் இயக்கவியலால் தான் நிகழ்ந்தது. பெருவாரியான மக்கள் பற்றிய சிந்தனை உலகளாவிய அளவில் சாதாரண மக்கள் பற்றிய கரிசனை கொண்ட முற்போக்கு அறிவுஜீவிகள் குழாம் ஒன்றை உருவாக்குவதில் உன்னதமான புரட்சியாளர்களை உருவாக்குவதில், சாதாரண மக்கள் சார்ந்த இலக்கியங்களை சாமானியர்கள் பெரும்பாய்ச்சலாக படைக்கப்படுவதற்கும், கோடிக்கணக்கான பொதுவுடைமை கருத்துக்கள் தாங்கிய நூல்கள் உலகம் முழுவதும் பரவுவதற்கும் இடதுசாரி இயக்கங்களின் உள்ளக கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதற்கும்;சாமானியர்களின் குரல் ஓங்கி ஒலிப்பதற்கும் அதுதான் வழி வகுத்தது.

சோவியத் யூனியன் உலகளாவிய அளவில் கற்றுக் கொடுத்த அறம் இன்றளவில் உலகளாவிய அளவில் நீடித்து நிலவுகிறது.

சோவியத் யூனியன் வீழ்ச்சி அடைந்ததை கொண்டாடுபவர்கள் பாசிசத்தின் வீழ்ச்சியை அவ்வளவாக கொண்டாடுவதில்லை.

பாசிசத்தின் வீழ்ச்சிக்கு அகநிலையில் ஜோர்ஜ் டிமிட்ரோவ் முதல் அன்ரோனியோ கிராம்சி வரை வழங்கிய பங்களிப்பை மறுக்கமுடியாது.

அதவேளை புறநிலையில் சோவியத் யூனியன் ஏகாதிபத்தியத்தை எதிர்கொண்டது.

ஏகாதிபத்தியத்திற்கெதிராக-பாசிசத்திறகெதிராக தொழிலாள வர்க்கமும், தேசிய விடுதலை இயக்கமும் கரங்கோர்க்க வேண்டும் என்ற ஐக்கிய முன்னணித் தந்திரோபாயத்தின் தொடர்ச்சியே பல்கேரிய பொதுவுடைமை இயக்கத்தலைவரான டிமிட்ரோவின் பாசிசத்திற்கெதிரான ஐக்கிய முன்னணி.

சோவியத் யூனியனின் பங்களிப்பும் பாசிசத்திற்கெதிராக போராடி அர்ப்பணித் ஐரோப்பிய மக்களின் தியாகத்தின் விளைவும் தான் இரண்டாம் உலகமகா யுத்தத்திற்குப் பிந்திய கிழக்கு ஐரோப்பா. ஆனால் சோவியத் யூனியன் என்ற கட்டமைப்பு உருக்குலைக்கபட்டதற்கான காரணங்களை நாம் திறந்த மனதுடன் பார்க்க வேண்டும்.

கட்சி அதிகார கட்டமைப்பாக மாறியது. நெகிழ்வுத்தன்மையற்றதாக கெட்டிபட்டுப் போனது. நிரந்தரமாகி சலுகைபெற்ற அணி ஒன்று உருவாகியது.

மறுபக்கம் ஏகாதிபத்திய உலகு சோவியத் கட்டமைப்பை அழிப்பதற்கான முயற்சியில்- சதிவேலைகளில் ஓயாது ஈடுபட்டது.

புதிதாக உலகளாவிய அளவில் உருவான நவதாராளவாதம் எல்லையற்ற சுரண்டலுக்கான கதவுகளை திறப்பதற்காக அசைத்துக் கொண்டிருந்தது.

என்றென்றைக்குமாக பொதுவுடைமைச் சித்தாந்தம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற நப்பாசையில் வரலாற்றின்முடிவு பற்றி பிரான்சிஸ் புக்குஜாமா போன்றவர்கள் பேசுகிறார்கள் .வரலாற்றுச் சக்கரத்தை நிறுத்திவிடலாம் என்று நப்பாசை கொண்ட இத்தகைய பேர்வழிகள் அறிவாளிகள் என காப்பிரேட் உலகத்தால் சித்தரிக்கப்படுகிறார்கள்.

இவர்களை புறந்தள்ளிய நோம் சோம்ஸ்கி போன்ற அறிவாளிளையும் வரலாறு உருவாக்கியிருக்கிறது.

அரசசார்பற்ற நிறுவனங்கள் புற்றீசல் போல் உலகளாவிய அளவில் பரந்தன.

புரட்சி எழுச்சிகள் பொதுவுடைமைச் சித்தாந்தம் செயற்பாடுகள் தலையெடுத்துவிடக் கூடாது என்பதற்காக காப்பிரேட்டுக்களின் நலன்களுக்குப் பாதகமில்லாத அதனை தக்கவைக்கக் கூடிய சீர்திருத்தங்களை இவை சாதாரண மக்கள் மட்டத்தில் மேற்கொண்டன.

முக்கியமாக தோழர் லெனின் வரலாற்று கால கட்ட யதார்த்தங்களுக்கேற்ப கொள்கைநிலைப்பாடுகள்-மூலோபாயம் தந்திரோபாயங்களை வகுத்துச் செயற்பட்டார்.

அக்டோபர் புரட்சியால் உலகளாவிய அளவில் நிறுவப்பட்ட தார்மீக வலுக்கள் தோற்கடிக்கப்படவில்லை.

காப்பிரேட் உலகம் உலகவளங்களை ஈவிரக்கமின்றி சுரண்டித் தீர்ப்பதில் அசுர வேகம் கொண்டுள்ளது.

மனிதப்பேரழிவு மற்று இயற்கை அழிவு அபாயத்தின் விழிம்பை எட்டியுள்ளது.

.இது பற்றிய பிரக்ஞையே இல்லாமல் உலகம் சென்று கொண்டிருக்கிறது.

இந்த விபரிதம் தடுத்து நிறுத்தப்படவேண்டும். காப்பிரேட் உலகம் தோற்கடிக்கபடவேண்டும். “பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை” என்ற நிலை தலை கீழாக மாறவேண்டும்.

யார் சொன்னது அக்டோபர் புரட்சி உலகளாவிய அளவில் தோற்றதென்று ?

அது இன்றளவில் உலகளாவிய சுனாமி என்பதை உலகவரலாறு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. காப்பிரேட்டுகளின் வெற்றி தற்காலிகமானதே.

அவர்கள் உக்ரேனின் ரஸ்சிய எல்லையில் பதட்டத்தை காட்டுவதும் அதனால் தான். ஆகா என்று மீண்டும் யுகப்புரட்சி நடந்து விடுமோ என்ற அங்கலாய்ப்புத்தான்.

சுகு-ஸ்ரீதரன்