மாத்தையா கொழும்பில் தங்கியிருந்த காலங்களில் வெளிநாடுகளிற்கும் போக முடியாமல் புலிகள் கட்டுப் பாட்டின் கீழ் இருந்த தங்கள் சொந்த ஊர்களிற்கும் போக முடியாமல் கொழும்பில் இருந்த மாற்று இயக்கக் காரர்கள் பலரை மாத்தையா பிடித்து கட்டி யாழ்ப்பாணம் போகும் பேருந்துகளில் ஏற்றி அனுப்பிக் கொண்டிருக்க அவர்கள் துணுக்காய் முகாமில் வைத்து விசாரிக்கப்பட்டு பின்னர் கொல்லப் பட்டார்கள்.
இதனை பிரேமதாசா அரசு கண்டும் காணமலும் இருந்திருந்தது அதே நேரம் தமிழர் விடுதலைக் கூட்டணயின் தலைவர் அப்பாத்துரை அமிர்தலிங்கம் அவர்களின் கொலையும் நடந்திருந்தது. அமிரின் கொலையை பிரபாகரனிற்கு தெரியாமல் மாத்தையாதான் செய்தார் இதனாலேயே இரவரிற்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு மாத்தையாவிடம் இருந்த புலனாய்வு பிரிவுப் பொறுப்பை பறித்து பொட்டுவிடம் கொடுத்ததாக பொதுவான கதை ஒன்று பரவியிருந்தது.
அதனை பலர் இன்றும் நம்புகிறார்கள். ஆனால் பிரபாகரனின் கட்டளையின் படியே அமிரின் கொலை நடந்தது. அமிரின் கொலை நடந்தபோது பிரேமதாசாவுடன் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலகட்டம் பிரேமதாசா இராணுவத்தை வெளியேறுமாறு இந்திய இந்தியாவுடன் கடுமையாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணும்வரை இந்திய இராணுவம் வெளியேறக்கூடாது அதற்கான கடப்பாடு இந்திய அரசிற்கு உள்ளது என ராஜுவ் காந்திக்கு அமிர்தலிங்கம் கடிதமொன்றை எழுதியிருந்தார்.
இது பிரேமதாசாவிற்கும் எரிச்சலை கிழப்பியிருந்தது. எனவே அமிரின் கொலையை யாரென்றே தெரியாமல் கனகச்சிதமாக முடித்து விட்டால் பிரேமதாசா அரசால் பிரச்சனை வராது பிரேமதாசாவிடமே சொல்லி அந்த கொலை பற்றி ஒரு விசாரணை குழுவை அமைத்து அதனை அப்படியே இழுத்தடித்து நீத்துப் போகச் செய்யலாம் என்பதே பிரபாகரனின் திட்டமாக இருந்தது .
ஆனால் அந்த கொலையை திட்டமிட்டு செய்யவேண்டிய பொறுப்பு மாத்தையாவினுடையது. இங்கும் பிழைத்தது மாத்தையாவின் திட்டமிடல்தான் அமிரை கொல்வதற்கு வேறு வழிகளை தேடாமல் சுட்டுக்கொல்வதென்று முடிவெடுத்தவர்.
அமிருடன் தொர்புகளை ஏற்படுத்தி பிரேமதாசா அரசுடன் புலிகளிற்கு நடக்கும் பேச்சு வார்த்தைகளில் தமிழ் மக்களின அதிகாரங்களை பெறுவதற்கு அமிர்தலிங்கமும் எம்முடன் இணைத்து போச்சு வார்த்தைகளில் ஈடு படவேண்டும் என கோரிக்கை வைத்தவர் அமிருடன் பேச்சு வார்த்தைகள் நடத்தும் அதே நேரம் அவரை கொலை செய்வதற்கான வழி வகைகளை ஆராயும்படி வடமராச்சி பகுதியை சேர்ந்த விசு என்பவரை மாத்தையா அனுப்பி வைக்கிறார்.
விசு புலிகளின் ஆரம்பகால உறுப்பினர் என்பதோடு புலிகளின் ஆரம்பகால புலனாய்வு பிரிவான வேர்கள் என்கிற அமைப்பின் பொறுப்பாளராகவும் இருந்தவர். ஒரு மேதலில் காயமடைந்தும் இருந்தார்.
இவரிற்கு ஒரு காதலி இருந்தார் அவர் கனடாவில் போய் குடியேறிய பின்னர் விசுவை கனடாவிற்கு அழைப்பதற்காக அனுசரனை கடிதத்தினை அனுப்பிய பின்னர் விசு இயக்கத்தை விட்டு வெளியேறி கனடா போகும் திட்டத்தோடு துண்டு கொடுத்து விட்டு (இயக்கத்தை விட்டு வெளியேறும் கடிதம்) போக மாத்தையாவிடம் கடிதத்தை கொடுத்தபோது விசுவை கனடா போகும் முதல் இறுதியாக இயக்கத்திற்கு ஒரு வேலை செய்யும்படி மாத்தையா கேட்டதால் விசுவும் ஒத்துக்கொண்டு அமிரின் கொலையை செய்து முடிக்க சம்மதிக்கிறார்.
கொலையை செய்து தப்பி கனடா போய் விட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர்களின் திட்டமிடல்களின்படி அமிருடன் விசு ஆரம்ப பேச்சு வார்த்தைகளை தொடங்குகிறான். அமிர்தலிங்கம் தங்கியிருந்த வீட்டிற்கு இரண்டு காவல்துறையினர் காவல் நிற்பார்கள். விசுவும் அவரது இரண்டு நண்பர்களும் உள்ளே போகும் போது காவல் துறையினர் பரிசோதனை செய்த பின்னரேயே அவர்களை உள்ளே போக அனுமதிப்பார்கள்.
தொடர்ச்சியாக சில சந்திப்புக்கள் நடந்து முடிந்ததும் நாங்கள் வரும் போதெல்லாம் எங்களை உருட்டி சோதனை போடுவது எங்களிற்கு அவமானமாகவும் அசெளகரியமாகவும் இருக்கின்றது என விசு அமிரிடம் சொன்னதும் இனி அவர்களை சோதனை போடவேண்டாம் என தனது மெய் பாதுகாவலர்களிற்கு அமிர்தலிங்கம் உத்தரவிட்டிருந்தார்.
அடுத்த தடைவை விசு அமிர்தலிங்கம் அவர்களை சந்திக்கச் செல்லும்போது கைத்துப்பாக்கி ஒன்றை மறைத்து எடுத்தச் சென்று அமிர்தலிங்கத்தின் மெய் பாதுகாவலர்கள் தன்னை சோதனை போடுகிறார்களா இல்லையா என்பதை உறுதி செய்திருந்தார்.மெய்ப் பாது காவலர்கள் விசுவை சோதனை போடவில்லை.
எனவே அடுத்த சந்திப்பில் அமிரை போட்டு விடுவது என முடிவெடுத்தவர் அமிரிடம் அடுத்த தடைவை முக்கிய விடயங்கள் பேசவேண்டும் அத்தோடு சில முக்கிய முடிவுகளையும் எடுக்கவேண்டும் எனவே என்னுடன் வேறு இரண்டு நபர்களும் வருவார்கள் அதே போல தமிழர் விடுதலைக் கூட்டணியில் முடிவெடுக்கும் அதிகாரமுள்ள முக்கியமானவர்களையும் அன்று வரச்சொல்லுங்கள் அதே நேரம் இந்த செய்தியை உங்கள் மெய் பாதுகாவலர்களிடமும் தெரிவித்து விடுங்கள் என்று அமிர்தலிங்கத்திடம் தெரிவித்துவிட்டு சென்றிருந்தார்.
1989 ம் ஆண்டு ஜுலை மாதம் 13 ம்திகதி அமிரை போட்டு விடுவதற்கான நாளை விசு தீர்மானிக்கிறார். தன்னுடன் அலோசியஸ் மற்றும் விக்கி ஆகியோரையும் அழைத்து அவர்களிடமும் ஆளிற்கொரு பிஸ்ரலை உடலில் நன்றாக மறைத்து வைக்கச் சொன்னவர் விக்கி மெல்லிய தோற்றமுடையவன் என்பதால் அவனின் உடலில் யூ.சி ரக தானியங்கி துப்பாக்கியையும் மறைத்து அதற்கேற்றமாறு தொள தொள உடையணிந்து தயாராக அமிர்தலிங்கத்தின் வீடு நோக்கி போய்க்கொண்டிருந்தார்கள்.
அமிர்தலிங்கம் அவர்களும் புலிகள் அமைப்புடன் முக்கிய முடிவுகளை எடுக்கும் கூட்டம் என்பதால் யோகேஸ்வரனையும் சிவசிதம்பரத்தையும் அழைத்து அவர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்து சேர்ந்த விசு குழுவினரிடம் ஏதோ வித்தியசத்தை கவனித்த அமிர்தலிங்கத்தின் மெய் பாதுகாவலர்கள் அவர்களை சோதனை போடவேண்டும் என கேட்க அதனை விசு மறுக்க இவர்களின் வாக்கு வாதத்தின் சத்தத்தை கேட்ட அமிர்தலிங்கம் வெளியே எட்டிப்பார்த்து அவர்களை உள்ளே விடுங்கள் என சொன்னதும் பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே விட்டு விடுகிறார்கள்.
வீட்டின் உள்ளே போயிருந்த விசு குழுவினர் சிறிது நேரம் அமிர்தலிங்கம் குழுவினரோடு பேசுவது போல போக்கு காட்டியபடியே தங்கள் துப்பாக்கிகளை எடுத்து அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோரை நோக்கி சுடத் தொடங்குகிறார்கள்.
சத்தம் கேட்டு அமிர்தலிங்கத்தின் குடும்பத்தினர் ஓடி வந்த அதே நேரம் முதலிலேயே விசு குழுவினர் மீது அமிரின் மெய் பாது காப்பாளர்களிற்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர்கள் வாசல் கதவை விட்டு வீட்டு வசல் அருகிலேயே நின்றிருந்தார்கள். அனைவரையும் சுட்டு விட்டு வெளியே ஓடி வந்தவர்கள் மீது அவர்கள் பதில் தாக்குதலை நடத்த விசுவும். அலோசியசும் அந்த இடத்தில் இறந்து போக விக்கி தன்னிடம் இருந்த யூ சி துப்பாக்கியால் யால் சுட்டபடி வீட்டிற்கு வெளியே ஓடி விட. விக்கி வீதி காவலில் இருந்த ஒரு காவல்துறையை சேர்ந்தவனால் சுட்டுக் கொல்லப் படுகிறான்.
அமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் இறந்து போக சிவ சிதம்பரம் மோசமான காயங்களுடன் உயிர் தப்பி விடுகிறார். விசுவின் உடலை அடையாளம் கண்ட இலங்கை காவல்துறை இதனை புலிகள் செய்ததாக ஆரம்பத்தில் சொன்னாலும் பின்னர் புலிகள் பிரேமதாசா அரசிற்கு கொடுத்த அழுத்தத்தால் குழப்பமான செய்திகள் வெளியாகத் தொடங்கியிருந்தது. காயத்தில் உயிர் தப்பிய சிவ சிதம்பரம் அவர்கள் பேச்சு வார்த்தைக்கு வந்த புலிகள் அமைப்பினரே இதனை செய்தனர் என்று வைத்திய சாலையில் இருந்து அறிவிக்கிறார். சிவசிதம்பரத்தின் அறிக்கையை அடுத்து கொலையை புலிகள் செய்தாகவே உறுதியாகின்றது.
அமிர்தலிங்கத்தின் கொலையை செய்ததற்காக பிரபாகரன் மாத்தையாவோடு முரண்படவில்லை. செய்யச் சொன்ன கொலையை சரியாக செய்யவில்லை என்னதாலேயே இருவரிற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. அன்றைய தப்பாக்கி சூட்டில் இறந்து போயிருந்தால் துரோகியாகியிருக்கவேண்டிய சிவ சிதம்பரம் அவர்கள் காலம் தாழ்த்தி காலமானதால் மாமனிதர் ஆகியிருந்தார். துரோகிகள் போட்டுத் தள்ளுங்கள் என கட்டளையிட்ட பிரபாகரனே இந்த மாமனிதர் பட்டத்தை வழங்கி கெளரவித்திருந்தார்.