இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதை நோக்கி முயற்சிக்க ஏதாவது வழியுண்டா! (கடிதத் தொடர் – 4)

அன்பார்ந்த நண்பர்களே!
ஆற்றல் மிகு தோழர்களே!

மாகாண சபைகளுக்குரிய சட்ட மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் தொடர்பாக அரசியல் யாப்பிலும் மற்றும் வேறு வகையாகவும் சட்டங்களால் வழங்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் பற்றியும் அவற்றை யதார்த்தத்தில் நடைமுறைகளாக ஆக்குவது தொடர்பாக இலங்கையிலுள்ள மத்திய அரசாங்கமும் மாகாணத்திலுள்ள சபைகளும் மாகாண அமைச்சரவைகளும் என்ன செய்கின்றன? எப்படிச் செயற்படுகின்றன? இதுகாலவரை எவ்வாறு செயற்பட்டு வருகின்றன? என்பன பற்றிய பல்வேறு தொடர் கேள்விகளை இங்கு எழுப்ப வேண்டியுள்ளது.

மாகாண சபைகளை உருவாக்கிய சட்டங்களில் முரண்பாடுகளும் குறைபாடுகளும் இருக்கின்றன என்பதை திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருப்பது மட்டும் போதியதல்ல.. அதற்கும் மேலாக சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்களது அரசாங்கம் உட்பட இலங்கையின் மத்தியில் இதுவரை இருந்து வந்துள்ள அத்தனை அரசாங்கங்களும், இந்த மாகாண சபைகளை செயற்பட வைப்பதில் அக்கறை காட்டாதது மட்டுமல்ல அவற்றை செயற்பட முடியாமல் முடக்குவதற்கு பெரும்பாலும் காரணமாக இருந்து வந்திருக்கிறார்கள். இப்போதுள்ள மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கம் எல்லோரையும் விட பலபடி முன்னே போய் இந்த மாகாணசபைகள் எதற்காக உருவாக்கப்பட்டனவோ அந்த அர்த்தத்துக்கும் தேவைகளுக்கும் கொஞ்சமும் பொருந்தி விடா வகையில் அவற்றை வெறும் கோதுகளாக்கி பார்வைக்கு வைத்திருக்கின்றது என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமில்லை. எனவே அதனை மீண்டும் மீண்டும் நாம் இங்கே அரைத்து அசை போட்டுக்; கொண்டிருப்பதில் எந்தவித பிரயோசமும் இல்லை.

மக்களிடம் வாக்குகளைப் பெற்றவர்களே
அளித்த சத்தியத்தின்படி செயற்பட வேண்டும்.
13வது திருத்த அரசியல் யாப்பு சட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை, அதை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என தமிழர்களிற் பல தலைவர்கள் அவ்வப்போது அறிக்கை விடுகிறார்கள்;, இந்தியா, அமெரிக்கா என உலகின் சக்திமிக்க நாடுகளும் அவ்வாறே கோருகின்றன. ஜெனீவாவின் தீர்மானங்களும் அதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளன. அவ்வாறு சொல்லுகின்ற நபர்களும் நாடுகளும் தாங்கள் எழுப்பும் அந்தக் கோரிக்கைக்கான முழுமையான அர்த்தம் என்ன என்று புரிந்துதான் குரல் கொடுக்கிறார்கள் என்று சொன்னால் அதனை நான்; நம்பத் தயாராக இல்லை. ஏன் என்று கேட்காதீர்கள் அது நீண்ட பதிலைக் கொண்டது.
மாகாண சபைகள் முறையாகச் செயற்படவில்லை, அரசாங்கம் அவற்றை முழுமையாகவும் முறையாகவும் செயற்பட வைக்கவில்லை – செயற்படவிடவில்லை என்ற குரல்கள் சிங்கள மக்கள் மத்தியிலிருந்தும் – தென்னிலங்கையிலுள்ள இடதுசாரிக்கட்சிகள் அனைத்தும், ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள்pற் பலர், அனைத்து மாகாண சபைகளிலும் எதிர்க் கட்சி வரிசையில் இருக்கும் உறுப்பினர்களிற் பெரும்பாலானவர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பலர், பெரும்பாலான சமூக நிறுவனங்கள் என பெருந்தொகையானோர் – அவ்வப்போது குரலெழும்புவதையும் நாம் அறிவோம். அந்தக் குரல்கள் புலிகளின் அழிவுக்குப் பின்னர் அரசாங்கத்தை நோக்கி “இன்னமும் ஏன் காலதாமதம்?”; என்ற கேள்வியையும் சேர்த்தே ஒலிக்கின்றன.
இந்தக் கடிதத்தில் நான் பிரதானமாக குறிப்பிட முனைவது என்னவென்றால்:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்களிடம்தான் தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளுக்கான – அரசியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காணவும் அவற்றைச் சாதிக்கவும் வேண்டிய ஆணையை ஜனநாயகபூர்வமாக வழங்கியிருக்கிறார்கள் – அதை அவர்கள் மக்களிடம் கேட்டே பெற்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றி தங்களோடு;தான் அரசாங்கம் பேச வேண்டும் என்று பிடிவாதமாதமாகவே உள்ளனர். தங்களது ஒப்புதலோடு மட்டும்தான் – ஒத்துழைப்போடுதான் எதையும் அரசாங்கம் செய்ய வேண்டும் என ஏகபிரதிநிதித்துவ உரிமையும் கோருகிறார்கள். மறுபக்கம் அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்களைத் தவிர வேறு எந்தத் தமிழ்ப்பிரதிநிதிகளோடும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றி பேசுவதற்குத் தயாராக இல்லை என்பதும் வெளிப்படை.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்களோ தம்மோடு தமது நிபந்தனைகளுக்கு அமைய அரசாங்கம் பேச வரவில்லை – தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணங்கி வரவில்லை என்று கூறுவதிலேயே தமது அறிக்கை அரசியலைத் தொடர்கிறார்கள். அவ்வாறு கூறிக் கொண்டு டெல்லிக்காரர்களிடம்; தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடித்தரும்படி தைப்பூசத்துக்கு ஒரு தடவையும் ஆடி அமைவாசைக்கு இன்னொரு தடைவையும் என கோரிக்கை விடுக்கிறார்கள்.

எந்த நாட்டவராக இருந்தாலும் – அவர்கள்
தங்கள் நிலையிலிருந்தே எதனையும் சிந்திப்பார்கள்

இலங்கையின் வடக்கு-கிழக்குக்கும் யாழ்ப்பாணத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்களே டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பாலானவர்கள், அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் உள்ள பலரும் அவர்களின் தீவிர ஆதரவாளர்களிற் பெரும்பாலானவர்களும் இந்தியா தனது தேசிய நலன்களையே பிரதானமாகக் கொண்டு செயற்படுகின்றது என்கின்றனர் – அது இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை இரண்டாம் பட்சமாகவே பார்க்கிறது என்று அடிக்கடி தமது பற்களையும் நறுமிக் கொள்கின்றனர்.
டெல்லி அரசியலில் உள்ள பெரும்பான்மையானவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்களின் அரசியற் பாஷை புரியவும் மாட்டாது.
இங்கே முன்னாள் இராணுவ அதிகாரி ஆளுநராக இருக்கிறார் என்று சொன்னால் அது அவர்களுக்கு ஓர் அரசியற் தவறாகத் தெரியாது ஏனென்றால் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தியாவிலும் முன்னாள் இராணுவ அல்லது பொலிஸ் அதிகாரிகள் ஆளுநர்களாக நியமிக்கப்படுகிறார்கள்;.
அவர்களிடம் இங்கே தமிழர்களின் பிரதேசங்களில் பெரிய பெரிய இராணுவ முகாம்களை அரசாங்கம் கட்டுகிறது, அதற்காக தமிழர்களின் காணிகளை எடுக்கிறார்கள் என்று கூறினால், அதில் என்ன தவறு என்றே கேட்பார்கள் ஏனெனில் இந்தியாவில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் எல்லா மாகாணங்களிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலத்தை உள்ளடக்கிய இராணுவ நகரங்கள் (கன்ரோன்மென்ற்கள்) உள்ளன. சென்னையில் தமிழ்நாடு சட்டசபை வளாகம்; அமைந்துள்ள சென்ஜோர்ஜ் கோட்டையில் முக்கால்வாசியும் கிண்டி மற்றும் மீனம்பாக்கத்தில் அரைவாசியும் இராணுவத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டே உள்ளன.
இலங்கையின் வடக்கு கிழக்கில் சிங்களவர்களை அரசாங்கம் குடியேற்றப்பார்க்கிறது என்றால் அவர்கள் சென்னையில் வசிப்பவர்களில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழர்களே அல்ல என்பார்கள்.
இப்படி இலங்கைத் தமிழர்களால் எழுப்பப்படும் பல்வேறு பிரச்சினைகளை அவை ஒரு பிரச்சினையா? இலங்கையிலுள்ள தமிழர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து சென்றவர்கள்தானே? என்றே இந்தியாவில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் உட்பட இந்தியாவின் பெரும்பான்மையினர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்;.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளில் உள்ள நியாயங்களை இங்கு நான் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. அந்தப் பிரச்சினைகளை தமிழர்களின் “தேசியத் தலைவர்கள்” என்போர் எவ்வாறு இந்திய மக்கள் மத்தியிலும் சர்வதேச சமூகங்கள் மத்தியிலும் முன்வைக்கின்றார்;கள் என்பதே இங்கு கேள்விக்குரியதாகும்.
தமிழர்களின் பிரச்சினைகளில் உள்ள நுட்பமான வேறுபாடுகளை மற்றைய நாட்டவர்கள் யாராயிருந்தாலும் அவர்களது காலத்தையும் நேரத்தையும் செலவழித்து மூளையைக் கசக்கி பிழிந்து புரிந்து கொள்ளப் போவதில்லை. இலங்கையில் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள், அடித்து விரட்டப்படுகிறார்கள், தலைவர்களும் பிரமுகர்களும் சிறைகளில் ஆயிரக் கணக்கில் அடைக்கப்படுகிறார்கள்,; என்றால் அதனையே இலகுவாகப் புரிந்து கொள்வார்கள்.
ஏமாற்றுபவர்களை நம்பினால் எமாறுவதே தலைவிதி
கடந்த மூன்று வருடங்களாக ஐரோப்பா, அமெரிக்கா என்று கூட்டம் கூட்டமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்கள் அடிக்கடி போய் வருகிறார்கள.; தங்களை அமெரிக்க அரசாங்கம் அழைத்திருக்கிறது: இங்கிலாந்துப் பாராளுமன்றம் கூப்பிட்டிருக்கின்றது: ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றக் கேட்கிறார்கள் என்று சென்று வருகிறார்கள்: அந்த நாடுகளின் அதிகாரிகளையும் சந்தித்து உரையாடி வருகிறார்கள். ஆனால் அந்த நாடுகளின் அரசியற் தலைவர்கள் – அதிகாரிகளிற் பெரும்பான்மையோர் இலங்கை தொடர்பான எவ்வகையான அக்கறைகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பது கேள்விக்குரியதே.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டுக்கு வந்த கமறூன் வந்த இடத்தில் உதயன் பத்திரிகை காரி;யாலயத்தையும் யாழ்ப்பாணத்திலுள்ள அகதி முகாமொன்றையும் பார்க்க வந்ததால் இலங்கையின் இனப்பிரச்சினைக்களுக்குத் தீர்வு காண்பதற்கு – தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு கடவுளையோ நிலத்துக்குக் கூட்டி வந்துவிட்டது போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றனர்.
ஐயன்னாநாவன்னாவின் (ஐ.நா வின்) மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையில் காரியாலயம் அமைத்து இங்கு நடந்து முடிந்த மற்றும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களை அவதானித்து தகவல்கள் திரட்டி சமர்ப்பிக்க வேண்டும் என ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு இனியொரு குறையும் இருக்காத – எந்தப் பிரச்சினையும் இனி ஏற்பட முடியாத ஒரு நிலையைத் தாங்கள் ஏற்படுத்திவிட்டது போன்றதொரு நம்பிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்கள் தமிழர்களுக்கு வழங்கப் பார்க்கிறார்கள். தாங்கள் சொல்லித்தான் – தங்களைக் கேட்டுத்தான் அமெரிக்கா அந்தத் தீர்மானத்தை ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டுக்குக் கொண்டு வந்தது போலவும், அதனை தாங்கள் சுவிற்சர்லாந்துக்குப் படையெடுத்துச் சென்று வலியுறுத்தியபடியாற்தான் நாடுகள் அதனை அங்கீகரித்தன என்பது போலவும் படம் காட்டும் அறிக்கைகளை ததேகூக்காரர்கள் அடிக்கடி விடுக்கிறார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவிடம் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வ காண்பதற்கு ஒத்துழைப்புத் தாருங்கள் என்று கோரக் கூடாது என்றோ அல்லது சர்வதேச சமூகங்களின் கவனத்திற்கும் அக்கறைக்கும் இந்த விடயங்களை முன் கொண்டு செல்லக்கூடாது என்றோ நான் இங்கு கூறவில்லை.

உழுத்துப்போனன உலக்கையைக் கொண்டு
ஒரு பிடி அரசியைக் கூட மாவாக்க முடியாது

இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு தராமல் – இலங்கை அரசாங்கம் காலத்தைக் கடத்துவதிலும், பிரச்சினைகளைத் திசை திருப்புவதிலும், இரண்டு லட்சம் இராணுவமும் எல்லையற்ற அதிகாரங்களும் கையிலிருப்பதால் அகங்காரம் கொண்டவர்களாக சட்டங்களைத் தமது விருப்பப்படி வசப்படுத்தியும் தூக்கியெறிந்தும் விட்டு மக்களின் நியாயமான அபிலாஷைகளைப் புறக்கணித்துக் கொண்டு செயற்படுவதிலும் பிடிவாதமாக உள்ள இந்த தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட இலங்கையின் அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்தியா, சர்வதேச நாடுகள் எனச் செல்வதுவும் அணுகுவதுவும் தவிர்க்க முடியாததே.
இந்நாள் ஜனாதிபதி மஹிந்த அவர்களும் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் எதேச்சாதிகார ஆட்சியின் போது நடந்த கொடூரங்களுக்கு எதிராக நீதி கேட்டு ஜெனீவா சென்று முறையிட்ட ஒருவர்தான்.
ஆனால், இங்கு எனது பிரதானமான அரசியற் கேள்வி என்னவென்றால், இந்தியா சர்வதேசங்கள் என பயணங்கள் புரியும் தமிழ்த் தேசியக்காரர்கள், அதேயளவு அக்கறையை இலங்கைக்குள் ஏன் காட்டவில்லை என்பதுதான். உள்ளுரில் உழாத மாடு வெளியூரில் மட்டும் உழுது விடுமா என்று தமிழில் ஒரு பழம்பெரும் கேள்வியுண்டு. இலங்கைக்கு உள்ளேயே இருக்கிற சிங்கள அரசியற் தலைவர்கள், சிங்களப் பேராசிரியர்கள், சிங்கள வக்கீல்கள், சிங்கள எழுத்தாளர்கள், சிங்களக் கலைஞர்கள்;, சிங்கள சமூக நிறுவனங்கள், சிங்கள மதத் தலைவர்கள் போன்றவர்களின் மத்தியில் ஆதரவு தேட வேண்டும் – அவர்களின் அநுதாபத்தைத் திரட்ட வேண்டும் என்ற அக்கறையும் உண்மையான தொடர்ச்சியான ஈடுபாடும் ஏன் தமிழ்த் தேசியக்காரர்களிடம் இல்லை?
தமிழர்களின் உண்மையான நிலைமையையும் தமிழர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களையும், அவை இலங்கையில் வாழும் தமிழர்கள் கௌரவமாகவும், பாதுகாப்போடும், சமநீதியோடும் வாழுவதற்கே தவிர இலங்கையைப் பிரிப்பதற்கோ அல்லது சிங்களவர்களின் வாழ்வாதாரத்தை எந்தவகையில் அச்சுறுத்துபவை அல்ல என்ற அபிப்பிராயத்தை சிங்கள மக்களிற் பெரும்பான்மையினருக்குத் தெரிய வைக்கும் – புரிய வைக்கும் விதமாக பிரச்சாரங்களை முன்னெடுக்கும் செயற்திட்டங்களில் ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஈடுபாடு காட்டுவதில்லை. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்த்திரேலியா எனத் திரியும் இவர்கள் அதே அளவு அக்கறைகளையும் ஈடுபாட்டையும் இலங்கையி;ல் வாழும் மக்கள் மத்திலும் அரசியற் சக்திகள் மத்தியிலும்; ஏன் காட்டவில்லை?
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது புலிகளை அறவே அடியோடு அழித்து முடிப்பதற்குத் தலைமை தாங்கிய முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவை ஜனாதிபதியாக்க முயற்சித்தார்கள் -: யாழ்ப்பாணத்தில் ஒரு தடவை ரணில் விக்கிரமசிங்காவுடன் கை கோர்த்து சிங்கக் கொடியையும் ஏந்தினார்கள். இப்படிப்பட்டவர்கள் ஏன் பரந்துபட்ட அளவில் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களின் நியாயமான செய்திகள் சென்றடைவதற்குத் தேவையான வேலைகள் எதனையும் செய்வதில்லை – சிங்கள முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளோடு சேர்ந்து நாட்டின் பொதுப் பிரச்சினைகளில் அக்கறையோடு ஈடுபாடு காட்டுவதில்லை – சிங்களத் தலைவர்களை – அறிவுஜீவிகளை தமிழர்களின் பிரச்சினைகளில் காத்திரமான ஈடுபாடு கொள்ளச் செய்யும் வேலைத்திட்டங்களை ஏன் ஒரு பெரிய அளவில் திட்டமிட்டவகையாக, தொடர்ச்சியான நடவடிக்கைகளாக மேற்கொள்வதில்லை?.
இவை அவசியமற்றவையா? தமிழ் மக்களுக்குப் பயன் தரமாட்டாதவையா? அல்லது தமிழ்த் தேசியக்காரர்களுக்கு தனிப்பட்டரீதியில் பயனற்றது – பணம் தராது – அவர்களது அரசியலுக்கு அவசியமற்றது – வெளிநாட்டுப் புலிகளின் கோபத்துக்கு உள்ளாக நேரிடும் என்பவையாலா?
இந்த விடயத்தினை அடுத்த கடிதத்திலும் தொடருவோம்

இப்படிக்கு
உங்கள் அன்பிற்குரிய – தோழமைக்குரிய
அ. வரதராஜப்பெருமாள்