இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதை நோக்கி முயற்சிக்க ஏதாவது வழியுண்டா! (கடிதத் தொடர் – 5)

அன்பார்ந்த நண்பர்களே!
ஆற்றல் மிகு தோழர்களே!

மஹிந்த அவர்களின் தலைமையிலான இன்றைய அரசாங்கம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்;கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அப்படியே நாம் ஏற்றுக் கொள்வதாகவே வைத்துக் கொள்வோம்: அதாவது

  1. அரசாங்கம் மாகாண சபைகளுக்கு உரிய அதிகாரங்களையும் வளங்ளையும் தரவில்லை – தரத்தயாராக இல்லை, அத்துடன் நம்பமுடியாத நாடாளுமன்றத் தெரிவுக் குழுவைக் காரணம் காட்டி இந்த அரசாங்கம் அரசியற் தீர்வுக்கான எந்த முயற்சியையும் முன்னெடுக்காமல் வேண்டுமென்றே காலத்தைக் கடத்துகிறது:
  2. நாட்டிலுள்ள இரண்டு லட்சம் ஆமிக்காரர்களில் ஒன்றரை லட்சம் பேரை அரசாங்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களிலேயே வைத்திருக்கிறது. அவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கம் அரசாங்கத்துக்குக் கிடையாது, பொதுமக்கள் விடயங்களிலோ அல்லது சிவில் நிர்வாகங்களிலோ தலையிடாமல் அவர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் நோக்கமும் இந்த அரசாங்கத்துக்கு இல்லை:
  3. அரசபடைகளில் கமாண்டர்களாக இருந்த முன்னாள் அதிகாரிகளையே தொடர்ந்தும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆளுநர்களாக வைத்திருக்கும் அரசாங்கம் அதில் எந்த மாற்றத்தையும் செய்யத் தயாராக இல்லை:
  4. வடக்கு கிழக்கு மாகாணங்களில் பரவலாக பெரும் நிலப்பரப்புகளை சுவீகரித்து ஆயிரக்கணக்கான இராணுவக் குடியிருப்புகளை உள்ளடக்கியதாக அரசாங்கம் பெரிய பெரிய இராணுவ நிர்வாக நகரங்களைக் கட்டியெழுப்பி வருகின்றது:
  5. யாழ்ப்பாணத்திலுள்ள வலிகாமம் பிரதேசத்திலும் மற்றும் திகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூரிலும் அரசாங்கம் வலுக்கட்டாயமாக கைப்பற்றி உருவாக்கிய பாதுகாப்பு வலயங்களை விட்டு வெளியேறாமல், அவற்றை நிரந்தரமாக வைத்திருக்கும் நோக்குடனேயே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இதனால் கடந்த இருபந்தைந்து வருடங்களாக அகதி முகாம்களில் பெரும் சிரமங்களுடனும் சீரழிவுகளுடனும் வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான வலிகாம மக்களும், கடந்த ஏழு வருடங்களாக அவ்வாறு வாழ்ந்து வரும் சம்பூர் மக்களும்; மீண்டும் அவரவரது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்று வாழுவதற்கு அனுமதிக்காமல் சாக்குப் போக்குகள் சொல்லி அரசாங்கம் காலம் கடத்தி வருகின்றது
    இப்படியாக மேலும் பல குற்றச்சாட்டுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ச்சியாக அரசாங்கத்துக்கு எதிராகக் கூறிவருகின்றனர். கூட்டமைப்பினரின் இந்தக் குற்றச்சாட்டுகள் முழுமையாகச் சரியானவையா? எந்த அளவுக்கு மட்டும் சரியானவை? என்பவை பற்றியதல்ல எனது கேள்விகள்.
    இவை பற்றி தமிழர்களுக்கு விடாப்பிடியாக உசுப்பேத்தும் – உணர்ச்சி பொங்க வைக்கும் மேடைப் பேச்சுக்களை முழங்குவதால், அல்லது யாழ்ப்பாணப் பத்திரிகைகளில் சிங்கள எதிர்ப்பு வெறியை ஏற்றுகின்ற அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருப்பதால் தேர்தல் ஒவ்வொன்றின் போதும் வாக்குகளை ததேகூக்காரர்கள் அள்ளுகொள்ளையாகப் பெற்றுக் கொள்ளமுடியும். ஆனால் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியுமா – இவர்கள் அவற்றுக்காக நடைமுறையில் ஏதாவது உருப்படியாக செய்கிறார்களா? இவர்கள் கடைப்பிடிக்கும் அணுகுமுறையினூடாக தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கான அரசியற் தீர்வை அடைய முடியுமா – சாதிப்பார்களா?

தென்னிலங்கையிலிருந்து எழும் ஆதரவுக்குரல்கள் பற்றி
தமிழர்கள் அக்கறை கொள்ள வேண்டும்

இந்த நாட்டில் மக்களின் மனித உரிமைகள் சரியான முறையில் மதிக்கப்படவில்லை என்றும்,
இனம் மதம் மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் இங்கு மக்கள் ஒவ்வொருவரினதும் அடிப்படைச் சுதந்திரங்கள் பாதிக்கப்படா நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும்,
இந்த நாட்டில் இனம் மதம் சாதி என்ற வேறுபாடுகளின்றி சமத்துவம் பேணப்பட வேண்டும் என்றும்,

அவை இந்த நாட்டின் சட்டங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும் அவை நடைமுறையில் பாரபட்சமாகவே – பிழையான முறையிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்றும்,
வடக்கு-கிழக்கு தமிழர்களின் மத்தியிலிருந்து மட்டும்தான் குரலெழுப்பப்படுகிறதென்றில்லை. அதே போலவே தென்னிலங்கையிலுள்ள சிங்களத் தலைவர்கள் மற்றும் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள சமூக சக்திகள் மத்தியிலிருந்தும் இவைகள் பற்றி வலுவாகவே குரல்கள் எழுப்பப்படுகின்றன என்பதை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது.

இங்கு மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜேவிபியினர்) அதிகாரப் பகிர்வு விடயத்தில் வேறுபாடான கருத்தைக் கொண்டிருந்தாலும், அவர்கள் உட்பட பெருந்தொகையான சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் தொடர்ந்து குரலெழுப்புவதை அனைவரும் அறிவோம்.

மஹிந்த தலைமையிலான மத்திய அரசாங்கமானது நேரடியாகவும் மறைமுகமாகவும் மாகாண சபைகளுக்கு அரசியல் யாப்பின் மூலமாக வழங்கப்பட்டுள்ள சட்டவாக்க அதிகாரங்களைப் பிரயோகிக்க விடாமல் முட்டுக்கட்டைகள் போடுவதோடு;, மாகாண அரசாங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்களையும் செயற்படுத்த விடாமல் பல தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றமை வெளிப்படையானதே.

அவ்வாறான செயற்பாடுகள் நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட சட்டங்களுக்கு முரணாணது எனவும் எனவே மத்திய அரசாங்கம் மாகாண சபைகளையும் அவற்றின் ஆட்சி நிர்வாகங்ளையும் முழுமையாக செயற்படும் வகையாக அனுமதிக்க வேண்டும்: அத்துடன் அவற்றிற்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் மத்திய அரசாங்கம் மாகாண ஆட்சிகளுக்கு வழங்க வேண்டுமெனவும் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல தென்னிலங்கைக் கட்சிகளின் தலைவர்களும் முற்போக்கான சிந்தனைகள் கொண்ட பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள், சட்டத்தரணிகள், சமூக நிறுவனங்கள், தொழிலதிபர்கள் என பெருந்தொகையானோர் தொடர்ந்து குரலெழுப்பி வருவதையும் எழுதி வருவதையும் தத்தமது அமைப்புக்களின் தீர்மானங்கள் மூலம் இலங்கை அரசை வற்புறுத்தி வருவதையும் நாம் அறிவோம்.

தெவிநெகும சட்டமூலமானது மாகாணசபைகளுக்கு எதிரானது, எனவே அது சட்டவிரோதமானது என்ற தீர்ப்பை அளித்தபடியாற்தான் இலங்கையின் உச்சநீதியரசராக இருந்த திருமதி சிராணி பண்டாரநாயக்கா அவர்கள் தமது பதவியையே இழக்க நேரிட்டது. அந்த எண்ணப்பாட்டிலிருந்து மஹிந்த அரசு இன்னமும் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.

இந்த அரசாங்கமானது நாட்டின் அரச நிர்வாகம் முழுவதையும் இராணுவமயமாக்க முயற்சிக்கின்றது, இராணுவ நிர்வாகங்களைக் கொண்ட பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பப்பார்க்கிறது எனவும் பொலிஸாரால் கையாளப்பட வேண்டிய விடயங்களையெல்லாம் அரசாங்கம் இராணுவத்தை ஈடுபடுத்தி கையாள்கிறது: அதன் மூலம் மக்கள் அனைவரையும் ஓர் அச்ச நிலையில் வைத்திருக்கிறது எனவும் பல குற்றச்சாட்டுக்கள் தென்னிலங்கையில் வலுவாக எழுந்து விரிவு பெற்று வருவதைப் பார்க்கிறோம்.

ஐக்கிய முன்னணிக்காரர்களில் ஒரு பகுதியினரும், சரத் பொன்சேகா அவர்களின் கட்சிக்காரர்களும், ஜே.வி.பிக்காரர்களும்; மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் வேறுபட்ட கருத்துக்களை – நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்ற போதிலும் வடக்கு கிழக்கு மாகாண மக்கள் இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் – அடக்கப்பட்டதோர் நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற கருத்தையே கொண்டிருக்கிறார்கள், அது பற்றி அவர்கள் அவ்வப்போது அறிக்கை விடுகிறார்கள் – நாடாளுமன்றத்திலும் தொடர்ச்சியாகப் பேசுகிறார்கள். அவர்களும் வடக்கு – கிழக்கில் குவிக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினரின் அளவை அரசாங்கம் குறைக்க வேண்டுமென்றே கோரி வருகிறார்கள்,

வடக்குகிழக்கில் தவிர்க்கமுடியாத காரணங்களால் இராணுவத்தினர் தொடர்ந்து நிலை கொண்டிருக்க வேண்டியுள்ளதாயினும்;; வடக்குகிழக்கின் சிவில் நிர்வாகங்களில் எந்த வகையிலும் தலையீடு செய்யாமல் இருக்கும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் என அரசைக் கோருகின்றனர். பாதுகாப்பு நெருக்கடி என்ற ஒரு நிலையைத் தவிர மற்றப்படி இராணுவத்தினர் முகாம்களுக்கு உட்பட்டவர்களாகவே இருக்க வேண்டுமென அவர்கள் உரத்துக் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்தத் தென்னிலங்கைத் தலைவர்களும் அவர்களின் கட்சிகளும் வடக்கு கிழக்கில் உள்ள இராணுவமயமாக்கம் இலங்கையின் அரசியல் பொருளாதாரம் முழுவதையும் இராணுவ மயமாக்குவதன் ஒரு பகுதி என்றே கருதுகிறார்கள். அதனால் அதனை முளையிலேயே தடுத்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கிறார்கள்.

தனது சகோதரர்களை துணைக்கு திரட்டாத தமிழன்
சர்வதேசங்களின் சந்திகளில் ஒப்பாரி வைத்து திரிகிறான்
இப்படியுள்ள ஒரு நாட்டில் ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தென்னிலங்கை சக்திகளிடம் தமது கோரிக்கைகளை முறையாகவும் தெளிவாகவும்; கொண்டு செல்லவில்லை? ஏன் தென்னிலங்கை சக்திகளை – தலைவர்களை அடிக்கடி வடக்கு கிழக்கின் பல்வேறு பாகங்களுக்கும் அழைத்து தமிழர்களின் உண்மையான நிலைமைகளை அவர்கள் நேரடியாக முழுமையாகத் தெரிந்து கொள்வதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதில்லை?

பொதுமக்களின் நலன்கள் தொடர்பான இலக்குகளை இலட்சியமாகக் கொண்ட ஓர் இயக்கத்தின் தலைமையானது தனது அணியின் உள்ளடக்கமாக உள்ள அவசியமான அம்சங்கள் அனைத்தையும் தொடர்ந்து வளப்படுத்திக் கொண்டும், பலப்படுத்திக் கொண்டும் இருக்க வேண்டும் என்பதோடு தனக்குத் துணையாக இருக்க வேண்டிய – திரட்டிக் கொள்ள வேண்டிய – திரண்டு வரக் கூடிய சக்திகளை நோக்கி தனது வேலைத் திட்டங்களை தொடர்ந்து விரிவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

அவ்வாறு துணையாக இருக்கக் கூடிய சக்திகளிற் சில குறுகிய காலத்துக்கு மட்டுமே – ஒரு குறிப்பிட்ட கட்டம் வரைக்குமே இணைந்து செயற்படுவதாக இருக்கும், ஏனையவை சில நீண்ட காலத்துக்கு தொடர்ந்து அணைந்து பயணிக்கும். இந்த அடிப்படை அரசியற் சூத்திரமானது கௌட்டில்யன் மற்றும் திருவள்ளுவர் காலத்துக்கு மட்டுமல்ல இன்றைய காலத்துக்கும் மேலும் நாளைய காலத்துக்கும் பொருத்தமானதே.

இலங்கைவாழ் தமிழர்களுக்கு இன்றிருக்கும் நெருக்கடிகளின் விளைவாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா என தமக்கு ஆதரவு தேடி அலைவதைத் தவறு என்றோ பயனற்றது என்றோ இங்கு நான் கூறவில்லை. இங்கு எனது கேள்வி என்ன வென்றால், இந்த இலங்கையில் தோழர்களாக, நண்பர்களாக, சகோதரர்களாக இருக்கின்ற – இருக்கக் கூடிய சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளை உதவிக்கு வாருங்கள் என்றோ, ஆதரவு தாருங்கள் என்றோ, சேர்ந்து அணி திரளுங்கள் என்றோ இங்கு ஏன் த. தே. கூ காரர்கள் கேட்பதில்லை – தேடுவதில்லை – நாடுவதில்லை என்ற கேள்வியை இங்கு வலியுறுத்திக் கேட்க விரும்புகிறேன்.

தமிழர்களின் நிலை கண்டு அனுதாபப்படுகின்ற சிங்களத் தலைவர்களை – சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளை அடிக்கடி சாரிசாரியாகக் கூட்டி வந்து “எங்கள் மக்களைப் பாருங்கள்”, “எங்கள் நிலையைப் பாருங்கள்”, “எங்கள் மக்களின் இந்த சிக்கலான சிரமமான நிலை பற்றி சிங்கள மக்களிடம் கொண்டு செல்லுங்கள் – பரந்து பட்ட சிங்கள மக்களுக்கு இவற்றைத் தெரியப் பண்ணுங்கள்” என சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் நிலை தொடர்பாக ஒரு சரியான புரிதலை ஏற்படுத்த – அதனூடாக அவர்களது அனுதாபங்களை – ஆதரவை திரட்டுவதற்கு ஏன் தமிழ் தேசியர்கள் முயற்சிப்பதில்லை.

மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் முறையாகவும் முழுமையாகவும் வழங்கப்பட வேண்டும் எனக் கருதும் சிங்களவர்களையும் தமிழர்களையும ஆயிரக்கணக்கில் திரட்டி அரசாங்கத்தை சரியான நிலை நோக்கி இணங்க வைக்கும் வலுவான ஒருங்கிணைந்த வன்முறையற்ற போராட்டங்களை – ஆர்ப்பாட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவதற்கு முயற்சித்ததாக இன்றுள்ள தமிழ்த் தலைவர்களுக்கு எந்த வரலாறும் கிடையாது.

புலிகள் இருக்கும் வரை அவர்கள் விடவில்லை, அதனாலேயே அது சாத்தியமாகவில்லை எனக் காரணம் கூறிக் கொள்ளலாம். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னதான் தடை? புத்து லட்சம் தமிழர்களின் வாக்குகளில் ஒன்றைக்கூட சிதறவிடாமல் அள்ளிக் குவித்து வாங்கிவிட வேண்டும் என்று கர்ணகடூரமாக முயற்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஒரு பத்தாயிரம் பேரைத் திரட்ட முடியாமலா இருக்கின்றது. உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒன்றரை லட்சம் தமிழர்களை யுத்தத்தில் பலி கொடுத்த இவர்களால் ஒரு பத்தாயிரம் பேரை வன்முறையற்ற போராட்டத்துக்கு வீதியில் இறக்கமுடியாதா? அதற்கு இவர்கள் முதலில் தம்மை அர்ப்பணித்து செயற்படத் தயாராக இருக்க வேண்டுமே!

இங்கு தமிழர் வாழ்வு எக்கேடு கெட்டாலென்ன – அரசுக்கெதிராக
தமிழர்களை எப்போதும் சூடேற்றி வைத்திருப்பதே தமிழ்த் தேசியம்

மாகாண சபைகளுக்கு போதிய அளவு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும், மாகாண சபைகள் அர்த்தமுள்ளவைகளாக மக்களுக்குச் சேவை செய்யும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற அக்கறை கொண்ட சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் உள்ளனர். அவ்வாறான சிங்கள மாகாண சபை உறுப்பினர்களாக நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளனர். அவர்களையெல்லாம் பேராளர்களாக அழைத்து ஒரு மாநாட்டை நடத்தி மாகாண சபைக்குரிய அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஒரு பேரியக்கத்தை இலங்கை தழுவிய வகையில் எழுச்சி பெறச் செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்;பினரால் முடியும். அவ்வாறான எந்தவொரு முயற்சியையும் இதுவரை ஏன் செய்யவில்லை? தேர்தல்களில் தாங்கள் வாக்கு வேட்டையாடுவதற்கு அதெல்லாம் அவசியமற்றது எனக் கருதுகிறார்களா?

இப்போதுள்ள மஹிந்த அரசாங்கத்தில் போராசியர் திஸ்ஸ விதாரண, தோழர் டியூ குணசேகரா, தோழர் வாசுதேவ நாயக்கார மற்றும் திரு அத்தாவுட செனிவிரத்னா, திரு ராஜித செனிவிரத்னா, திரு டிலான் பெரேரா, திரு றெஜினாலட் கூரே, மேலும் திரு டக்ளஸ் தேவானந்தா, ஜனாப் ஹக்கீம், ஜனாப் பௌஸி, மற்றும் மலையகத் தலைவரான திரு ஆறுமுகம் தொண்டமான் போன்றவர்களென பதினைந்துக்கும் மேற்பட்ட கபினெட் அமைச்சர்கள் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் தொடர்பாக அக்கறை கொண்டவர்கள் உள்ளனர். எப்போதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் மேற்குறிப்பிட்ட அமைச்சர்களை வடக்கு மாகாண சபைக்கு வரும்படி அழைத்து உரையாற்ற வைத்ததுண்டா? தாம் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கும் தமது கோரிக்கைகளுக்கும் மேற்குறிப்பிட்ட அமைச்சர்கள் எவ்வாறு துணையாக மத்திய அமைச்சரவை மட்டத்தில் கூட்டாக செயற்படலாம் – செயற்பட வேண்டும் என்ற ஆலோசனைக் கூட்டங்கள் எதையாவது அவர்களுடன் நடத்தியிருக்கிறார்களா? அரசாங்க அமைச்சர்கள் என்பதால் அவர்களை அழைப்பது தீட்டு என்பதே ததேகூக்காரர்களின் அரசியல் நிலைப்பாடு என்பது தெரிகிறது. தமது தனிப்பட்ட தேவைகளுக்காக புதுப்புது ஐடியாவாகப் போட்டு அமைச்சுக்களின் பின்கதவு வழியாகச் சென்று தமது சொந்தக் காரியங்களைச் சாதித்துக் கொள்கிறார்கள்தானே!

சிங்கள அரசியற் தலைவர்களின் அநுதாபத்தையும் ஆதரவையும் திரட்டுவதற்கான முயற்சிகளுக்கு இவர்களது தமிழ்த் தேசிய மாவீரத்தனம் ஒரு தடையாக – சுயமரியாதைப் பிரச்சினையாக இருக்கின்றதா? அல்லது சிங்களவர்களோடு சேர்ந்து ஓரணியாக நின்று அரசுக்கு எதிரான போராட்டங்களை நடாத்தினால் தமிழர்களிற் பெரும்பான்மையானவர்கள் மத்தியில் தமது சிங்கள எதிர்ப்பு அரசியல் எடுபடாமற் போய்விடும் என்று கருதுகிறார்களா?

இவர்கள் சாக்குப்போக்குக்கு வேண்டுமென்றால் தாங்கள் அடிக்கடி சிங்களத் தலைவர்களுடன் கலந்துரையாடுவதாகக் கூறலாம் அல்லது அவ்வப்போது அவர்களோடு சேர்ந்து யாழ்ப்பாணத்தில் “போன வருஷமும் பொதுக்கூட்டம் போட்டோம்” எனக்;; கூறலாம் – காணாமற் போனோர் தொடர்பாக கொழும்பிலுள்ள சமூகத் தொண்டு நிறுவனங்களிலுள்ள சிங்களவர்களோடு சேர்ந்து தாங்களும் கொழும்பு றெயில்வே நிலையத்துக்கு முன்னால் நின்று கடந்த ஐந்து வருடத்தில் மூன்று முறை கொடி பிடித்ததாகத் கூறலாம். இதெல்லாம் ஏமாற்றுத்தனமான விளக்கங்களே!

த.தே.கூக்காரர்களிற் பலர், சிங்களவர்களிடையே மனமாற்றத்தை சிறிய அளவிற்கூட ஏற்படுத்த முடியாது என்றும் சிங்களத் தலைவரெவரும் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழர்களை ஏமாற்றவே செய்வார்கள் என்றும் எனவே சிங்களத் தலைவர்களின் ஆதரவை நாடுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை எனவும் திட்டவட்டமான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்றே எண்ண வேண்டியுள்ளது. எனவேதான் இவர்கள் ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் கொண்டு சிங்களவர்களைப் பயமுறுத்தி பணிய வைத்து விடலாம் என்று நம்புகிறார்கள். அப்படியான ஒன்றுக்கு எந்த வேளையிலும் இந்தியா ஆதரவு தராது என்பதை இப்போதாவது தமிழ்த் தேசியக்காரர்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

அடுத்த கடிதத்தில்
இப்படிக்கு
உங்கள் அன்பிற்குரிய – தோழமைக்குரிய
அ. வரதராஜப்பெருமாள்