இலங்கையில் மாகாணசபைகள்: இருக்கின்றன…. ஆனால் இல்லை

மாகாண சபை முறையானது பிரதானமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் குறிப்பிடத்தக்க அளவு சுயாட்சி அதிகாரங்கள் கொண்டதாக செயற்படுவதற்கே உருவாக்கப்பட்டது. ஆனால் அதனை இலங்கைமுழுவதிலும் செயற்படுவதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசாங்கம் தானாகவேதான் செய்தது. மாகாண சபை அமைப்பு முறை உருவாக்கப்பட்டு, 1988ம் ஆண்டு தொடக்கம் 1990ம் ஆண்டு வரையான கால இடைவெளியில் சுமார் 16 மாதங்கள் மட்டுமே வடக்கு – கிழக்கு மாகாணங்கள் ஒருங்கிணைந்த மாகாண ஆட்சியானது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டதாக இருந்தது. அதன் பிறகும் 2006ம் ஆண்டு வரையான 16 ஆண்டுகள் ஒருங்கிணைந்த மாகாண ஆட்சி அமைப்பு தொடர்ந்தும் இருந்த போதிலும் அதற்கான தேர்தல்கள் நடாத்தப்படாமல் – மாகாண சட்டப் பேரவை இல்லாமல்,வெறுமனே ஆளுநரை வைத்துக் கொண்டு மத்திய ஆட்சியின் அதிகாரமே செயற்பட்டது. அதேவேளை இதே கால கட்டம் முழுவதுவும் தென்னிலங்கையில் இருக்கும் மாகாண ஆட்சிகள் முழுவதற்கும் காலம் தவறாது தேர்தல்கள் நடாத்தப்பட்டன, மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களே ஆண்டார்கள்.

சிங்கள பௌத்த பேரின மேலாதிக்கமும்
ஜனநாயக விரோதமும் கூட்டாளிகளே

வடக்கு கிழக்கில் அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தச் சூழலின் காரணமாகவே வடக்கு கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்களை நடத்த முடியவில்லை என ஆட்சியாளர்களால் காரணம் கூறப்பட்டது. ஆனால் காலம் தவறாது ஜனாதிபதித் தேர்தல்களும் பாராளுமன்றத் தேர்தல்களும் வடக்கு கிழக்கிலும் நடந்து கொண்டேதான் இருந்தன. 1994ம் ஆண்டு 6000 வாக்குகளைப் பெற்று 9 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களானதையும்;, 2004ம் ஆண்டு வடக்கு கிழக்கில் தமிழர்கள் வாழும் பகுதிகள் எங்கும் வாக்குச் சாவடிகளையும் தேர்தல் அலுவலர்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்த புலிகள், அவர்கள் நிர்ணயித்தபடி வடக்கு கிழக்கிலிருந்து தமக்கு உரியவர்களை தமிழர்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்பி வைத்தபோதும் அவற்றை சட்டபூர்வமானது என ஏற்றுக் கொண்ட இலங்கை ஆட்சியாளர்கள் வடக்கு கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை மட்டும் நடத்தாமல் இருப்பதிலேயே அக்கறை காட்டினார்கள்.

2006ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி (துஏP) யினர், கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்திலிருந்து பிரிக்கப்படுவதுவும் அதற்கான தேர்தல் தனியாக நடாத்தப்படுவதுவும் கிழக்கு மாகாணத்தவர்களின் அடிப்படை உரிமை என்ற அடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் (டீநகழசந வாந ளுரிசநஅந ஊழரசவ) வழக்குத் தாக்கல் செய்து வெற்றி பெற்றார்கள். தமது நோக்கத்தை மக்கள் விடுதலை முன்னணியினரூடாக சாதித்துக் கொண்ட ஆட்சியாளர்கள், பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகம் ஏதாவதொரு காரணத்தால் மீண்டும் இணைக்கப்படும் நிலை ஏற்பட்டு விடாதபடி, அந்தப் பிரிப்பை நிரந்தரமாக்குவதற்காக,காலதாமதம் எதுவுமின்றிமிக விரைவாகவே, அதாவது, 2007ம் ஆண்டே கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடாத்தினார்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின் ஆட்சி கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டது. 1988ம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாண சபை உருவாகாமல் தங்களால் தடுத்து நிறுத்திவிட முடியும் என்று முயற்சித்த புலிகள் அப்போது அவ்விடயத்தில் தோற்றுப் போனார்கள். அதனை பின்னர் அவர்கள் ஜனாதிபதி பிரேமதாசாவோடு சேர்ந்துதான் வெற்றி கொண்டார்கள். 2007ம் ஆண்டு கிழக்கு மாகாணத் தேர்தலையும் தம்மால் குழப்பிவிட முடியும் என்று முயற்சித்தபுலிகள் நிரந்தரமாகவே தோற்றுப் போனார்கள்.

2007ம் ஆண்டு மட்டுமல்ல, 2009ம் ஆண்டு புலிகளுக்கெதிரான யுத்தத்தில் அரச படைகள் தமது வெற்றி கொடியை நிலைநாட்டியதால், 2012ம் ஆண்டிலும் கிழக்கு மாகாணத் தேர்தல் தடையின்றி நடைபெற்றது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை செயற்படுத்தினார்கள். அது 2017வரை நீடித்தது. ஆனால் வடக்கு மாகாணத்தில் ஆயுதம் தாங்கிய புலிகள் அறவே இல்லாத சூழ்நிலை 2009ம் ஆண்டே ஏற்பட்டு விட்ட போதிலும் ஆட்சியாளர்கள் 2013ம் ஆண்டே மாகாண சபைக்கான தேர்தலை நடாத்தி மக்கள் பிரதிநிதிகளிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தார்கள்.

2018ம் ஆண்டோடு இலங்கையின் அனைத்து மாகாண ஆட்சிகளும் ஆளுநர்களின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. அந்த நிலைமை இன்று வரை நீடிக்கின்றது. 2015ம் ஆண்டு ராஜபக்சாக்கள் அதிகார ஆசனங்களிலிருந்து அகற்றப்பட்டு, இலங்கையில் ஆச்சரியத்துக்கு உரிய வகையில் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறி லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து கூட்டாட்சி நடாத்தும் வரலாற்றைப் படைத்தார்கள். ஆனால் ஓராண்டிலேயே ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் நீயா நானா போட்டியில் இறங்கி விட்டார்கள். 2018ம் ஆண்டு மாசி மாதம் நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தென்னிலங்கை பூராவும் ராஜபக்சாக்களின் மொட்டுக் கட்சி மிகப் பெருமளவில் வெற்றிகளைப் பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியும் சிறி லங்கா சுதந்திரக் கட்சியும் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்தன.அதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளுராட்சி சபைகளுக்காக நடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பெரும் சரிவுகளைச் சந்தித்தது.

அதனைத் தொடர்ந்து, மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்தினால் தாங்கள் மத்திய ஆட்சிக் கதிரைகளில் அமர்ந்திருப்பதற்கே ஆபத்து வந்து விடும் என்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களும் சிறி லங்கா சுதந்திரக் கட்சிக் காரர்களும் தமக்குள் வேறுபல வேறுபாடுகள் முரண்பாடுகள் இருந்தாலும் மாகாண சபைகளுக்கான தேர்தல் விடயத்தில் ஒருவரோடொருவர் ஒத்தவராக மாகாண சபைத் தேர்தல்களைத் தள்ளிப் போடுவதை நடைமுறை ஆக்கினார்கள். உள்ளுராட்சித் தேர்தல்களில் சரிவுகளைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடந்தால் அதிலும் தாங்கள் பாரிய பின்னடைவுகளை தாங்க வேண்டும் என்பதால் அவர்களும் மாகாண சபைத் தேர்தல்களை தள்ளிப் போடுவதற்கு ஆட்சியாளர்களுடன்மறைமுகமாக ஒத்துழைக்கத் தொடங்கினார்கள். இன்று வரை அதுவே நடக்கிறது.

(நாளை தொடரும்)