இலங்கை பெண்களுக்கு இட ஒதுக்கீடு – அதிகாரம் தருமா அரசியல் கட்சிகள்?

(நளினி ரத்னராஜா)
பெண்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்
பல ஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைக்கும் முன், இலங்கையில் 1931 ஆம் ஆண்டிலேயே ஆணும் பெண்ணும் சமமான வாக்குரிமை இலங்கையில் பெற்றனர். ஆனால் 85 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இன்னும் இலங்கையில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது மற்றைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் 5.8% ஆகவும் (உலக தர வரிசையில் நூற்றி எழுபத்தி ஏழாவது இடத்தில் இலங்கை உள்ளது: Source Inter-Parliamentary Union March 2016) உள்ளூராட்சி மன்றத்தில் 1.8 % ஆகவும் காணப்படுகின்றது.

இந்த நிலையை போக்கக் கோரி பல தசாப்தங்களாக பெண் செயற்பாட்டாளர்கள், பெண் அமைப்புக்கள் குரல் கொடுத்து வந்ததுக்கு பிரதிபலனாக 2017ம் ஆண்டின் 16ம் இலக்க சட்டத்தின் மூலம் உள்ளூராட்சி சபைகளுக்கான புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்படுள்ளது என்பது இனிப்பான செய்தியாகும். இந்த முறை பெண்களை அரசியலில் உள்ளீர்த்து கொள்ள கொண்டு வரப்பட்ட உந்துதல் ஆகும். இது சில தசாப்தத்தின் பின் தேவைப்படாது.

இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த சகல அரசியல் கட்சிகளுக்கும் எதிர் வரும் ஆண்டு மாசி மாதத்தில் நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒரு சிறந்த வாய்ப்பாகும். களத்தில் குதிப்பதற்கு பல பெண்கள் தயாராகி வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடிக்கும் காலமிது.

பெண்களின் பங்களிப்பு ஏன் முக்கியம்?

இருந்த போதும் அரசியலில் பெண்களின் பங்களிப்பானது ஏன் முக்கியம் என்பது பலருக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இலங்கையை எடுத்துகொண்டால் நாட்டின் சனத்தொகையில் பாதிக்கு மேல்(52%) பெண்களாகவே காணப்படுகின்றனர்.

ஆகவே ஆண்களைப்போல் பெண்களும் வேறுபட்ட தேவைகளையும் கண்ணோட்டங்களையும் கொண்டிருப்பதால் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்த சகல தீர்மானம் எடுக்கும் மட்டங்களிலும் பெண்கள் அரசியல் இருக்க வேண்டியது அவசியமாகும்.

மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்த மலையக கட்சிகள் உள்ளது போல், தமிழர்களை பிரதிநிதித்துவபடுத்த தமிழர்களை உள்ளடக்கிய கட்சிகளும் முஸ்லிம்களுக்கு முஸ்லிம் கட்சிகளும் உள்ளது போல் இலங்கையில் உள்ள பெண்களை பிரதிநிதுத்துவப்படுத்த பெண்களும் சகல கட்சிகளிலும் இருப்பது பெண்கள் தங்கள் அரசியல் உரிமைகளை அனுபவிக்க வழி சமைக்கும்.

அரசியலில் பின்வாங்குகிறார்களா?

எல்லா துறைகளிலும் ஜொலிக்கும் பெண்கள் அரசியல் என்றதும் பின் வாங்குவதற்கு பல காரணங்கள் உண்டு . இதில் முக்கியமானது அவளில் சுமத்தப்பட்டிருக்கும் குடும்ப பொறுப்பு. முக்கியமாக அரசியலில் பெண்கள் ஈடுபட்டால் குடும்பத்தை அவர்களால் கவனிக்க முடியாது என்பது மிகவும் உணர்வு ரீதியாக பெண்களை கட்டிப் போடும் கடிவாளம். வேலைக்கு போய் தன் குடும்ப பொருளாதரத்தில பங்கெடுக்கும் பெண் கூட சமையல், குழந்தை பராமரிப்பு என்று வரும் போது முழுப்பொறுப்பும் பெண்ணில் தான் தங்கி உள்ளது.

இதை எல்லாம் பெண்கள் கடந்து வந்தாலும் பெண்களை அரசியலில் ஈடுபடாமல் தடுக்கும் முக்கிய காரணி பெண்களின் நடத்தையை விமர்சிப்பதும் குறை சொல்லுவதுமே. ஒரு குடும்பத்தின், அவள் வாழும் சமூகத்தின் அல்லது இனத்தின் கெளரவமானது பெண்களிலேயே சுமத்தபட்டுள்ளது என்பது கசப்பான உண்மை.

அடுத்த பிரதான கரணம் வன்முறை தேர்தல் கலாசாரம். இதற்கு முன்னைய தேர்தல் முறையும் (விருப்பு வாக்கு முறை) ஒரு காரணம். அதிலும் பெண்களுக்கு எதிரான தேர்தல் காலத்து வன்முறை பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை தடுக்கும் காரணிகளில் ஒன்று. இதற்கு இலங்கையில் நடந்த பல சம்பவங்கள் சான்று பகர்கின்றன.

இவற்றை எல்லாம் வட்டார ரீதியான புதிய தேர்தல் முறை கணிசமான முறையில் குறைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. இந்த தேர்தல் முறையில் உள்ளூராட்சி சபைகளுக்கான அங்கத்தவர்கள் தெரிவில் 60 சதவீதமான அங்கத்தவர்கள் வட்டார அடிப்படையிலும் 40 சதவீதமான உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

மொத்த உறுப்பினர்களுள் 25 சதவீதம் பெண்கள் உறுப்பினர்களாக இருப்பர். ஏற்கனவே வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள வட்டாரங்களின் எண்ணிக்கையினை அடிப்படையாக வைத்தே சபையொன்றின் மொத்த அங்கத்தவர் தொகை தீர்மானிக்கப்படும். அதாவது, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வட்டாரங்களின் தொகையினை 60 சதவீதமாகக் கொண்டு அத்துடன் மேலதிகமாக 40 சதவீதத்தினை சேர்த்து அங்கத்தவர் தொகை தீர்மானிக்கப்படும்.

உதாரணமாக சபையொன்றின் வட்டாரங்களின் எண்ணிக்கை 12 என்றால் அது 60 சதவீதமாக கொள்ளப்பட்டு மிகுதி 40 சதவீதத்திற்கும் இன்னும் 08 அங்கத்தவர்கள் சேர்க்கப்பட்டு மொத்த அங்கத்தவர்கள் தொகை 20 ஆக அமையும்.

முதலாவதாக வேட்புமனுப்பத்திரம் வட்டாரங்களுக்கு பெயர் குறிப்பிட்டு வேட்பாளர்களை நியமிக்கும் வேட்பு மனுவாகும்.

இந்த வேட்புமனுவில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் வேட்பாளர்களை பெயர் குறித்து நியமிக்க வேண்டும். இவர்களுள் குறைந்தது 10 சதவீதமானவர்கள் கட்டாயமாக பெண்களாக இருத்தல் வேண்டும்.

இரண்டாவதாக

வேட்பு மனுப்பத்திரத்தில் விகிதாசார முறையில் தெரிவு செய்யப்பட வேண்டிய 40 சதசவீதமான உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு சமனான எண்ணிக்கையுடைய நபர்களும் மேலதிகமாக 03 நபர்களும் சேரக்கப்பட்டு பெயர்கள் வழங்கப்பட வேண்டும்.

இவர்களுள் 50 சதவீதமானவர்கள் கட்டாயமாக பெண்களாக இருத்தல் வேண்டும்.

பெண் அங்கத்தவரின் நியமனம்

ஏனைய கட்சிகளின் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தலின் பின்பு தேசியப்பட்டியல் தீர்மானிக்கப்படுவது போன்று குறித்த சபைக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட 25 சதவீதமான பெண் அங்கத்தவர்கள் தெரிவு உறுதிப்படுத்தப்படும். இதன் போது கட்சியின் இரண்டு வேட்புமனுக்களில் எதிலிருந்தும் கட்சியின் செயலாளரினால் பெண் அங்கத்தவர்கள் நியமிக்கப்படலாம். இங்கே முழு அதிகாரமும் கட்சியின் செயலாளரின் கையில்தான் தங்கி உள்ளது.

அகவே இம்முறை கிட்டத்தட்ட 2000-க்கும் அதிகமான பெண்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறை மூலம் உள்வாங்கப்படுவது உறுதி.

ஆனால் கள நிலவரப்படி, தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் சரியான முறையில் இனம் காணப்பட்டு பட்டியல் 1, பட்டியல் 2 மற்றும் 25% ஒதுக்கீடுகளுக்கான பட்டியலில் வருவார்களா என்பது சந்தேகமாக உள்ளது . இதற்கு பல நடைமுறை சிக்கல்கள் காணப்படுகின்றது. இந்த பட்டியல்களில் தங்கள் உறவின பெண்கள் அல்லது தங்களை எதிர்த்து கேள்வி கேட்காத பெண்கள், அல்லது நாட்டில் வாழாத பெண்கள் உள்ளடக்கப்படுவார்களோ என்ற அச்சம் காணப்படுகிறது

முதலாவது காரணம் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தொகுதியிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட அமைப்பாளர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் வெவ்வேறு பெண்களை இனம் கண்டு பட்டியல் தயாரித்து வைத்துள்ளனர். எந்த அமைப்பாளரின் பட்டியல் கட்சி செயலாளரினால் கடைசியாக தெரிவு செய்யப்படும் என்று யாருக்கும் தெரியாது. இதனால் சகல கட்சி பெண்களும் குழப்பத்தில் உள்ளனர்.

இரண்டாவது பெண்கள் தான் வெற்றி பெறக் கூடிய வட்டாரத்தில் போட்டியிட அனுமதிக்காது அவள் சார்ந்த கட்சி அதிக வாக்குகளை பெற முடியாத வட்டாரத்தில் போட்டியிட வைக்க கூடிய அபாயம் காணப்படுகிறது .

இந்த நடைமுறை சிக்கலானது சரியான, ஜனநாயகத்தை மதிக்கும், நல்லாட்சியின் குணாதிசயங்களை கருத்தில் கொள்ளாத சட்டத்தையும் ஒழுங்கையும் மதிக்காத, இனவாதம், மதவாதம் பேசும் பெண்கள் அரசியலுக்கு வந்து சாக்கடை அரசியலை சுத்தம் செய்யாமல் போக நேருமோ என்ற அச்சம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

பெண்களை அதிகளவில் உள்ளீர்த்து கொள்ளும் சமூகம் அனேகமாக குறைந்தளவு வன்முறையையும் மிகையான சகிப்புத் தன்மையையும் கொண்டிருக்கும்.

முக்கியமாக போரில் உழன்ற சமூகத்தை கொண்ட இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு வினைத்திறனான் தீர்வினை பெற்று கொடுக்க உள்ளூராட்சி மன்றங்களின் பெண்களின் பிரதிநிதுத்துவம் இன்றி அமையாதது ஆகும்.

குறிப்பாக, வடகிழக்கில் உள்ள கட்சிகள் அதிக பெண்களை உள் வாங்குவதன் மூலம் நல்லிணக்கமும், சமாதானமும் உண்மையான சமூக அபிவிருத்தியும் போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணமும் விரைவில் பெற்றுக் கொள்ள வழி சமைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .

ஆகவே சகல கட்சிகளும் பெண்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு சரியான திறமையான செயல் திறன் உள்ள பெண்களை அரசியலில் சரியான முறையில் வெளிப்படைத் தன்மையுடன் களமிறக்கி நாட்டின் நன்மைக்கு வழி சமைப்பார்கள் என நம்புவோமாக.