ஜெருசலேம்: அமெரிக்க அடாவடி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சர்வதேச சமூகத்தின் மீது வைக்கப்படும் நம்பிக்கையின் அபத்தத்தையும் ஆபத்தையும் உலக அரசியல் அரங்கு, எமக்குப் பலமுறை உணர்த்தியிருக்கிறது. இருந்தபோதும், சர்வதேச சமூகத்தின் மீது நம்பிக்கை வைப்பதும் ஏமாற்றப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அடக்குமுறைக்குள்ளாகியுள்ள சமூகங்கள், அடக்குமுறையின் மோசமான விளைவுகளை அனுபவித்து வந்துள்ளன. நியாயத்தின் அடிப்படையில் அயலுறவுக் கொள்கைகள் உருவாக்கப்படுவதில்லை; அவை நலன் சார்ந்தவை. இதைப் பலரும் விளங்கிக் கொள்ளத் தவறுகின்றனர். தீதும் நன்றும் பிறர்தர வாரா.

கடந்தவாரம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்‌ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை இஸ்‌ரேலின் தலைநகர் டெல் அவிவ்விலிருந்து ஜெருசலேத்துக்கு மாற்றுவதற்கு எடுத்த முடிவானது அதிர்வலைகளையும் உலகளாவிய எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது. இதன்மூலம் ஜெருசலேமை, இஸ்‌ரேலின் தலைநகராக, அமெரிக்கா அங்கிகரித்துள்ளது.

இந்நடவடிக்கை மூலம் ட்ரம்ப் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். ஜெருசலேம் பகுதியானது, இஸ்‌ரேல் உருவாக்கப்பட்டது முதல், மிகவும் சிக்கலான ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் ஆகிய மூன்று மதத்தவருக்கும் மதரீதியாக முக்கியமான இடமாக இப்பகுதி கருதப்படுகிறது. பலஸ்தீனர்கள் ஜெருசலேமை தமது தலைநகராகக் கருதுகிறார்கள்.

1948இல் இஸ்‌ரேலுக்கும் எகிப்து, ஜோர்டான், சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில், மேற்கு ஜெருசலேம் பகுதி இஸ்‌ரேல் வசமும் கிழக்கு ஜெருசலேம் ஜோர்டான் கட்டுப்பாட்டின் கீழும் வந்தன.

அதன்பிறகு 1967இல் நடந்த ஆறுநாள் யுத்தத்தில், கிழக்கு ஜெருசலேமையும் இஸ்‌ரேல் இராணுவம் கைப்பற்றியது. இப்போது முழு ஜெருசலேமையும் இஸ்‌ரேல் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. ஜெருசலேமைத் தனது தலைநகராக அது அறிவித்துள்ள போதும், அதை எந்தவோர் உலக நாடுகளும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இப்பின்னணியிலேயே ட்ரம்பின் கடந்தவார அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெருசலேமின் மீதான உரிமையானது இஸ்‌ரேலும் பலஸ்தீனமும் பேசித் தீர்க்கவேண்டியதொன்று என்ற நிலைப்பாட்டில், கடந்த ஏழு தசாப்த காலமாக அமெரிக்கா இருந்து வந்துள்ளது.

இதற்கு முன்னரும் பல அமெரிக்க ஜனாதிபதிகள் ஜெருசலேமை இஸ்‌ரேலின் தலைநகராக அங்கிகரிப்பதாகத் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதும் அதை எப்போதும் நடைமுறைப்படுத்தியதில்லை.

இவ்விடயத்தின் சிக்கல் தன்மையும் இது அமெரிக்காவின் அரபு நாடுகளுடனான செல்வாக்கில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்பன தொடர்பில் அவர்களுக்கு நன்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தது. இதனாலேயே, ட்ரம்புக்கு முந்தைய எந்தவோர் அமெரிக்க ஜனாதிபதியும் ஜெருசலேமை இஸ்‌ரேலின் தலைநகராக அங்கிகரிக்கவில்லை.

உலகில் மிகவும் பழைமான நகரங்களில் ஒன்றான ஜெருசலேம் இரண்டுமுறை முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதோடு, 23 தடவைகள் முற்றுகையிடப்பட்டுள்ளது. வரலாற்றில் ஜெருசலேம் 52 தடவைகள் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததோடு, 44 தடவைகள் கைப்பற்றப்பட்டு இழக்கப்பட்டு, பின் மீளக் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

முதலாம் உலகப்போரில் ஜேர்மனியின் தலைமையிலான நாடுகளின் கூட்டின் தோல்வியானது, அதன் கூட்டாளியான ஒட்டோமன் பேரரசின் முடிவைச் சாத்தியமாக்கியது. இதனால் பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் பலஸ்தீனம் வந்தன.

இதைத் தொடர்ந்து, வலிந்து திணிக்கப்பட்ட இஸ்‌ரேலின் உருவாக்கம், பலஸ்தீனியர்களை நாடற்றவர்கள் ஆக்கியதோடு, ஜெருசலேம் மீதான சட்டவிரோதமான கட்டுப்பாட்டை இஸ்‌ரேலியர்கள் பெற்றுக் கொள்ளவும் வழி வகுத்தது.

இரண்டாம் உலகப் போரின் முடிவு தொடக்கம், பலஸ்தீனத் தனிநாட்டுக்காகப் பலஸ்தீனியர்கள் போராடி வருகிறார்கள். ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட போராடும் சமூகமாகவுள்ள பலஸ்தீனர்களின் நிலைமை, இலங்கைத் தமிழர்களின் நிலையை ஒத்தது. ஆனால், இலங்கைத் தமிழரின் நிலையை, இஸ்‌ரேலியருடன் ஒப்பிடும் வழக்கம்.

இஸ்‌ரேல் உருவானது போலவே ஈழமும் உருவாகும் என்ற நம்பிக்கை இன்னமும் சிலரிடம் வலுவாக உள்ளது. ‘தமிழர் எல்லா நாடுகளிலும் உளர்; தமிழருக்கு ஒரு நாடு இல்லை’ என்பது முன்பு யூத சமூகம் பற்றிய ஒரு கூற்றுக்கு ஒப்பானது.

ஆனால், இக்கூற்று முழுமையானதல்ல. தமிழர்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் தொடர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள்; இன்னமும் வாழ்கிறார்கள். இங்கு கவனிக்க வேண்டிய சில விடயங்கள் உள்ளன.

யூதர்கள் இன அடையாளத்தை வலியுறுத்துவது போக, யூத மதமும் அந்த அடையாளத்துக்கு நெருக்கமானது. வெகு அரிதாகவே எவரும் யூத மதத்தைத் தழுலாம். யூத மதம் பல பிரிவுகளைக் கொண்டது. எப்பிரிவிலும் இல்லாத யூதர்களும் உள்ளனர்.

பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்னரே, பெரும்பாலான யூதர்கள், தமது மண்ணை விட்டுப் பல திசைகளிலும் சிதறினர். மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் அவர்கள் பிற சமூகத்தினருடன் பகைமையின்றி வாழ்ந்தனர் எனலாம்.

ஐரோப்பாவில் முதலாளித்துவத்தின் எழுச்சியுடன் யூத சமூகத்தினின்று வணிகம், கடன் வழங்கல் என்பனவற்றின் வழியாகச் செல்வந்தர்கள் தோன்றினர். அதைவிட, வழமையான நிலவுடைமைச் சமூகத்தின் ஒரு பகுதியாக, ஏற்கப்படாத யூதர்கள் தமக்கான சேரிகளில் வாழ்ந்தனர். அவ்வழக்கம் முதலாளித்துவத்தின் எழுச்சியுடன் இறுக்கமடைந்தது.

கலைகளிலும் பொழுதுபோக்கு, கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளிலும் ஈடுபாடுடையோர் யூதரிடையே தோன்றுவதற்கு நிலவுடைமைச் சமுதாயத்துக்குப் புறம்பானவர்களாக அவர்கள் இருந்தமை ஒரு காரணமானது.

அப்போது, உலகளாவிய யூத உணர்வு என ஒன்று இருந்ததாகக் கூறவியலாது. தீவிர மதப் பற்றாளரிடையே, தமது சொந்த நாட்டுக்கு மீளுவோம் என்ற மதவழி நம்பிக்கை இருந்தது.

முதலாம் உலகப் போரை ஒட்டிய காலத்திலேயே யூதர்களுக்கான தாயகம் என்ற கருத்து, பிரித்தானிய கொலனிய ஆட்சியாளர்களது துணையுடன் உருவாக்கப்பட்டது. அதற்கு நியாயங்கள் இருந்தன. அக் காலத்தில், யூதர்கள் பல ஐரோப்பிய நாடுகளிலும் தொடர்ச்சியான கொடுமையை அனுபவித்தனர்.

ரஷ்யப் பேரரசு உட்படப் பல நாடுகளிலும் அவர்களுக்கு எதிரான இன ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், ஜேர்மன் பாசிசத்தின் கீழ், இரண்டாம் உலகப் போருக்கு முன்பிருந்து யூதர்கள் அனுபவித்த கொடுமைகளே யூதர்களுக்கு ஒரு தாயகம் தேவை என்ற கருத்துக்கு வலிமை சேர்ந்தது.

அப்போது யூதர்களிடம், வங்கி மூலதன வலிமை இருந்தது. அப் பொருள் வலிமை, அவர்களது அரசியல் செல்வாக்குக்கு உதவியது.

எனினும், யூதர்களுக்கான தாயகத்தை அவர்கள் எப்போதோ நீங்கிய மண்ணில் நிறுவ, ‘ஸியோனிஸவாதிகள்’ எனும் யூத இனவாதிகள், பயங்கரவாத அமைப்புகளைக் கொண்டு அராபியர்களை, வன்முறை மூலம் விரட்டத் தொடங்கினர்.

முதலாம் உலகப் போரின் பின்பு, மெல்ல மெல்லத் தொடங்கி 1940 களில் தீவிரம் பெற்ற யூதப் பயங்கரவாதக் குழுக்கள், அராபியர்களைத் திட்டமிட்ட முறையில் அவர்களது வதிவிடங்களிலிருந்து விரட்டின.

முடிவில், ஐ.நா சபையின் ஆசிகளுடன் 1948இல் இஸ்‌ரேல் நிறுவப்பட்டது. அதன் பின்பும் அராபியரை விரட்டுவதும் பலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்பையும் திட்டமிட்ட குடியேற்றங்களையும் மேற்கொள்வதும் தொடர்ந்தது.

அரபுப் பிரதேசத்தைக் கூறுபோட்டு, அரபு மக்களைப் பிளவுபடுத்த ஐரோப்பியர் உருவாக்கிய பல்வேறு அரபு முடியாட்சிகளின் நடுவே இஸ்‌ரேல் உருவாக்கப்பட்டது.

அன்று பலஸ்தீனம், பிரித்தானிய அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசமாயிருந்தது. அதிலிருந்து இஸ்‌ரேலை உருவாக்குகின்ற சூழ்ச்சி, சென்ற நூற்றாண்டின் முற்பகுதியிலேயே பல்ஃபர் பிரகடனத்துடன் தொடங்கி விட்டது.

இஸ்‌ரேலிய அரசு, இரண்டு முக்கிய காரியங்களைச் செய்தது. ஒன்று, இஸ்‌ரேல் உருவான நாளிலிருந்து, யூத இனவெறியை வளர்த்துப் பலஸ்தீன மண்ணின் வளமான பகுதிகள் அனைத்தையும் அராபியரிடமிருந்து பறிக்கும் திட்டமிட்ட வன்முறைகள் தொடர்ந்தன.

மற்றையது, மத்திய கிழக்கில், அமெரிக்க ஆதிக்கத்தின் காவலரணாக கடந்த அரை நூற்றாண்டாக இஸ்‌ரேல் இயங்கி வந்துள்ளது. 1948 இல் இஸ்‌ரேலை உருவாக்கிய போது, இந்த இனச் சுத்திகரிப்பு, தீவிரமாக நடைபெற்றது.

1948 இல் நடந்த போரின் போதும், சுயெஸ் கால்வாய் தேசியமயமாக்கப்பட்டதை அடுத்து பிரித்தானியாவும் பிரான்ஸும் 1957இல் எகிப்தின் மீது தொடுத்த போரின் போதும் 1967 இல் இஸ்‌ரேல் வலிந்து, எகிப்தின் மீது தொடுத்த போரின் போதும் 1974 இல் எகிப்துடன் நடத்திய போரின் போதும் இஸ்‌ரேல் தனது விஸ்தரிப்புக் கொள்கையில் முனைப்பாக இருந்தது.

1967 இல் இஸ்‌ரேல் கைப்பற்றிய எகிப்தியப் பிரதேசத்தை, 1974 போரின் பின் படிப்படியாகத் திருப்பிக் கொடுக்க நேர்ந்த போதும், சிரியாவிடம் இருந்து பறித்ததை இஸ்‌ரேல் தன்வசம் வைத்துள்ளது.

இஸ்‌ரேல் கடந்த எழுபதாண்டுகளாகப் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இழைத்து வந்த கொடுமைகள் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பலஸ்தீன மக்களுடைய எழுச்சியின் விளைவாக, அவர்களது விடுதலை இயக்கமான பலஸ்தீன விடுதலை இயக்கத்தை 1974 இல் ஐ.நா சபை அங்கிகரித்தது.

எனினும், பலஸ்தீன மக்களால் பறி போன தமது மண்ணுக்கு இன்னமும் மீள இயலாதுள்ளது. அதன் காரணம், இஸ்‌ரேலிய அரச இயந்திரத்தின் வலிமையும் பலஸ்தீன மக்களின் ஒற்றுமையின்மையும் அரபு நாடுகளுக்கிடையிலான பகைமையும் என்று சிலர் எளிதாக விளக்க முற்படுவர்.

ஆனால், அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது அமெரிக்கா என்ற பெருவல்லரசு இஸ்‌ரேலுக்கு வழங்கி வந்துள்ள நிபந்தனையற்ற ஆதரவேயாகும். அமெரிக்காவின் பொருளாதார, இராணுவ உதவியின்றி இஸ்‌ரேல் நிலைக்காது.

சர்வதேச அளவில், இஸ்‌ரேலை உலக நாடுகள் புறக்கணிக்காமலும் தண்டிக்காமலும் இருக்க அமெரிக்க ஆதரவு முக்கியமானது. அமெரிக்காவை எதிர்க்காமல் அவர்கள் இஸ்‌ரேலை எதிர்ப்பதில் அர்த்தம் இல்லை.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பலஸ்தீனத்தைப் போன்று அந்நிய மேலாதிக்கத்தின் கீழ்ப்பட்டிருந்த ஒரு நாட்டில், ஒரு திட்டமிட்ட ஆக்கிரமிப்பின் விளைவானதல்ல.

எனினும், அங்கு போல, தமிழ்த் தேசியத்தின் பாரம்பரியப் பிரதேசத்தைத் திட்டமிட்ட குடியேற்றத்தின் மூலம், அடையாளமில்லாமல் ஆக்குகின்ற பணி இஸ்‌ரேலின் யூதக் குடியேற்றங்களைப் பின்பற்றுகிற முறையிலேயே தொடக்கி வைக்கப்பட்டது.

இந்த உண்மைகளை மனதில் கொள்ளும் எவருக்கும், இஸ்‌ரேல் என்ற நாட்டுடனும் யூத இனத்துடனும் இலங்கைத் தமிழரின் நிலையைப் பொருத்திப் பார்ப்பது எத்துணை அபத்தம் என விளங்கும்.

அமெரிக்காவின் இஸ்‌ரேல் ஆதரவு நிலைப்பாடானது, அமெரிக்கக் கூட்டாளிகளாகவுள்ள அரபு முடியாட்சிகளுக்கு மிகப்பெரிய நெருக்கடியைக் கொடுத்துள்ளது. இதனால் உலகளாவிய முஸ்லீம் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படாமல் இருப்பதற்கு பேரளவிலாவது அமெரிக்காவைக் கண்டிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இதனாலேயே அரபு நாடுகள் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளன.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை கூட்டப்பட்ட அவசர கூட்டத்தில், அமெரிக்கா தவிர்ந்த ஏனைய 14 உறுப்பு நாடுகளும் அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக வாக்களித்தன. இதில் கருத்துரைத்த ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி பின்வருமாறு வாதிட்டார்:

“ஜெருசலேம், இஸ்‌ரேலின் தலைநகர். டெல் அவிவ் நகரில் உள்ள இஸ்‌ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை, ஜெருசலேமில் அமைக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவ, இந்த அறிவிப்பு உதவும். அனைத்துத் தரப்பினரும் ஒருவருக்கொருவர் நேர்மையுடன் நடந்து கொண்டால்தான் அமைதிக்கான முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் காண முடியும். தற்போதைய உண்மை நிலைவரத்தின் அடிப்படையில், அமெரிக்காவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. எது, ஏற்கெனவே வெளிப்படையாக உள்ளதோ, அதை அமெரிக்கா அங்கிகரித்திருக்கிறது”.

மேலும், பலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்‌ரேல் இடையில் அமைதி ஏற்படுத்தும் வாய்ப்புகளை ஐ.நா சீர்குலைப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், இஸ்‌ரேலுக்கு எதிராக மூர்க்கத்தனமான விரோதம் கொண்டுள்ள உலகின் முன்னணி அமைப்புகளில் ஐ.நாவும் ஒன்று என்றார்.

இங்கு கவனிக்கப்பட வேண்டியது யாதெனில், ஜெருசலேத்தை இஸ்‌ரேலின் தலைநகராக அறிவித்ததன் மூலம், சர்வதேச சட்டங்களை அமெரிக்கா மீறியுள்ளது. ஐ.நா பாதுகாப்புச் சபையின் 242 மற்றும் 338ஆம் தீர்மானங்கள் இஸ்‌ரேல் வலுக்கட்டாயமாக ஜெருசலேத்தைத் தனது பகுதியாக்கியதைக் கண்டிப்பதோடு, அதை இஸ்‌ரேலின் பகுதியாகக் கொள்ள முடியாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.

இப்பின்ணணியில் இஸ்‌ரேல், ஜெருசலேம் மீது தனது உரிமையை நிறுவுவதற்கு வரலாற்றைத் துணைக்கழைக்க முயல்கிறது. ஐ.நாவுக்கான இஸ்‌ரேலியத் தூதுவர் “ஜெருசலேமில் உள்ள மலைக்கோயிலில் அகழாய்வில் கிடைத்த கி.பி 67ஆம் ஆண்டைச் சேர்ந்த நாணயத்தில் ‘புனித ஜெருசலேம்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.

கி.பி 70இல் ஜெருசலேமில் யூதக் கோயில் அழிக்கப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு யூதர்கள் தங்கள் தாயகத்தைவிட்டுத் துரத்தப்பட்டனர்” என்றார்.

இவையனைத்தும் போராடுவதைத் தவிர வேறு வழிகள் எதுவுமில்லை என்பதை உணர்த்தி நிற்கின்றன. இஸ்‌ரேலின் கொடுமைகளை எதிர்க்கத் தவறுபவர்கள் உலகில் நடக்கிற எந்தக் கொடுமையையும் ஆதரிக்கக் கூடியவர்கள் என்பதை நாம் மறக்கலாகாது.

இவை ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்குப் பொதுவானவை. அதையும் மீறி அடக்குமுறையாளர்களுக்கு ஆதரவானவர்களின் ஆதரவை, ஒடுக்கப்பட்ட சமூகம் எதிர்பார்த்து நிற்குமாயின், அச்சமூகத்தின் விடுதலையின் சாத்தியத்தின் தூரம் மிகத்தொலைவில் என்பது திண்ணம்.