ஈழத்துப் பாடகர் சாந்தன்

ஈழத்துப் பாடகர் சாந்தன் அவர்கள், காலமான செய்தி கவலை தந்தது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரப் பாடகராகவே அவரை நான் அறிந்திருந்தேன். அவரின் குரலில் வெளிவந்த எந்தவொரு பிரச்சார பாடல்களையும் , நான் முழுமையாகக் கேட்டவன் அல்ல. அவரின் குரல் என்னை கவர்ந்திருந்தபோதிலும், பாடல்களின் பிரச்சார சொல்லாடல்கள் என்னை அந்நியப்படுத்திக் கொண்டே இருந்தது.

சாந்தன் போன்றவர்களின் வாழ்வு, புலிகளைப் பற்றிய எனது மதிப்பீடுகளுக்கு அப்பால், கவனம் கொள்ளப்படவேண்டியது. இரண்டு புதல்வர்களை போராளிகளாக கொடுத்து, தம் வாழ்வை தடுப்பு முகாம்களிலும், நோயோடும், வறுமைகளோடும் எதிர்கொண்ட கலைஞனின் வாழ்வின் இறுதிக்கணங்களின் சிந்தனைகளும், நினைவுகளும் எவ்வாறு இருந்திருக்குமென எண்ணிப்பார்க்கின்றேன்.

புலிகளில் இருந்ததிற்காக, அதிகார மையங்களின் சந்தேகங்களும், அதில் இருந்து தப்பித்துக் கொள்ள முனையும்போது தாம் சார்ந்த இயக்கத்தவர்களிடமிருந்து எழும் சந்தேகங்களையும் ஒரு மனிதன் எதிர்கொள்ளும் வாழ்வு என்பது கசப்பானது கொடுமையானது.

அதை சாந்தனும் அனுபவித்தாக, அவரின் நட்புக்களுக்கூடாக அறிய முடிந்தது.

இலங்கை பேரினவாத அரசின் ஒத்தோடிகளாக மாறி, வாழ்வை வளமாக அனுபவிக்கும் மனிதர்கள் முன், சாந்தன் போன்றவர்களின் துயர வாழ்வின் மீது கவனம் கொள்ளவேண்டியது மனிதாபிமானம் மிக்க மனிதர்களின் தார்மீக கடமையாகின்றது.

இவ்வாறு போராட்டத்திற்காக வாழ்வை இழந்து, நோயோடும், வறுமையோடும் போராடும் மனிதர்களின் வாழ்வில், குறைந்த பட்ச நிம்மதிகளை, ஆறுதல்களை சக மனிதர்கள் விரும்பும் பட்சத்தில் நிச்சயமாக கொடுக்க முடியும்.

அதற்குத் தேவை நல்ல மனமும், மனிதாபிமானமும்தான்.

‘சிறுதுளி பெரு வெள்ளம்போல்’, புகலிடத்தில் வாழும் நாம் , சிறுதொகைகொண்டு பங்களிப்போமானால், ஈழத்தில் வாழும் பல உள்ளங்களை நோய்களிலிருந்து விடுவிக்க முடியுமென நினைக்கிறேன்.

இதற்கு, நம்பிக்கையும் -நேர்மையும் -உண்மையும் கொண்ட, ஈழத்தில் இணைப்பாளர்கள் கிடைப்பார்களாயின் இது மிக இலகுவில் சாத்தியமாகக்கூடியது.

நண்பர்களே யோசியுங்கள்..

(Ashok-yogan Kannamuthu)