உண்ணாவிரதப்போராட்டங்கள்


அடுத்த நாள் பெப்ரவரி 21 முதல் ஏப்ரல் 17 வரை சத்தியாக்கிரகம் கச்சேரி முன்பு நடைபெற்றபோது வீ.என்.நவரத்தினம் தலைமையில் தென்மராட்சி பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கில் ஊர்வலமாக வந்து கலந்துகொண்டனர்.
1961 ஏப்ரல் 17 நள்ளிரவு சத்தியாக்கிரகம் இராணுவத்தால் முறியடிக்கப்பட்டு தமிழரசு எம்.பிக்களுடன் வீ.என்.நவரத்தினமும் கைதாகி ஆறுமாதங்கள் ஒக்டோபர் வரை பனாகொடை இராணுவ முகாமில் தடுப்புக்காவலில் இருந்தார்.வீ.என்.நவரத்தினத்தை தென்மராட்சி மக்களின் மைந்தன் என்றும் அழைத்தனர்,சிறந்த பேச்சாளர்.பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள்.அக்காலத்தில் தாடியுடன் பாராளுமன்றத்துக்கு வந்த ஒரே தமிழ் உறுப்பினர் இவர்தான்.இன்று முஸ்லம் அரசியல்வாதிகள்,மட்டுமல்ல பல அரசியல்வாதிகள் தாடியுடன் காணப்படுகின்றனர்.நவரத்தினத்திடம் ” ஏன்,தாடி வளர்க்கிறீர்கள்,என்ன விரதமா? என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது,தமிழர்களுக்கு எப்போது ஈழம்( சுதந்திரம்) கிடைக்கிறதோ,அதுவரை எடுக்கமாட்டேன்! அதுவே எனது விரதம்! என்றார்.”தாடி நவம்” எனவும் அழைக்கப்பட்டார்.1977 தேர்தல் மேடைகளில் ஈழம் என்றார்,ஈழம் வருவதற்கு முன்பே கனடாவில் காலமானார்.
1956 ஜூன் 5 காலிமுகத்திடலில் பழைய பாரளுமன்றத்தின் முன்பாக தனிச்சிங்கள சட்டத்தை எதிர்த்து தமிழரசுக்கட்சியின் சத்தியாக்கிரகத்தில் இருந்தபோதும் காடையர்களால் தாக்கப்பட்டார்.அருகில் உள்ள வாவியில் தூக்கி வீசப்பட்டார். வீ.என. நவரத்தினம் கால்களில் படுகாயமடைந்து,கொம்பனி வீதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அதன் உரிமையாளர் டாக்டர் இராசதுரை கட்டணம் அறவிடாது இவருக்கும்,காயமடைந்த தொண்டர்களுக்கும் சிகிச்சை அளித்தார்.
1957 அமெரிக்காவில் நடைபெற்ற Moral Re Armament Congress மாநாட்டில் கலந்துகொண்ட அவர் ” Ceylon Face Crisis” இலங்கைத்தமிழர் பிரச்சினை தொடர்பாக காவலூர் வ. நவரத்தினம் ( பின்னர் ஊர்காவற்றுறை எம்.பி) எழுதிய நூலின் பிரதிகளை கொண்டு சென்று அங்கு கலந்துகொண்டவர்களுக்கு கொடுத்து இனப்பிரச்சினை குறித்து விளக்கினார்.அந்த நூல் வடக்கு,கிழக்கு,மலையகம் பகுதிகளை பிரத்தியேக வர்ணங்களால் கோடிட்டு காட்டிய முகப்பு அட்டையை கொண்டுள்ளது. WORLD INTER PARLIAMENTARY UNION என்ற அமைப்பின் செயற்குழுவுக்கு தெரிவான முதலாவது இலங்கையர் என்ற சரித்திரப்பெருமையைப்பெற்றவர்.
1958 இனக்கரவரத்தின்போதும் நவரத்தினம் ஏனைய தமிழரசு எம்.பிக்களுடன் ஜூன் 4 கைதாகி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டவர்.
1973 மார்ச் 15 யாழ்.நீதிமன்றத்துக்கு முன்பாக கறுப்பு பட்டி அணிந்து காலை முதல் மாலை வரை தமிழரசு எம்.பிக்களுடன் மறியல் போராட்டத்தில்ஈடுபட்டவர்.
1977 ஆகஸ்ட் 15-17 யாழ்.நகரில் பொலிசார் கடைகள எரித்தும்,பொதுமக்களை தாக்கிய கொடுமைகளையும் நேரில் துணிந்து வந்து கண்டவர்.
1976 வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பின் பொன்னாலை கூட்டத்துக்கு வந்த தமிழ் இளைஞர்கள் பொலிசாரால் தாக்கப்பட்டு கைதாகி சங்கானைபொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டபோதும் ஏனைய சில தமிழரசு தலைவர்களுடன் நேரில் சென்று விடுவிக்க செயற்பட்டவர்.தடுத்துவைக்கப்பட்டவர்களில் தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்பு கிளை தலைவர் உமா மகேஸ்வரனும் ( பின்னர் புளொட் தலைவர்)அடங்குவார்.
1979 யாழ்.கோட்டைக்குள் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களை பார்வையிட வந்தபோது,இவரின் கார் உட்பட அமிர்தலிங்கத்தின் கார்மீது பொலிசார் கல் வீசினார்கள்.
1981 ஜூன் 1 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளின்போது அமிர்தலிங்கம்,சிவசிதம்பரம்ஆகியோருடன் கைதாகி பலாலி இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டவர்.
தமிழ்க்காங்கிரஸ் தலைவரும் பிரபல கிறிமினல் இராணி சட்டத்தரணியுமான( Q.C) ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் கீழ் சட்டத்தரணியாக பயிற்சி பெற்று வந்தபோதிலும் ,தந்தை செல்வநாயகத்தின் தமிழரசுக்கட்சிக்கொள்கையை ஏற்று தமிழரசுக்கட்சியில் இணைந்தவர்.1956 தேர்தலில் களமிறங்கி 1983 தமிழர் விடுதலைக்கூட்டணி பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறும் வரையும் 27 வருடங்கள் தொடர்ச்சியாக எம்.பியாக இருந்தார். 1970 தேர்தலில் அமிர்தலிங்கம் படுதோல்வியடைந்தை அறிந்து யாழ்.கச்சேரியில் கண்ணீர் விட்டார்.அவரது தீவிர ஆதரவாளர் கொடிகாமம் ” ஐயா” படுகொலையை கண்டும் கண்ணீர் விட்டு அழுதார்.ஐயாவின் அந்தியேட்டி கிரியைகள் முடியும் வரையும் கறுப்பு பட்டி அணிந்திருந்தார்.