எழுக தமிழ் பேரணி எதிர்வலைகள்!

மிகுந்த தயாரிப்புகள், அறிவிப்புகள், கோரிக்கைகள், பத்திரிகை ஆசிரியதலையங்கம் என ஆர்ப்பரித்து நடாத்தப்பட்ட எழுக தமிழ் பேரணி பற்றி, சங்கூதும் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், எழுக தமிழ் பேரணி சிங்கள தலைவர்களை மேலும் கலங்க வைக்கப்போவது திண்ணம். யாழில் 3000 ஆயிரம் பேர் கூடிய எழுக தமிழ் நிகழ்ச்சியால் சிங்கள அரசு ஆட்டம் கண்டுள்ளது, என தற்பெருமை பேசிய வேளை தென்னிலங்கை பத்திரிகை செய்தி அதை மறுதலித்தது.

62 இலட்சம் வாக்குளைப் பெற்று ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவிற்கு, வெறும் ஒன்றரை இலட்சம் வாக்குகளைப் பெற்று வடமாகாண முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரன் எவ்வாறு சவால் விடுக்க முடியும் என, சமூக வலுவூட்டல் பிரதியமைச்சராக பதவிவகிக்கும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். எத்தனை நடைபயணம் நடந்தாலும் ராணுவமுகாங்கள் அகற்றப்படமாட்டா என, பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்தார் என்பதே அந்த செய்தி.

எம்மவர் பலவீனம் அறிந்து தான் இந்த இரு பிரதி அமைச்சர்களும் திருவாய் மலர்ந்திருப்பர் என்பது என் எண்ணம். காரணம் ஊர் இரண்டுபட்ட நிலை. எழுக தமிழ் நிகழ்வுக்கு தலைமை தாங்கிய தமிழ் மக்கள் பேரவை, தமிழ் அமைப்புகளை ஓரணியில் கொண்டுவரும் செயலை விடுத்து, வலிய வந்த ஈ பி டி பி கட்சியை கூட விலத்தி அவர்கள் அழைத்து வந்த மக்களின் வாகனத்தை கஜேந்திரகுமார் அணி வழிமறித்து, வாக்குவாதபட்டு புளட் சித்தார்த்தன் தலையிடும் நிலை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் புளட் சித்தார்த்தன் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், வட மாகாண முதல்வர் மற்றும் இரண்டு அமைச்சர்கள் தவிர்த்து ஏனையவர், சபை முதல்வர் உட்பட கலந்து கொள்ளவில்லை. திலீபனுக்கு சிலந்தி சின்ன துளசியுடன் அஞ்சலி செய்த ஆனந்தசங்கரி ஐயாவையும், எழுக தமிழ் நிகழ்வில் காணமுடியவில்லை. உளவு தகவல்படி இது இவர்கள் தம்முள் நடத்தும் அரசியல் பதவி பலப் பரீட்சை என்பது, சிங்களத்துக்கு புரிந்திருக்கும்.

கலந்து கொண்ட மக்களை பொறுத்தவரை எதுவரை போனால் இயல்புநிலை திரும்புமோ, அதுவரை அலையும் மனநிலையில் எந்தப்பேரணி என்றாலும், உண்ணாவிரதம் என்றாலும், எத்தனை சிரமங்களுக்கு முகம் கொடுக்கவேண்டி வந்தாலும் கலந்து கொள்ளும் நிலை, 1961 சத்தியாகிரகம் முதல் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பும் தமிழ்மக்கள் பேரவையின் எழுக தமிழ் வரை மாறவில்லை. அது என்றும் மாறாத ஒன்று. ஆனால் அவர்களின் தலைமைகள் மட்டும் தம் பதவி நிலை கொண்டு தேவைக்கு ஏற்பமாறும்.

இது தெரிந்த சிங்களம் எம்மவரை கொண்டே தம் விருப்புகளை நிறைவேற்றும் செயல், சுதந்திரத்துக்கு முன்பே தொடங்கிய சித்து விளையாட்டு. பால் பருகப்போன பூனைகள் மக்களை எலிகளாக பாவித்து பதவிசுகம் கண்ட வரலாறு தொடரும்வரை, பொங்கு தமிழ் முதல் எழுக தமிழ் வரை தலைமைகள் மட்டுமே மாறும். மற்றப்படி மக்களின் வாழ்வு நிலை மாற்றம் காணாது, சட்டியில் இருந்து அடுப்பில் விழும் நிலைவரை நீடிக்கும். நல்ல மேய்ப்பரை எதிர்பார்த்து தேர்தலில் வாக்களிக்கும் மக்கள், தங்களை ஏய்ப்பவரை தூக்கி ஏறிய துணியும் வரை, காலத்துக்கு காலம் காவடி கரகம் ஆடும் நிலை தொடரும்.

(ராம்)