எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் – பகுதி – 17

2019ம் ஆண்டு இறுதிப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட கோத்தாபய ராஜபக்சா அவர்கள் தமது தேர்தற் பிரகடனங்களாக, இலங்கை சுய சார்பான பொருளாதார நிலையை அடைவதற்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தையும் மேற் கொள்வார் எனவும், விவசாயிகளின் உற்பத்திகளுக்கு அரசாங்கம் வழங்கும் உத்தரவாத விலைகள் கணிசமாக உயர்த்தப்படும் என்றும், விவசாயப் பயிர்களுக்கான உரங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் பல வாக்குறுதிகளை வழங்கினார். இலங்கை மக்களின் அமோகமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியானார்.  

அவர் ஆட்சிக் கட்டிலில் ஏறி அமர்ந்த சில மாதங்களுக்குள்ளேயே கொரோணா 19வைரஸ் கிருமி உலகைப் பிடித்து குலுக்கத் தொடங்கி விட்டது. ஏற்கனவே வெளிநாட்டு செலாவணிப் பற்றாக்குறை, வெளிநாட்டுக் கடன்களின் அதீதமான அதிகரிப்பு, அரசாங்க வருமானம் போதாமை என்பனவற்றால் முன்னர் அரசாங்கத்தை அமைத்திருந்தவர்கள் இலங்கையின் அரச நிர்வாகத்தை சீராக நடத்த முடியாமல் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகினார்கள் –  அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி என்பது ஒரு தேக்க நிலையை அடைந்திருந்தது – சில முக்கியமான துறைகள் வீழ்ச்சிப் போக்குகளைக் கொண்டிருந்தன – மக்களின் அடிப்படைத் தேவையான பொருட்களின் விலைகளெல்லாம் தொடர்ச்சியாக ஏறிக் கொண்டிருந்தன – படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பென்பது பெரும் சிக்கலான ஒரு விடயமாக ஆகியிருந்தது – அரசாங்க ஊழியர்கள் மற்றும் பெருந் தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் பல ஆண்டுகளாக உயர்த்தப்படாத ஒரு விடயமாக தொடர்ந்தது. இவ்வாறான நிலையில் கொரோணாவும் இலங்கையை ஆட்டிப்படைக்கத் தொடங்கியவுடன் அந்தப் பிரச்சினைகள் கோத்தாவின் தலைமையில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பவர்களுக்கு பல்வேறு கோணங்களிலும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளாக மாறின.  

அரசாங்கம் இறக்குமதிகளை பழைய போக்கிலேயே அனுமதிக்க முடியாமல் திடீர் கட்டுப்பாடுகளை – தடைகளை மேற்கொண்டது. அதற்கு மாற்றுத் திட்டமாக, இயற்கை விவசாயத்துக்கு நாடு உடனடியாக மாற வேண்டும் என்ற வகையாகவும் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களை உள்நாட்டு உற்பத்திகள் மூலம் உடனடியாக பிரதியீடு செய்ய வேண்டுமெனவும் தடாலடி அறிவிப்புகளை மேற்கொண்டது -‘இயற்கை சார் விவசாயப் புரட்சி’ மூலம் சுய சார்பு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே தமது கொள்கை என்பது போல ஜனாதிபதி அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டார்.  

அரசியல் யாப்பில் 20வது திருத்தத்தை மேற்கொண்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி தனது வாயில் இருந்து உதிர்பவைகளெல்லாம் ‘அரச கட்டளைகளே’ அவையே நாட்டின் சட்டங்கள் என்ற வகையாக பிரகடனங்களையும் மேற்கொண்டார். மனச்சாட்சிப்படியான தனது கொள்கையாகவே ஜனாதிபதி அவரது ‘இயற்கை சார் விவசாயப் புரட்சி’யை அறிவித்தாரா அல்லது இறக்குமதி செய்வதற்கான அந்நியச் செலாவணிகள் இல்லாமையின் காரணமாகத்தான் இந்தக் கொள்கையை திணித்துள்ளாரா என்பதெல்லாம் இன்னமும் அரசியல் பொருளாதார ஈடுபாட்டாளர்களிடையே ஒரு விவாதப் பொருளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது.  

எவ்வளவுதான் ‘தலைகுத்தி’ச் செயற்பட்டாலும் இலங்கை முழுவதையும் இயற்கை சார் விவசாயத்தை மட்டுமே மேற்கொள்ளும் ஒரு நாடாக இவ்வளவு வேகமாக மாற்ற முடியுமா? உலகில் எங்காவது எந்த நாடாவது அவ்வாறாக ஆகியிருக்கிறதா அல்லது குறைந்த பட்சம் அவ்வாறான நோக்குடன் எந்த நாடாவது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றதா? ஜனாதிபதி அப்படித்தான் ஆசைப்பட்டாலும் அதனை நிறைவேற்றுவதற்கான பொருளாதார நிலையில் இலங்கை இருக்கிறதா? சிரமங்களையெல்லாம் எதிர் நோக்கியபடி குறிப்பிட்ட இலக்கை நோக்கிய முன்னேற்றங்களைச் சாதிப்பதற்குரிய வகையில் அரசின் விவசாய அமைச்சும், இலாக்காக்களும், மற்றும் விவசாய அபிவிருத்தியோடு தொடர்பான ஏனைய அரச நிறுவனங்களும் தயார் நிலையிலோ, தகுதியான நிலையிலோ இருக்கின்றனவா? என்ற தொடர் கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது.   

பசுமைப் புரட்சி செய்தோம்‘ 

உணவு உற்பத்தியைப் பெருக்கினோம்‘ 

விவசாயிகளுக்கான நிலப் பற்றாக்குறையை நீக்க வேண்டும், கிராமப் புற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ற திட்டங்கள் தொடங்கப்பட்டு இன்று ஏறத்தாழ 90 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1931ல் சர்வசன வாக்கெடுப்பு வழங்கப்பட்டு, கணிசமான அபிவிருத்தி அதிகாரங்களோடு இலங்கையில் சட்ட சபை அமைக்கப்பட்டதோடு அதன் ஆட்சிக்கு தலைமை வகித்த டி.எஸ்.சேனநாயக்கா மேற்குறிப்பிட்ட திட்டங்களை ஆரம்பித்தார்.  

1940களில் தொடங்கி 1950களின் ஆரம்பத்தில் துரிதப்படுத்தப்பட்ட ‘இங்கினியாகல திட்டம்’ மூலம் அம்பாறை மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் விவசாயக் குடியேற்றத் திட்டங்கள் ஆக்கப்பட்டன. அடுத்து கந்தளாய் நீரேரி அபிவிருத்தித் திட்டமும் அல்லை – கந்தளாய் விவசாயக் குடியேற்றத் திட்டமும் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மின்னேரியாத் திட்டம், மகாவலித் திட்டம், மதுரு ஓயாத் திட்டம் என பெருமளவில் விவசாய குடியேற்றத் திட்டங்கள் மூலம் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. வடக்கு கிழக்கு மாவட்டங்களின் நிலங்களை நோக்கி அனைத்து கோணங்களுடாகவும் அரச உதவி மற்றும் துணைகள் கொண்டதான விவசாயத் திட்டங்களுக்காக தென்னிலங்கை சிங்கள கிராமத்தவர் குடும்பங்கள் பல்லாயிரக் கணக்கில் குடியேற்றப்பட்டனர். 

அதேவேளை, 1956 தொடக்கம் 1965வரை இலங்கையை ஆண்ட பண்டாரநாயக்காக்களின் ஆட்சிக்காலத்தில் கிராமப் புறங்களில் நிலவிய விவசாய நிலங்கள் தொடர்பான உறவு முறைகளில் முன்னேற்றங்கள் கொண்டுவருவதற்கான சட்டங்கள் ஆக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. அதேவேளை முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியால் தொடங்கப்பட்ட அரச உதவி மற்றும் துணையுடனான சிங்கள விவசாயக் குடியேற்றத் திட்டங்களைத் தொடர்ந்ததோடு, பதவியாத் திட்டம், சேருவாவெல திட்டம் என மிகப் பெரும் முன்னெடுப்புகளுடன் தொடர்ந்தும் விரிவாக்கம் செய்யப்பட்டன.  

1965ல் டட்லி சேனநாயக்கா தலைமையில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியானது ‘பசுமைப் புரட்சி மூலம் உணவு உற்பத்தியைப் பெருக்குவோம்’ எனும் சுலோகத்துடன் செயற்கை உரப்பாவனை, பூச்சி நாசினி ரசாயனங்களின் பாவனைகள், டிரக்டர் பாவனைகள் என உழுதலும், பயிர் செய்தலும், பயிர் பராமரிப்புகளும் நவீனமயமாக்கப்பட்டன. மேலும் குறுகிய காலத்தில் கூடிய விளைச்சலைத் தரும் பயிரின வகைகள் என்ற வகையில் செயற்கையாக வீரியமூட்டப்பட்ட பயிர் விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக தானிய விளைச்சல்களின் அதிகரிப்பு நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் நிகழ்ந்தன.  

தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான திருப்பமே புரட்சி – இங்கு

மக்களின் தலையில் மண் அள்ளிப் போட்டதே பசுமைப் புரட்சி

மறுபக்கமாக இலங்கை மீது திணிக்கப்பட்ட ‘பசுமைப் புரட்சியால் விவசாயிகளிடமிருந்த கால்நடைகளின் எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சியடைந்தது, உடலுக்குத் தேவையான சத்துகள் மிக்க மரபுரீதியான தானிய பயிர் வகைகள் காணாமற் போயின, கால்நடைகள் குறைந்ததால் இயற்கையான உரங்களின் கிடைப்பனவும் குறைந்தது. பசுமைப் புரட்சியால் உணவு உற்பத்தி பெருகி உணவு வகைகளின் இறக்குமதி குறைந்து விடும் எனப்பட்டது. உணவு இறக்குமதி குறைந்ததுதான் – ஆனால் பசுமைப் புரட்சியால் கட்டமைக்கப்பட்ட விவசாயத்தை தக்க வைப்பதற்கான ரசாயன தயாரிப்புக்களையும் விவசாய யந்திரங்களையும் இறக்குமதி செய்வது கட்டாயமாகி விட்டது.     

யூரியா போன்ற ரசாயன தயாரிப்புகள் மண்ணிலுள்ள வளங்களுக்கு மேலும் உரம் ஊட்டுபவையல்ல. ஒரு சாதாரண வாசகனின் மொழியில் சொல்வதானால், அது  மண்ணிலுள்ள பயிர் வளர்ச்சிக்கான சத்துக்களை பயிர்கள் உறிஞ்சுவதற்கு இழுத்துக் கொடுப்பவை. அவை மண்ணை மீள வளப்படுத்த மாட்டாதவை மட்டுமல்ல – மண்ணை மீள வளப்படுத்திக் கொண்டிருக்கும் உயிரினங்களையும் கொன்றொழித்து விடுபவை. இந்த செயன்முறை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிற போது கால ஓட்டத்தில் மண் கொண்டிருந்த வளங்கள் இழக்கப்படுகின்றன. இதனால் மண் வளத்தை பயிர்களுக்கு இழுத்துத் தரும் இராசயனங்களின் பிரயோகத்தை தொடர்ச்சியாக அதிகரிக்கும் போக்கு கட்டாயமாகிறது, அதிகப்படியான இராயனப் பாவனையின் போது பயிருக்கான நீரின் தேவையும் அதிகரிக்கின்றது. ரசாயனத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க அது நிலத்தடி நீரிலும் பாதகமான ரசாயனங்களின் அதிகரிப்பினை ஏற்படுத்துகிறது. அத்துடன் பயிர்களின் விதைகளின் வீரியத்தையும் சிதைக்கிறது. இதனால் புதிதுபுதிதாக விதைகளை உருவாக்க வேண்டியேற்படுகிறது. 

இக்கட்டுரைப் பகுதியின் நோக்கம் விவசாயத்தில் ரசாயனங்களினுடைய பிரயோகங்கள் தொடர்பான விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சிகளின் முடிவுகளோடு சம்பந்தப்பட்டவற்றை விபரிப்பதல்ல. மாறாக அவை தொடர்பான பொருளாதாரத் தாக்கங்களை அவதானிப்பதோடு மட்டுப்படுத்திக் கொள்வதே சரியாகும். எனவே மேற்பந்தியினை மேலும் தொடராமல்; இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்.   

பசுமைப் பரட்சி உணவு உற்பத்தியைப் பெருக்கியது என்பதை மறுப்பதற்கில்லை. நாட்டுக்கான உடனடித் தேவையாக அது இருந்தது என்பதுவும் உண்மையே. அதனை ஐ.நா. வின் உணவு மற்றும் விவசாய அமைப்பும் உலக வங்கியும் சேர்ந்து தமது கடன் உதவிகளையும் மற்றும் ஏனைய துணை உதவிகளையும் பேரமாக்கி நாட்டின் விவசாயத்தை ‘பசுமைப் புரட்சி’க்குள் இழுத்துச் சென்றன. இதனால் டிரக்கடர்களையும், ரசாயன உரங்களையும், கிருமி நாசினிகளையும் மேலைத் தேச நாடுகள் உணவுப் பற்றாக்குறையால் போராடிக் கொண்டிருந்த அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு அள்ளு கொள்ளையாக ஏற்றுமதி செய்தன. கால ஓட்டத்தில் விவசாயத்துக்கான ரசாயன பண்டங்கள் இல்லையென்றால் நாட்டில் பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடும் என்ற வகையான கட்டாய நிலைக்கு நாடு தள்ளப்பட்டு விட்டது. பசுமைப் புரட்சியானது உடனடித் தேவைகளுக்காக இயற்கையை உறிஞ்சி பொருளாதார வளர்ச்சியைப் பெருக்கும் முறையாக அமைந்ததால், அது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கான இயற்கை வளங்களின் பராமரிப்புக்கு எதிரான ஒன்றாக அமைந்து விட்டது.  

பசுமைப் புரட்சியானது மண்வளம் மற்றும் நீர் வளம் கெடுவதற்கு மட்டுமல்ல. சமூகரீதியாகவும் பல பாதகங்களை விளைவித்துள்ளது. சிறிய மற்றும் ஏழை விவசாயிகளை கடனாளிகளாக்கி கடைசியாக அவர்களை நிலமற்றவர்களாக்கி மற்றவர்களின் நிலங்களின் கூலிகளாக்கியது அல்லது கிராமங்களை விட்டு நகரங்களை நோக்கி ஓடப்பண்ணியது.  சீவனோபாய விவசாயத்தை சுயசார்பு விவசாயமாக மாற்றுவதற்குப் பதிலாக கிராமிய மட்ட பணக்காரர்களும், விவசாய உற்பத்திப் பண்டங்களுக்கான சந்தைகளை ஆதிக்கத்துக்குள் வைத்திருக்கும் வர்த்தகர்களும் ஏழை மற்றும் சிறிய விவசாயிகளை தடையற்று சுரண்டுவதற்கும் வழி வகுத்துள்ளது. விவசாயிகளுக்கு உதவுவதற்கென அரச வங்கிகளை செயற்படுத்திய போதிலும் அவை எதுவும் பசுமைப் புரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை பாதுகாக்கவில்லை. அவையும் ஏழை மற்றும் சிறு விவசாயிகளை அறவிட முடியாக் கடன்காரர்களாக்கி அவர்கள் அதற்குப் பின்னர் வேறெங்கும் கடன் வாங்குவதற்கு தகுதியற்றவர்களாக ஆக்கி விட்டுள்ளன.  

பசுமைப் புரட்சியை முன்னிலைப் படுத்தி அதனை பிரபல்யப்படுத்தி அதற்குள் விவசாயிகளை அமிழ்த்தி விட்ட அரசாங்கங்கள் பசுமைப் புரட்சியால் எற்பட்ட பாதிப்புகள் – பாதகங்கள் தொடர்பான மாற்று ஏற்பாடுகளில் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை. மாறாக அரசாங்கங்கள் இரசாயன உரங்கள் மற்றும் கிருமி நாசினிகள் தொடர்பான இறக்குமதிகளிலும் அவற்றின் விநியோகங்கள் தொடர்பிலும் ஊழல்கள் மற்றும் மோசடிகள் மூலம் நலன் பெறுவதிலேயே அக்கறை கொண்டவர்களாக ஆகி விட்டார்கள். அத்துடன், இறக்குமதி வர்த்தகர்கள், அரிசி ஆலை முதலாளிகள் மற்றும் விவசாய பண்டங்களின் சந்தைகளை தமது ஆதிக்கத்தில் வைத்திருக்கும் வர்த்தகர்கள் ஆகியோரின் நலன்களைப் பேணுவதிலேயே அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் அக்கறை காட்டி வந்துள்ளன.  

புதிய விவசாயப் பாதைகள் விடியலைக் காட்டினாலே

கடந்த கால வேதனைகள் கடந்து போனவையாகும்

பசுமைப் புரட்சி எனும் ‘சர்வதேச சதி’த் திட்டத்துக்கு பலியான நாடுகளில் இந்தியாவும் முக்கியமானதொரு நாடே. எனினும், இந்தியா தனக்குத் தேவையான விவசாய ரசாயனப் பண்டங்களை தானே உற்பத்தி செய்யும் நாடாக ஆகி விட்டது. இந்தியாவில் அரசாங்கங்கள் மாறுகின்ற போது பெரும்பாலும் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தல் என்பதுவும் வழமையாகி விட்டது. இந்தியா தனது காலநிலை வேறுபாடுகள் மற்றும் மாறுபாடான நிலங்களின் தன்மைகள் ஆகியவற்றிற்கேற்ற வகையான பயிர்களை தனது ஆராய்ச்சிகள் மூலமாகவே விருத்தி செய்யும் வல்லமைகளை வளர்த்துக் கொண்டுள்ளது.  

மேலும், இயற்கை விவசாயம், குறைந்த நீர் பயன்பாடு, சூரிய சக்தி பாவனை போன்றவற்றை நோக்கி விவசாயிகளை நகர்த்துவதற்கான பல்வேறு ஏற்பாடுகளையும் மான்யங்கள் வழங்கும் திட்டங்களையும் கடந்த இரு பத்தாண்டுகளுக்கு மேலாக தாராளமாகவே நடைமுறைப்படுத்தி வருகின்றது. பொருத்தமான வகைகளில் இயற்கை சார் விவசாயத்திற்கான உரங்கள் மற்றும் மண் வளமாக்கும் தயாரிப்புகளையும் மற்றும் பயிர்களில் ஏற்படும் நோய்களை எதிர்ப்பதற்கான உயிரியற் தயாரிப்புகளையும் பெருமளவில் இந்தியா தானே உற்பத்தி செய்து கொள்கிறது. இவ்விடயங்களில்அரச துறைகளும், தனியார் துறைகளும் மிகப் பாரிய அளவில் பங்களிக்கின்றன. ஆனால் இலங்கை அவ்வாறான பாதையில் ஒரு சிறிய தூரத்துக்குக் கூட பயணித்ததாகத் தெரியவில்லை. 

அதி உத்தம ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சாவின் ஆட்சியானது தற்போது கட்டாயப்படுத்தி வரும் இயற்கை உரப் பாவனை பற்றிய விடயமானது முழுமையான சிந்தனையின் அடிப்படையில் மேற் கொள்ளப்பட்டதோ அல்லது முறைப்படியான திட்டமிடுதலின் வழியாக செயற்படுத்தப்படுவதாகவோ இல்லை, மாறாக, அவரது ஆட்சி எதிர் நோக்கியுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியின் விளைவான பதட்டத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுமாற்றத்தின் செயற்பாடென்றே எதிர்க்கட்சியினரும், நாட்டின் பொதுவான அறிஞர்களும் கருதுகின்றனர். இந்த இடத்தில் ஒரு கேள்வி, அதாவது – அதிஸ்டவசமாக எதிர்வரும் ஒரு குறுகிய காலத்துக்குள் அரசுக்கு அந்நியச் செலாவணிப் பற்றாக்குறைப் பிரச்சினை தீர்ந்து விட்டால், ஜனாதிபதி கோத்தாபய தொடர்ந்தும் தமது இயற்கை விவசாய ‘புரட்சி’யை முன்னெடுப்பாரா? அல்லது ‘அந்தோனியாருக்கு பகிடி விழுங்கேல்லை’ என்று சொல்லி விட்டு பழைய குருடி கதவைத் திறவடி என இறங்கி விடுவாரா? 

மேலும், இலங்கை முழுவதிலும் இயற்கை சார் விவசாய முறையை கடைப்பிடிப்பது சாத்தியமா? முடியாதா? ஏன் முடியாது? எப்படி முடியும்? என்ற கேள்விகளோடு, உலகில் எங்காவது நாடு தழுவிய அளவில் இயற்கைசார் விவசாய முறையை நோக்கி மாறும் முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றனவா?அவ்வாறானதொரு நம்பிக்கையை எந்த வல்லமை பெற்ற நாடாவது தெரிவித்திருக்கிறதா? இன்று சர்வதேச ரீதியில் விவசாய முன்னேற்றங்களை சாதிப்பதற்காக மேற் கொள்ளப்பட்டு வரும் மாற்று வகையான முயற்சிகளை இலங்கை எந்தளவு தூரம் கடைப்பிடிக்க முயற்சிக்கின்றது போன்ற பல விடயங்கள் சிந்தனையில் கொள்ளப்பட வேண்டியனவாக உள்ளன.   

செயற்கை உள்ளீடுகளுக்கு மாற குறுகிய காலம் போதும் – ஆனால்

இயற்கை சார் நிலை உறுதியாக உரிய கால அளவு அவசியமாகும். 

இப்போது உலகின் பல்வேறு பாகங்களிலும் இயற்கை விவசாயம் பற்றிய பேச்சுகளும் உரையாடல்களும் அதிகரித்துள்ளன. ஆரோக்கியமான உணவுப் பயிர்ச் செய்கையை நோக்கி முன்னேற வேண்டுமென்ற கோசங்கள் முன்னணிக்கு வருகின்றன. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இளைஞர்கள் மத்தியில் அந்த எண்ணம் விரிவடைந்து வருகின்றது. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலிருந்து விவசாய உற்பத்திகளை இறக்குமதி செய்யும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் அவ்வாறான உற்பத்திகளை முன்னிலைப்படுத்துகின்றன. அவ்வாறான உற்பத்திகளுக்கு அபிவிருத்தி அடைந்த நாடுகளில் நல்ல சந்தை வாய்ப்புகள் உள்ளன என்ற எண்ணமும் வழங்கப்படுகின்றது. அவ்வாறான ஏற்றுமதிகளை அதிகரிப்பதன் மூலம் அந்நிய செலாவணி வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடியுமென்ற எண்ணத்தில் குறைவிருத்தியாக உள்ள நாடுகளின் அரசுகளும் அதனை முன்னிலைப்படுத்துகின்றன. இதேவேளை, உரிய தரமுடையவையா அல்லது தரமற்றவையா என்ற விடயங்களுக்கு அப்பால், இயற்கை சார் உரங்களைத் தயாரித்து விற்பனை செய்கின்ற தனியார் வர்த்தக நடவடிக்கைகளும் சிறியதும் பெரியதுமாக இப்போது படிப்படியாக அதிகரித்து வருகின்றன. அந்த வர்த்தக அமைப்புகளும் இயற்கை விவசாயத்தை முன்னிலைப்படுத்தும் விளம்பரங்களை பல்வேறு வடிவங்களில் கவர்ச்சிகரமாக மேற்கொள்கின்றன.  

செயற்கை விவசாயம் எதிர்(ஏள) இயற்கை விவசாயம் என்னும் தலையங்கம் தற்போது பல்வேறு மட்டங்களிலும் கவர்ச்சிகரமான விவாத விடயமாக ஆகியிருக்கின்றது. இந்த விவாதங்களில் இயற்கை விவசாயத்தை ஆதரிப்போர் உணவின் ஆரோக்கியம் பற்றியும், மண்வளம் மற்றும் நீர்வளம் மாசடைதல் பற்றியும் பிரதானமாக விவாதிக்கின்றனர். அதேவேளை செயற்கை விவசாயத்தின் தவிர்க்க முடியாத நிலை பற்றி விவாதிப்போர் இயற்கை விவசாயத்துக்கு நாடு மாறுவதற்கு ஒரு நீண்ட காலம் தேவையெனவும், இரசாயன உற்பத்திகள் பாவிக்கப்படாவிட்டால் பயிர்களுக்கு பாதுகாப்பில்லை மற்றும் விளைச்சல் குறைவாகும் எனவும் விவாதிக்கின்றனர்.  

நீடித்து நிலைக்கக் கூடியதாகவும் சுயசார்பானதுமான விவசாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு இயற்கை சார் விவசாய முறையை நோக்கிய முன்னேற்றங்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் அதனை எப்படி சாதிப்பது, அதனை சாதிக்க முயலுகின்ற போது எதிர் நோக்குகின்ற சவால்களை எப்படி சமாளிப்பது என்பவை இங்குள்ள பிரதானமான பிரச்சினையாக உள்ளன. விவசாயிகளின் பொருளாதார வாழ்வாதாரம் தொடர்பாக எந்தவித உத்தரவாதமும் தரக்கூடியதான கட்டமைப்பு இல்லாத போது அவர்களின் விவசாய முயற்சிகளை ஆபத்தான செயன்முறையினூடாக கொண்டு செல்லும்படி வற்புறுத்த முடியாது. அபிவிருத்தி அடைந்த நாடுகளில் விவசாயத்தில் தங்கியிருப்போரின் தொகை அந்த நாடுகளின் மொத்த உழைப்பாளர்களின் தொகையில் இரண்டு சதவீதமோ அல்லது மூன்று சதவீதமோதான். அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் அது ஒரு சதவீதம் கூடக் கிடையாது. அந்த நாடுகளால் தமது நாட்டின் அனைத்து விவசாயிகளையும் தமது சமூக பாதுகாப்பு கொடுப்பனவு திட்டத்தின் கீழ் கொண்டு வர முடியும். தேவையான அளவுக்கு சுகாதாரமான உணவுப் பண்டங்களை அதிக விலை கொடுத்து அவர்களால் இறக்குமதி செய்து கொள்ளவும் முடியும்.  

ஆனால், இலங்கையின் நிலைமை அவ்வாறானதல்ல. இலங்கையில் விவசாயத்தில் ஈடுபடுவோரின் மொத்த எண்ணிக்கை நாட்டின் மொத்த உழைப்பாளர்களில் சுமார் 30 (முப்பது) சதவீதத்தினர். மேலும் தற்போதுள்ள நிலையில் இயற்கை முறை விவசாயம் என்று சொல்லப்படுகின்ற முறையின் மூலம் விவசாயம் செய்தால் உற்பத்தியின் அளவு மிகவும் வீழ்ச்சியடையும் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். அத்துடன் கழிவுகள் சேதங்கள் அதிகமாக இருக்கும் என்கின்றனர். மேலும் அறுவடையாகும் உற்பத்தியிலிருந்து கிடைக்கும் வருமானம் குறைவாக இருக்கும் என்பதுவும் ஒப்புக் கொள்ளப்பட்ட விடயமாகும். இதற்கு மாற்றாக, அவ்வாறாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு சந்தையில் விலை அதிகமாகக் கிடைக்க வேண்டும் அல்லது அரசாங்கம் அவ்வகையான அனைத்து விவசாயப் பண்டங்களுக்கும் உரிய அளவில் உத்தரவாத விலைகளை வழங்கி கொள்வனவு செய்யத் தயாராக இருக்க வேண்டும். அதிக விலை கொடுத்து வாங்க மக்கள் தயாராக இருக்க மாட்டார்கள். மேலும் உணவு வகைகளின் உற்பத்திகளில் ஏற்படும் வீழ்ச்சியால் அதிகரிக்கும் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கு மேலும் அதிகமான அளவில் உணவுப் பண்டங்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கும் நாடு உள்ளாகும்.  

நாட்டு முன்னேற்றம் பற்றி கனவு காணலாம் – ஆனால் அதற்கு

ஆற்றல்கள் கொண்ட அடித்தளங்கள் அமைய வேண்டும்

முதலாளித்துவ தேர்தல் ஜனநாயகக் கட்டமைப்பைக் கொண்ட இலங்கையானது சீனாவின் அரசியற் கட்டமைப்பைக் கற்பனை செய்ய முடியாது. சீனாவின் விவசாயக் கட்டமைப்பு முழுமையாக ஒழுங்குபடுத்தப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இலங்கையின் விவசாயமானது உதிரியான விவசாயிகளினால் மேற்கொள்ளப்படும் சீவனோபாய விவசாய அமைப்பாகவே உள்ளது. இந்தியாவின் விவசாயக் கட்டமைப்பும் இலங்கை கொண்டிருக்கும் அதே பலயீனங்களைக் கொண்டதாயினும், இந்தியா பல்வேறு வகையிலும் சுய பொருளாதார ஆற்றல்களை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து கட்டியெழுப்பிக் கொண்டுள்ளது. 

இலங்கையை இயற்கை சார் விவசாய நாடாக ஆக்க வேண்டுமென்று ஆசைப்படுவதில் தவறில்லை. இலங்கையை முழுமையாக அந்த நிலைக்கு இட்டுச் செல்ல முடியுமா அல்லது முடியாதா என்ற விவாதத்தை விட, முடிந்த அளவுக்கு இயற்கைசார் விவசாயத்தை நாடு தழுவிய வகையில் உற்சாகப்படுத்த வேண்டும் – முன்னிலைப்படுத்த வேண்டும் – பிரபல்யப்படுத்த வேண்டும் – நம்பிக்கைகளை வளர்க்க வேண்டும் – அதற்கான ஏற்பாடுகளாக மான்யங்கள், பயிற்சிகள், உத்தரவாதங்கள், தேவையான உள்ளீடுகளின் கிடைப்பனவுகள் – அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புகள் என்பன உத்தமமான அளவுக்கு மேற்கொள்ளப்பட வேண்டும் – அதற்குரிய வகையில் விவசாய அபிவிருத்தி தொடர்பான அனைத்து அரச நிறுவனங்களும் தயார்படுத்தப்பட வேண்டும். இயற்கை சார் விவசாயிகள் எதிர்நோக்கும் ஆபத்துக்கள், பாதகங்கள், இழப்புகள் தொடர்பில் அரசாங்கம் தாராளமான நிவாரணங்களை காலதாமதமெதுவுமின்றி வழங்குதல் வேண்டும். இதையெல்லாம் விட்டுவிட்டு செயற்கை உர இறக்குமதித் தடைகள் மூலம் விவசாயிகளைக் கட்டாயப்படுத்த முடியாது. உணவுப் பண்டங்களின் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் மூலம் பரந்துபட்ட மக்களை அவர்களது வயிற்றை இறுக்கிக் கட்டிக் கொள்ளும்படி நிர்ப்பந்தித்தால் விவசாய புரட்சி நடக்காது. மாறாக அரசுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சிகளே அதிகரிக்கும்.   

இலங்கையின் விவசாயிகளில் 90 (தொண்ணூறு) சதவீதமானவர்கள் இரண்டு (2) ஏக்கருக்கும் குறைவான நிலப்பரப்பையே தமது விவசாய உடைமையாகக் கொண்டிருக்கின்றனர். 50 (ஐம்பது) சதவீதமானவர்கள் 1 (ஒரு) ஏக்கருக்கும் குறைவான விவசாய நிலப்பரப்பையே கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே அவர்கள் வாங்கிய கடனைக் கட்ட முடியாமலும் விளைச்சல்களை விற்று கிடைக்கின்ற வருமானத்தில் மிக அடிப்படையான தமது தேவைகளைக் கூட கொள்வனவு செய்து கொள்ள முடியாதவர்களாகவும் உயிரைக் கையில் பிடித்தபடி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நிலைகளைக் கணக்கிலெடுத்து (1)அவர்களை தனியார்களாகவோ அல்லது பொருத்தமான வகையான ஊட்டுறவு முறை மூலமாகவோ ஒருங்கிணைந்த பண்ணை முறையில் விவசாயம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். (2) மேலும் அவர்கள் மத்தியில் எந்த வகை விவசாயமாயினும் துல்லிய விவசாய முறையையும் பொருத்தமான வகையில் புதிய நுட்பங்களையும் கடைப்பிடிப்பதற்கு அவர்களை முறையாக பயிற்றுவிக்க வேண்டும் (3)விவசாயிகள் எந்த கால நிலையில் எந்த நிலத்தில் எந்த பயிரினை எந்த அளவுக்கு மேற் கொள்வது என்பதில் அது தொடர்பான நிபுணத்துவம் உள்ளவர்களைக் கொண்ட அரச நிறுவனங்கள் அக்கறையோடு ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். (4)தேவையான உள்ளீடுகளையும், ஆலோசனைகளையும் ஒத்துழைப்புகளையும் விவசாயிகளுக்கு உரிய நேரத்துக்கு வழங்குவதில் அரச நிறுவனங்கள் காத்திரமாக செயற்பட வேண்டும்; (5) விவசாயிகள் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் உள்ள சிரமங்களையும் நஷ்டங்களையும் குறைக்கும் விதமாக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  

இப்படியாக நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி பயணிப்பதற்கான செயற்திட்டங்களை அரசாங்கம் முதலில் முன்னெடுக்க வேண்டும். ஆனால் இங்குள்ள கேள்வி என்ன வென்றால் வெளிநாடுகளிடமிருந்தும் உள்நாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்தும் வாங்கிய கடனுக்கான வட்டியைக் கொடுப்பதற்கே அல்லாடும் அரசாங்கம் – அரச ஊழியர்களுக்கான சம்பளம் கொடுப்பதற்கே பணத்தை அச்சடித்துத்தான் கொடுக்க வேண்டிய நிலையிலுள்ள அரசாங்கம் மேற்குறிப்பிட்டவைகளை கண்ணும் கருத்துமாகக் கொண்டு செயற்படுத்த முடியுமா?  

இந்நிலையில் இயற்கைசார் பயிர்ச் செய்கையை இலங்கை விவசாயிகள் அனைவர் மீதும் திணிக்க முயல்வது உண்மையில் இலங்கையின் எதிர்காலம் மீது அரச அதிபர் கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடா? அல்லது ஏதோ விடயங்களை மறைப்பதற்கான – அவை பற்றிய பரந்து பட்ட மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான இலக்குகளைக் கொண்ட நடவடிக்கைகளா? இலங்கையின் அனைத்து பாகங்களிலும் மிகப் பெரும்பான்மையான விவசாயிகள் அரசாங்கத்தின் அறிவிப்புகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் வெளிப்படுத்தும்; ஆத்திரமும் விரக்தியுமே மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கான பதில்களில் உள்ளடங்கி உள்ளனவற்றை தெளிவாகத் தெரிவிக்கின்றன.   

(அடுத்து பகுதி 18ல் தொடருவோம்.)