கனடாவின் நினைவுத் தூபி அரசியல்

கனடா போன்ற நாடுகள் தமது மண்ணில் வாழ்ந்த பூர்வீக மக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்த நாடுகள். இவ்வாறான நாட்டின் அரசியல்வாதிகளிடம் எமது அரசியல் விடுதலையை தேடி நிற்கின்றோம் என்பது எமது சமூகத்தின் அவலம். இலங்கை வாழ் தமிழ் மக்களின் விடுதலை இந்த மண்ணில் வாழ்கின்ற ஏனைய தேசிய இனங்களுடன் சேர்த்து போராடி பெறப்பட வேண்டிய தொன்று.

இது ஒரு கடினமான அரசியல் பாதை. ஆனால் எமது சமூகத்தின் விடுதலையை எம்மை ஒடுக்குவோர் தங்கத்தட்டில் தரப்போவதில்லை. பொறுப்பற்ற அரசியலை உங்கள் மனங்களை ஆற்றுப்படுத்துவதற்காகவம் உங்கள் உடைந்த கனவுகளுக்கு பதில் தேடுவதற்காகவும் செய்ய வேண்டாம்.

இலங்கையில் வாழ்கின்ற நாம் இன்னும் ஒரு பேரினவாத சமூகத்தின் மத்தியில் இருந்துகொண்டு இனவாதத்திற்கெதிரான போராட்டத்தையும் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களையும் தொடர்ந்தும் செய்து கொண்டே வருகின்றோம். இங்கே எமது போராட்டங்களை நசுக்க பேரினவாதிகளுக்கு தீனி போடும் அரசியலை செய்வதற்கு முன்னால் எம்முடன் பேசி யுக்திகளை ஒன்றாக முடிந்தால் முன்னெடுங்கள்