கன்னடர் – தமிழர் இனப்பிரச்சினை குறித்து அதிகம் அறியப் படாத உண்மைகள்

காவிரி நதி ஊற்றெடுக்கும் குடகு மலைப் பகுதி, துளு மொழி பேசும் குடகு இனத்தவரின் பாரம்பரிய பூமி. காவேரி அவர்களது குல தெய்வம்! குடகு மக்கள், இன்று அழிந்து வரும் திராவிட மொழியொன்றை (துளு?) பேசுகின்றனர். அது தமிழ், மலையாளம், கன்னடம் மூன்றுக்கும் மூல மொழியாக இருக்கலாம். பெங்களூர் நகரம் ஒரு தமிழ் மன்னனால் ஸ்தாபிக்கப் பட்டது. சோழர்கள் காலத்தில் இருந்து பெங்களூரில் தமிழர்களின் வரலாறு தொடங்குகின்றது. (அனேகமாக அந்தத் தமிழர்கள் பிற்காலத்தில் கன்னடர்களாக மாறி இருக்கலாம்.)

தற்கால இனப்பிரச்சினை, ஆங்கிலேய காலனியாட்சிக் காலத்தில் தொடங்கி இருக்கலாம். திப்பு சுல்த்தானின் ராஜ்ஜியத்தை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், தொழிற்துறையில் தமிழ்த் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினார்கள்.

மெட்ராஸ் காலனியில் இருந்து படையெடுத்து வந்த ஆங்கிலேயர்கள், தமிழர்களை “நம்பிக்கைக்குரிய மக்களாக” நடத்தினார்கள். இது ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சி. இன்றைக்கும் பெங்களூரில் மூன்றில் ஒரு பங்கினர் தமிழர்கள். மைசூர் உட்பட தமிழ்நாட்டின் எல்லையோர பிரதேசம் முழுவதும் இருப்பது தமிழர்களின் ஊர்கள்.

ஒரு காலத்தில் மெட்ராஸ் மாகாணத்தின் கீழ் இருந்த நேரம் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப் பட்டதும் மொழித் தேசியவாதம் தீவிரமடைந்தது. ஏற்கனவே துளு, கொங்கனி சிறுபான்மை மொழிச் சமூகங்கள் ஒடுக்கப் பட்டு விட்டன.

கன்னட தேசியவாதிகளும் தம் சமூகத்தில் உள்ள சாதிய, வர்க்க வேறுபாடுகளை மூடி மறைப்பவர்கள் தான். தமிழர்கள் மட்டுமே எதிரிகள் என்று பிரச்சாரம் செய்வதன் மூலம், கன்னட அடித்தட்டு மக்களையும், கன்னட தலித்துக்களையும் அடியாட்களாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

கன்னட மயமாக்கல் காரணமாக சில தமிழர்கள் தாமாகவே கன்னடர்களாக மாறி விட்டனர். தமிழ் தெரிந்தாலும் வேண்டுமென்றே கன்னடம் பேசுவோரும் உண்டு.

கர்நாடாகா வாழ் தமிழர்கள், முடிந்த அளவிற்கு தமது தனித்துவத்தை மறைத்துக் கொள்கின்றனர். பெரும்பாலான தமிழர்கள், சரளமாக கன்னடம் பேசுகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சிகள், கர்நாடகாவிலும் கிளை பரப்பியுள்ளன. அவை “திராவிடக் கட்சிகள்” அல்ல. மாறாக, சுத்தமான தமிழ்க் கட்சிகள். “திராவிடக்” கட்சிகளில் ஒரு கன்னடன் கூட உறுப்பினராக இல்லை.

சன் தொலைக்காட்சி நிறுவனம், உதயா டிவி என்ற பெயரில் கன்னட சேனல் வைத்துள்ளது. சன் டிவி தமிழ்நாட்டில் தமிழ்தேசியத்திற்கு ஆதரவாகப் பேசும். ஆனால், உதயா டிவி கர்நாடகாவில் கன்னட தேசியத்திற்கு ஆதரவாகப் பேசும். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். முதலாளிகளின் பைகளிலும் பணம் நிறையும். அதற்கு உதாரணம் இந்த சன் டிவி நிறுவனம்.

( 2000, 2003 ம் ஆண்டுகளில், கர்நாடகா மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து, அங்கு வாழும் தமிழர்களை சந்தித்து பேசியதில் நான் திரட்டிய தகவல்கள்.)

(Kalai Marx)